சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண புளொட் தலைவர், பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சந்திப்பு- dplf

Tissaசிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்களை புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச் செயலர் திரு.சிறீதரன் ஆகியோர்  வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் சிறிதரன் ஆகியோர், பாராளுமன்ற சிரேஷ்ட அமைச்சரும், தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் மிகத் தீவிரமாக செயற்பட்டு வருபவருமான அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் தெரிவுக்குழுவில் நியமிக்கப்படவில்லையென்பதை சுட்டிக்காட்டி, தாங்கள் போன்றவர்கள் தெரிவுக்குழுவில் இல்லாததனால் தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என்பதையும் எடுத்துக் கூறினார்கள்.
எப்படியிருந்தாலும் தானும், தனது கட்சியும் (இலங்கை சமசமாஜக் கட்சி) மற்றும் இடதுசாரி கட்சிகளும் மிக தீவிரமாக இந்த 13ஆவது திருத்தத்தில் மாற்றம் கொண்டு வருவதை தடுப்பது சம்பந்தமாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதிலும் தொடர்ந்தும் தீவிரமாக உழைப்பதாகவும், சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையினை எதிர்க்க வேண்டுமெனவும் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் கூறியுள்ளார். அத்துடன் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை 13ஆவது திருத்தம் தொடர்பாக இங்கிருக்கின்ற இடதுசாரி கட்சிகள் மற்றும் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு எதிராக இயங்கக்கூடியவர்கள், மேலும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று அக்கறைப்படுகின்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றவர்களைச் சந்தித்து உரையாடி வருவதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் சிரேஸ்ட அமைச்சர் டியூ குணசேகர அவர்களையும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் திரு.சிறீதரன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்பு-

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் சனிக்கிழமை மாலை 5மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், பிரசன்னா, புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் பத்மநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மேற்படி தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக விரிவான ஓர் அறிக்கையினை விரைவில் வெளியிடுவதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அடுத்தவாரம் கூடிப் பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

30.06.2013.
23ஆவது தியாகிகள் தினம், கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்பு-

eprlfஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் (ஈ.பி.ஆர்.எவ்.எவ்) அனுஷ்டிக்கப்பட்டுவரும் தியாகிகள் தின நிகழ்வின் 23ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்றுமுற்பகல் 10.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முன்னாள் செயலாளர் நாயகம் அமரர் க.பத்மநாபா அவர்களின் உருவப் படத்திற்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. இதன்படி வீ.ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சர்வேஸ்வரன், குலசேகரம் என பலரும் அஞ்சலி உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து சுமார் 125 வறிய மாணவர்களுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் இலங்கை வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் தலா ஒரு லட்சம் ரூபாய் வழக்குவதன் முதற்கட்ட உதவியாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 25,000 ரூபாய் வீதம் வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி உதவிகள் பிரான்ஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளாலும், ஜேர்மன் நாட்டின் ரி.ஆர்.ரி வானொலி நிறுவனம் ஊடாக சேகரிக்கப்பட்டும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச, நகர சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பெருந்தொகையானோர் பங்கேற்றிருந்தனர்.