29.06.2013.

மணலாறில் தமிழர் நிலங்களில் புதிய சிங்கள கிராமம்;-

malnalaruமுல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு  பிரதேசத்தில் இலங்கைப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, புதிய சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை, ரணவிரு பியச சம்பத்நுவர என்ற மாதிரிக் கிராமத்தை இலங்கைப் படையினருக்கு உருவாக்குவதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் 80 பேர்ச் காணித் துண்டுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் 52 இலங்கைப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டுதலில், வன்னிப் படைகளின் தலைமையகத்தினால், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அரசாங்கத்திற்கு அடிபணியப் போவதில்லை- அமைச்சர் வாசு-

vasuஅரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணியப் போவதில்லை எனவும், அரசாங்கத்தை சிக்கிலில் மாட்டிவிட போவதுமில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுக்கான கூட்டத்தில், மாகாண சபை அதிகாரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருக்குமாறு வழங்கிய ஆலோசனை தனக்கு பொருந்தாது எனவும் அமைச்சர் வாசுதேவ குறிப்பிட்டுள்ளார். மாகாண சபை உள்ளிட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக நான் கொண்டுள்ள நிலைப்பாட்டை விட்டு கொடுக்க எனக்கு எந்த எண்ணமும் இல்லை. நான் கொண்டுள்ள நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்க போகிறேன். நான் சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்புடையவர் அல்ல. நான் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் என அமைச்சர் வாசு மேலும் கூறியுள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை-

kks1990ம் ஆண்டு மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் காலங்களில் சர்வதேச ரீதியில் டென்டர்களை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன மற்றும் சீமெந்து நிறுவன தலைவர் சட்டத்தரணி என்.எஸ்.எம்.சம்சுதீன் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் அளவை நூற்றுக்கு 25 வீதம் குறைக்க முடியும் என சட்டத்தரணி என்.எஸ்.எம்.சம்சுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செல்லும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்-

இலங்கை செல்லும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட பயண அறிவுறுத்தல்களின்படி, இலங்கையில் அதிக குற்றச் செயல்களும், வெளிநாட்டவர்களுக்கு எதிரான நேரடி பாலியல் துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு பயணிக்கும் வெளிநாட்டு பயணிகளின் கடவுச்சீட்டு விபரங்கள் உள்ளிட்ட விபரங்களை அவர்கள் தங்கியுள்ள இடங்களின் உரிமையாளர் அல்லது முகாமையாளர்களுக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இலங்கையில் தங்களின் விபரங்களை உரிய இடங்களுக்கு வழங்கி, தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

சர்வதேச சுயாதீன விசாரணைகள் அவசியம்-நவநீதம்பிள்ளை-

navneethamஇலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான மேற்படி விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சி-

வவுனியா வடக்கு பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சி நெறிகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, வவுனியா வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. உதவி பிரதேச செயலர் வி.ஆயகுலன் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியில், பொது அரச ஊழியர்கள் அனர்த்தத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், அனர்த்தத்தில் மக்களுக்கு பணியாற்றுவது, அனர்த்தத்தின் போது முதலுதவிகள் வழங்குதல் போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேலைத்திட்டங்கள், அதற்கு பொதுமக்களினால் வழங்கப்பட வேண்டிய பங்கபளிப்புகள் என்பன தொடர்பிலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

வாக்காளர் பதிவு ஜூலை 05ம் திகதிவரை நீடிப்பு-

election boxவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாக்காளர்களாக பதிவு செய்யப்படாதவர்கள், வாக்குப் பட்டியலில் தங்களை பதிவுசெய்து கொள்வதற்கான காலம் ஜுலை 5ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே வாக்காளர் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த பட்டியல் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் செயலகங்களில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதனை பரிசீலனை செய்து, பதிவில் இல்லாதவர்கள் மீள்பதிவு விண்ணப்பங்களை நிரப்பி, மாவட்ட தேர்தல்கள் காரியாலயங்களில் சமர்ப்பிக்குமாறு, தேர்தல்கள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது உள்வாங்கப்பட்டுள்ள வாக்காளர்கள் தொடர்பில் முறைபாடுகள் காணப்படின், அதற்கான முறைபாடுகளை ஜுலை 5ம் திகதிக்கு முன்னர் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸியிலிருந்து மேலுமொரு தொகுதியினர் நாடு கடத்தல்

australienஅவுஸ்திரேலியாவில் இருந்து மேலும் ஒருதொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இலங்கையர்கள் 22பேர் நேற்றையதினம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ப்ரென்டன் ஓ கோனர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி அவுஸ்திரேலியாவில் இருந்து இதுவரை காலமும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 270ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 1057 பேர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றது.

பிரிட்டன் பிணைப் பணத்தை நீக்க வேண்டுமென கோரிக்கை-uk

பிரிட்டன் இலங்கையை ஆபத்தான நாடாகப் பட்டியலிட்டமையால் இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு செல்வோர் பிணைப் பணமாக 3000 பவுண்ஸ் செலுத்த வேண்டுமென்பதை நீக்குமாறு அரசாங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பான விவாதமொன்றை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம பிரிட்டனுக்கான உயர்ஸ்தானிகருடன் இன்றையதினம் நடத்தவுள்ளார். இதன்போது இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தமது கோரிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. இலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்வோர் பிணைப்பணமாக 3000 பவுண்டுகள் செலுத்த வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து விலகுவதில்லை-முஸ்லிம் காங்கிரஸ்-

Hekeem13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள போதும், அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதன் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை சீரமைக்க முற்படும் அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. எனினும் இதற்கான எதிர்ப்பினை அரசாங்கத்தில் இருந்து கொண்டே வெளிப்படுத்துவதாகவும், அதனை காரணமாக வைத்து அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு-slmc&tna

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையக காரியாலயமானதாருஸ்ஸலாத்தில் இடம்பெற்றுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இதன்போது தற்போதய அரசியல் சூழ்நிலை, சிறுபான்மை சமூகங்கள் அதிகாரப் பகிர்வின் உச்ச பயன்களை அடையக்கூடிய வழிமுறைகள், 13ஆவது சட்ட திருத்தத்திற்கு ஏதிராக எழுந்துள்ள சவால்கள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இராணுவப் பயிற்சிகளை அதிகரிப்பது குறித்து பாகிஸ்தான் இலங்கை ஆராய்வு-sri paki

பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அஷ்பாக் பாவெஸ் கயானிக்கும் இலங்கை இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் ஆராயப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்குகள், இரு நாடுகளிலுமுள்ள உயர்கல்வி வாய்ப்புகள், இலங்கையின் இராணுவ பயிற்சி திட்டமான கொமொறன் (நீர்க்காகம்) தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது. இருநாட்டு இராணுவ அதிகாரிகளிடையே இருபக்க புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணம் என்பவற்றை மேலும் விரிவாக்குவதுபற்றி இதன்போது முக்கியமாக பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பரிந்துரைகளை

அமுல்செய்யும் விடயத்திற்கு பொதுநலவாய நாடுகள் ஆதரவு-chogm

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்க பொதுநலவாய நாடுகள் தயாராக இருப்பதாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். லண்டன் பினான்சல் ரைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய  செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கு பின்னரான நடவடிக்கைகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். சர்வதேசம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்ப்படுத்தப்படவில்லை என்ற வாத பிரதிவாதங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொதுநலவாய நாடுகள், அதனை உரிய முறையில் அமுல்படுத்த சகல ஒத்துழைப்புகளையும் இலங்கைக்கு வழங்க தயாராக உள்ளது என பொதுநலவாய நாடுகளின் செயலர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13 தொடர்பான வாக்கெடுப்பை புறக்கணிக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்Hekeem

13ம் திருத்தச் சட்டத்தின்மீதான திருத்தங்கள் குறித்து மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் வாக்களிப்பில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காதென தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தத சட்டம்மீதான திருத்தங்கள் குறித்த பிரேரணை வடமேல் மாகாண சபையில் முன்வைக்கப்பட்டபோது, கட்சியின் அறிவிப்புக்கு புறம்பாக வாக்களித்த இரு உறுப்பினர்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. ஏற்கனவே 13ம் திருத்தச் சட்டத்தின்மீதான திருத்தங்களை எதிர்ப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில் குறித்த பிரேரணை கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் வாக்கெடுப்புக்கு வரும்போது முஸ்லிம் காங்கிரஸ் வாக்கெடுப்பை புறக்கணிக்குமென தெரியவருகிறது.

யாழில் சட்ட ஒழுங்கு விதிகளை அமுல்செய்வதில் பொலீசார் அசமந்தம்-jaffna police

யாழ். குடாநாட்டில் சட்ட ஒழுங்கு விதிகளை பொலீசார் உரிய முறையில் இன்னமும் அமுல்படுத்தவில்லையெனவும் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றபோது சட்டத்தின்கீழ் தண்டிக்க முடியாதென பொலீசார் தெரிவிக்கின்றமையால் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு சபைக் கூட்டத்திலேயே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்.குடாவில் சட்டவிரோத மணல் அகழ்வு தடையின்றி நடைபெற்று வருகிறது. இவற்றைத் தடுக்க பொலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. கிராமங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிற நேரங்களில் பொலீசார் சம்பவ இடங்களுக்கு செல்வதில்லையென பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் என்றும் சிவில் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

படகுகளில் வருவோரை திருப்பி அனுப்புவது இந்தோனேசிய உறவை பாதிக்கும்-ஆஸி-australien

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வருபவர்களை திருப்பி அனுப்புவதற்கு பழைமைவாத எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனையானது இந்தோனேசியாவுடனான பிணக்கைத் தூண்டிவிடும் அபாயமுள்ளதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் கெவின்ருத் இன்று தெரிவித்துள்ளார். அவர் பிரதமராக மீள நியமிக்கப்பட்டதற்கு பின்னர் இடம்பெற்ற தனது முதல் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் படகுகளில் வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் விவகாரம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்தோனேசிய ஜனாதிபதி சுஸிலோ பம்பாங்யதோயனோவை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கெவின்ருத் தெரிவித்துள்ளார்.