Header image alt text

வடக்கில் வேட்புமனு தாக்கல்-

வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல அரசியல் கட்சிகள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. அமைச்சர்களாளன சுசில் பிரேமஜயந்த, டக்ளஸ் தேவானந்தா, றிசாட் பதியுதீன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் ஆகியோர் முறையே யாழ். மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். யாழ். மாவட்டத்திற்கான வேட்புமனுவை மாவட்ட செயலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி இன்று தாக்கல் செய்துள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி மற்றும் முதன்மை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். யாழ். மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை மக்கள் விடுதலை முன்னணியும் இன்று தாக்கல் செய்துள்ளது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். சிறீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸும் மன்னார் மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. அக்கட்சியின் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் பொருளாளர் முஹமட் அஸ்லம் ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை, வடமேல் மாகாண சபைக்கு புத்தளத்தில் போட்டியிடும் மூன்று கட்சிகளின் வேட்பு மனுக்கள் இன்றுகாலை புத்தளம் மாவட்ட செயலரிடம் கையளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் என்பனவே கையளிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளுக்கு அரச வாகனங்கள் பயன்படுத்த தடை-

மூன்று மாகாண சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை 01ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. சகல சுயேச்சைக் குழுக்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தும் காலம் இன்றுடன் முடிவடைகின்றது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், அரச உடைமைகளையோ அல்லது அரச வாகனங்களையோ இத்தேர்தல்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சுதந்திரமான முறையில் இத்தேர்தல்களை நடாத்தவேண்டும். பொலிஸ் அதிகாரத்தினை கட்டாயம் பயன்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது. அதுபோல் மக்கள் தமது வாக்குப் பதிவுகளை சரிவர பயன்படுத்தவேண்டும். சுயாதீனமானதும் மக்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் மக்கள் தமது பொறுப்பினை உணர்ந்து செயற்படுவது அவசியமானது. அதைப்போன்று தேர்தல்களின்போது மக்களுக்கு ஏதும் அசௌகரியங்களோ, தேர்தல் மோசடிகளோ? நடைபெறுமாயின் உடனடியாக தேர்தல்கள் திணைக்களத்திடம் முறையிடவேண்டும். அதற்கான நடவடிக்கைகளினை தேர்தல்கள் திணைக்களம் மேற்கொள்ளும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 70 பேர் கைது-

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்ட 70பேரை கடற்படையினர் இன்றையதினம் கைது செய்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். படகின்மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுகொண்டிருந்தபோது கடற்படையினர் இவர்களை கைதுசெய்து திருகோணமலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு நகரில் இதனோடு தொடர்புபட்ட மூன்று வான் மற்றும் ஒரு கார் ஆகியவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இவை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களாக இருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்-

untitledவட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இதனைக் கூறியுள்ளார். மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும். அந்த உரிமை எவ்விதத்திலும் மறுக்கப்படக்கூடாது. இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களில் மக்களின் அடையாள அட்டை, வாக்களிக்கும் அட்டை என்பன தேர்தலுக்கு முதல்நாள் ஆயிரக்கணக்கில் பறிக்கப்பட்டன. இத்தேர்தல் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் சர்வதேச சமூகத்தின் அழுத்தமே எனவும் அவர் கூறியுள்ளார்.

சகல இன மக்களும் சமத்துவமாக வாழ்வதையே இந்தியா விரும்புகிறது:

சல்மான் குர்ஷித்- இலங்கையில் வாழ்ந்து வரும் அனைத்து இன மக்களுக்குமான சம அளவிலான புலமொன்றை இந்தியா விரும்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பெங்களுரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒத்துணர்வு நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தினை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியும் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டை எதிர்த்தும் நேற்று முன்தினம் கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தேசியவாதக் குழுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தினால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று நடத்தப்பட்டிருக்கும் நிலையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புதிய இராணுவத்தளபதியிடம் கடமைகள் கையளிப்பு-

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவிடம் இராணுவ தளபதிக்கான கடமைகள் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்தின் 19 ஆவது இராணுவத்தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுத்தளபதி பதவியிலிருந்து இன்றைய தினத்துடன் ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் வைத்து அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுவ தளபதிக்கான கடமைகளை தயா ரத்னாயக்கவிடம் ஒப்படைத்ததுடன் இராணுவ தளபதியின் உத்தியோபூர்வமான வாளையும் கையளித்துள்ளார்.

65 இந்திய மீனவர்கள் 9 படகுகளுடன் கைது-

சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 65 இந்திய மீனவர்கள் 9 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். ஊர்காவற்துறை வட கடலில் வைத்து 5 படகுகளுடன் 34 மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் 31 இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து 4 படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் ஊர்காவற்துறை மற்றும் திருகோணமலை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். பல்கலைக மாணவர்களை வெளியேற்றத் தீர்மானம்-

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் விடுதிகளிலிருந்தும் வெளியேற்ற பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இன்று குறித்த வருட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரியரட்ணம் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரிப்பு-

வட மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரித்துள்ளது. வங்கி ஊழியர்களே போலி நாணயத்தாள்களை இனங்காண்பதில் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, வடக்கில் போலி நாணயத்தாள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வங்கி ஊழியர்கள் சிலர் கைது  செய்யப்பட்டிருந்தனர். அதற்கு மேலதிகமாக போலி நாணயத்தாள் அச்சிட்ட ஒருவர் யாழ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து பணம் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் போலி நாணயத்தாளை இனங்காண்பது தொடர்பான செயலமர்வு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியக் கிளையினால் நடத்தப்படவுள்ளது  வடமாகாணத்திலுள்ள சகல வங்கிகள், நிதி நிறுவனங்கள், லீசிங் நிறுவனங்கள் என்பவற்றின் ஊழியர்களுக்கே இந்தச் செயலமர்வு நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இச் செயலமர்வில் போலி நாணயத்தாளை இனங்காண்பது மற்றும் நாணயத்தாள் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் விளக்கவுரைகள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை காலை 9மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்தச் செயலமர்வு இடம்பெறவுள்ளது.

 

தேவை ஏற்படின் விக்னேஸ்வரனுடன் பேசத் தயார்-ஜனாதிபதி-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனுடன் தேவை ஏற்படின் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் விக்னேஸ்வரனது கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் இன்று அலரி மாளிகையில் ஜனாதிபதியிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதில்லை. அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரே மாகாண சபைகளுக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார். அவ்வாறாகவே இம்முறை தேர்தலும் இடம்பெறவுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இலங்கை விஜயம்-

பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் எதிர்வரும் வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். இவ்வாறு அவரது விஜயம் அமையுமாயின் வத்திக்கான் ஆன்மீக தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மூன்றாவது பயணம் இதுவாகும். 1977ஆம் ஆண்டு பாப்பரசர் நான்காம் போல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அதேவேளை, 1995ஆம் ஆண்டு பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் இந்நிலையில் எதிர்வரும் வருடம் பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கை மற்றும் பிலிப்பீன்சுக்கான விஜயத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நவநீதம்பிள்ளையை சிவில் பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு-

இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன உட்பட 50 சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். இச்சந்திப்புக்கான அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பில் நவசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவிக்கையில், நவநீதம்பிள்ளையை எமது கட்சி உட்பட மனித உரிமை அமைப்புக்கள் ஊடக அமைப்புக்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகளென 50 அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கின்றோம். இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பிவைத்தோம். சந்திப்பதற்கான அனுமதி எமக்கு கிடைத்துள்ளது. இச்சந்திப்பின்போது விசேடமாக எதுவிதமான குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முறைப்பாட்டை முன்வைக்கப்படவுள்ளதோடு வட பகுதி மக்களின் காணிகள் பறிக்கப்படுவது, இராணுவ பிரசன்னம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தெரியப்படுத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வலியுறுத்துவதோடு இலங்கை அரசுக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.

யாழில் போட்டியிடும் ஆளும்கட்சி வேட்பாளர்கள்-

நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்லில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் யாழ். மாவட்டத்தில் போட்யிடுகின்றன. இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 ஆசனங்களும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்களும், லங்கா சமசமாஜ கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அகியவற்றுக்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளன. இதில் முதன்மை வேட்பாளராக ஈ.பி.டி.பியின் சின்னத்துரை தவராஜா போட்டியிடவுள்ளர். இதன்படி ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி) சார்பில் சி.தவராஜா, க.கமலேந்திரன், ஐ.சிறீரங்கேஸ்வரன், எஸ்.பாலகிருஸ்ணன், ஏ.சூசைமுத்து, சுந்தரம் டிலகலால், அ.அகஸ்டின், கோ.றுஷாங்கன், எஸ்.கணேசன் உள்ளிட்டோரும், சுதந்திர கட்சி சார்பில் இ.அங்கஜன், மு.றெமிடியஸ், எஸ்.பொன்னம்பலம், எஸ்.அகிலதாஸ், அ.சுபியான், சர்வானந்தன்;, எஸ்.கதிரவேல் ஆகியோரும், லங்கா சமசமஜாக் கட்சி சார்பில் ந.தமிழழகனும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எம்.எம். சீராஸூம் ஆளும்கட்சி சார்பில் வட மாகாணசபையில் போட்டியிடுகின்றனர்.

நாளைய இளைஞர் அமைப்பு வேட்பு மனுத்தாக்கல்-

வடமாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு நாளைய இளைஞர் அமைப்பு வேட்பு மனுவினை இன்று தாக்கல் செய்துள்ளது. நாளைய இளைஞர் அமைப்பு சுயேட்சைக் குழுவாகவே போட்டியிடவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியினரே யாழ். மாவட்டத்தில்; இளைஞர், யுவுதிகள் சார்பாக போட்டியிடவுள்ளனர். சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளரான அன்டனி ரங்கதுஷார யாழ். அரசாங்க அதிபரிடம் சுயேட்சைக் குழுவிற்கான வேட்பு மனுவை கையளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்-

dவட மாகாணசபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்றுபகல் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இன்றுபகல் 12.21அளவில் யாழ். கச்சேரியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முல்லைத்தீவு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் விபரங்கள்,

யாழ். மாவட்டம்-

சி.வி.விக்னேஸ்வரன் (முதன்மை வேட்பாளர்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,  பாஷையூர் – இ.ஆனல்ட்,  சாவகச்சேரி – சட்டத்தரணி ச.சயந்தன்,  வடமராட்சி – பொறியிலாளர் சிவயோகன்,  யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்,  யாழ். மாநகர சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி,  யாழ். மாநகர சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம்,  புலிகள் அமைப்பைச் சேர்ந்த எழிலனின் மனைவி ஆனந்தி,  தமிழரசுக் கட்சி இளைஞர் அணி யாழ். மாவட்டத் தலைவர் பா.கஜதீபன்,  காரைநகர் – தம்பிராசா,  கரவெட்டி – தர்மலிங்கம்,  வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்,  வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம்,  சுரேஷ் பிரேமசந்திரன் (பா.உ)அவர்களின் சகோதரர் சர்வேஸ்வரன்,  சூழலியாலாளர் பொ.ஐங்கரநேசன்,  வட்டுக்கோட்டை- குகதாசன்,  வடமராட்சி- ச.சுகிர்தன்

வவுனியா மாவட்டம்

எம்.எம்.ரதன்,  செந்தில்நாதன் மயூரன்,  எஸ்.தியாகராஜா,  எம்.பி.நடராஜா,  எஸ்.ரவி,  ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி),  க..சந்திரகுலசிங்கம (மோகன்),  ஆர்.இந்திரராஜா,  வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம்,  மன்னார் மாவட்டம்,  அந்தோணி சூசைரட்ணம்,  சிறிமோ சாய்வா,  சு.சிவகரன்,  ஞானசீலன் குணசீலன்,  இருதயநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன்,  திரிசோத்திரம் நிமலசேகரம்,  ஜோசப் ஆனந்த குரூஸ்,  பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன்,  அய்யும் அஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டம்-

ரி.ரவிகரன் எம்.அன்ரனி ஜெயநாதன்,  கந்தையா சிவநேசன் (பவன்),  ஜு.கனகசுந்தரசுவாமி,  வைத்தியர் சிவமோகன்,  கமலேஸ்வரன்,  திருமதி குணசீலன் மேரிகமலா,  உடையார் கட்டு ஆண்டிஐயா புவனேஸ்வரன் 

கிளிநொச்சி மாவட்டம்-

வீ.ஆனந்தசங்கரி,

ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்கள் தம்பிராசா குருகுலராஜா,                          பசுபதி அரியரத்தினம்,  சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை,  திருலோகமூர்த்தி,  பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம்,      திருமதி மினுபானந்தகுமாரி கேதுரட்ணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பு-

2தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று நண்பகல் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றினை நடத்தியுள்ளனர். தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் காரியாலயத்தில் இன்றுபிற்பகல் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், என். சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் பங்குபற்றியிருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடலும் அங்கு இடம்பெற்று வருகின்றது.

தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் உண்ணாவிரதம்-

யாழில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான தங்க முகுந்தன் முன்னாள் மாநகர சபை மேயர் செல்லன் கந்தையா, செல்லையா விஜிதரன் ஆகியோரே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை மறந்து எல்லோரும் ஒன்றிணைந்து இத்தேர்தலில் அப்பாவி மக்களை மட்டும் கருத்தில் கொண்டு போட்டியிட வேண்டும். கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என வலியுறுத்தியே இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலiயில் மேற்படி உண்ணாவிரதப் பேராட்டத்தை உடன் நிறுத்த வேண்டுமென தான் அவர்களிடம் தெரிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான சத்தியாக்கிரகம்- இந்திய –

இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு தேசிய இயக்கங்களின் ஒன்றியம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. இன்றுமுற்பகல் 9 மணிமுதல் இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டம் காரணமாக காலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த பண்டார கருத்து வெளியிடுகையில், 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை துரிதமாக ரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோன்று இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவினால் விடுக்கப்படும் அழுத்தங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

13ஆவது திருத்ததில் மாற்றத்திற்கு இடமில்லை – இந்தியா-

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜயராமிடம் உறுதியளித்துள்ளார். இந்திய கூட்டணி அரசாங்கத்தின் மத்திய அமைச்சர் வீ.நாரயணசாமி ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அதிக தாக்கம் செலுத்தும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம், அதிகார பரவலாக்கல் மற்றும் மீளமைப்பு தொடர்பிலேயே இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழர் பிரச்சினையி;ல் இந்தியாவின் மத்தியஸ்தத்திலும் மாற்றங்கள் இடம்பெறாது என்றும் பிரதமர் கூறியுள்ளார். சேது சமுத்தி கால்வாய் திட்டம் சூழலை மாசுபடுத்தாது என்ற காரணத்தினால் அதனை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என்று வி.நாராயணசாமி ஊடகவியலாளர்களிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தங்கம் கடத்தியவர்கள் சுங்கத்தினரால் கைது-

சென்னை சுங்க அதிகாரிகள் 2.5 கிலோகிராம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்த 14 பேரை கைது செய்துள்ளனர். இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்திக் கொண்டு வௌ;வேறு வானூர்திகளில் பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தஞ்சாவூர், திருச்சி, மற்றும் மதுரை போன்ற பகுதிகளிலிருந்து சுற்றுலா வீசாக்களில் கொழும்பு, மலேசிய, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஷிராணி பண்டாரநாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு-

2010, 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் சட்டத்திற்கமைய முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தனது சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடவில்லை என குற்றஞ்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 23 முறைப்பாடுகள் பதிவு-

இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 23 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் வன்முறை முறைப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆயினும் சிறிய அளவிலான வன்முறைகளே அதிகளவில் பதிவாகியுள்ளதாக அலுவலகத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார். இவற்றில் வட மாகாணத்தில் மூன்று வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் மத்திய மாகாணத்தில் 10 சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனைத் தவிர குருநாகல் மற்றும் புத்தளத்தில் முறையே 3 மற்றும் 2  வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வடமேல் மாகாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் வன்முறை முறைப்பாட்டு அலுவலகத்தின் இணைப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

அதிகாரப் பகிர்வின்மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்;-ஜப்பானிய தூதுவர்-

நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வின் மூலமே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜப்பான் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ளவதற்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுத்து ஹோபோ தெரிவித்துள்ளார். அதன்படி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அதிகாரப் பகிர்வு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்களில் மேலும் ஆர்வம் காட்டும் என ஜப்பான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டம் அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, எனினும் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

யாழ் மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல் நிறைவு-

வட மாகாணசபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றுபகல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் யாழ் கச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு திரும்பியபோது எடுக்கப்பட்ட படங்கள் இத்துடன் இணைக்கப்படுகின்றன.

agagabaad

யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்-

வட மாகாணசபைத் தேர்தலுக்காக யாழ் மாவட்டத்தில் தேசியக் கூட்டமைப்பு இன்றுபகல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு யாழ். கச்சேரிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன

c

de

b

Sithar ploteபுளொட் சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு, யாழ்ப்பாண மாவட்டம் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டம் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), வவுனியா மாவட்டம் வவுனியா நகரசபை முன்னைநாள் தலைவர் திரு. ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) மற்றும் வவுனியா நகரசபை முன்னைநாள் உபதலைவர் திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), மன்னார் மாவட்டம் திரு. இருதயராஜா சார்ள்ஸ் ஆகியோர் வட மாகாணசபைத் தேர்தலில் புளொட் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களாவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனு கையொப்பமிடும் நடவடிக்கைகள்-

2013-07-28 18.35.54130315_fcz_logo_marder_1

வட மாகாணசபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்புமனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிடும் நடவடிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டக் காரியாலயத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் பிரசன்னமாகி வேட்புமனு பூர்த்திசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  

News

Posted by plotenewseditor on 28 July 2013
Posted in செய்திகள் 

ஹலால் சான்றிதழை முழுமையாக நீக்காவிடின் போராட்டம்-

பொதுபல சேனா- ஹலால் இலட்சனைகள் பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இன்னும் விற்பனை நிலையங்களில் உள்ளன. எனவே அவற்றை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லாவிடின் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும் என பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் தாம் நிச்சயமாக அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும். அவர் குறிப்பிட்டுள்ளார். ஹலால் சான்றிழை நிறுத்த வேண்டும் என கோரி நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் விளைவாக பேச்சுவார்த்தைகளும் பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டதுடன் அதனை நீக்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மீனவர்கள் குழு இலங்கைக்கு விஜயம்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அழைப்பின் கீழ் தமிழக மீனவர்கள் 19பேரடங்கிய குழுவினர் இலங்கை வரவுள்ளனர். ஏற்கனவே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்த போது, இக்குழுவினர் அவரை சந்தித்திருந்தனர். இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டே அவர்கள் இலங்கை வருகின்றனர். இந்த விஜயத்தின்போது, மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களின் மீனவர் சமாயங்களுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதேவேளை தமிழக மீனவர்களால் முன்வைக்கப்படுகின்ற எந்த தீர்வினையும் தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, வடமாகாணத்தின் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த காரணத்துக்காகவும், இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க ஏற்பாடு-

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது இலங்கை விஜயத்தை தொடர்ந்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார் என்ற தெரிவிக்கப்படுகிறது. அவரது பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் 24வது மனித உரிமைகள் மாநாடு செப்டம்பர் மாதம் 9ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. எனினும் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதுடன், ஆகஸ்ட் 31ம்திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதியில் அவர் இலங்கையின் அரசியல், அபிவிருத்தி, மீளமைப்பு, மனித உரிமை விடயங்கள் குறித்த முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை ஒன்றை தயார்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை 24வது மனித உரிமைகள் மாநாட்டில் அவரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மரணதண்டனை கைதிகளுக்கு நிவாரணம்-

மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ள மற்றும் ஆயுட்கால சிறை தண்டனையை பெற்றுள்ள கைதிகளுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வற்கு குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் சிறைச்சாலைகள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களிள் பங்களிப்புடன் இக்குழு நியமிக்கப்பட உள்ளதாக, அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மரண தண்டனைக்கு உட்பட்டுள்ள 350யிற்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இந் நிலையில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக இது தொடர்பான அறிக்கை நீதியமைச்சுக்கு அனுப்பப்பட்டு, இந்த குழு அமைப்பது தொடர்பில் ஆராயப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்ரசிறி கஜதீர ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

கைதான இலங்கையர்களுக்கு நாளைவரை விளக்கமறியல்-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்தபோது சர்வதேச கடற்பரப்பில்  நிர்க்கதியான நிலையில் காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த குழுவினர் காலி மேலதிக நீதவான் குனேந்திர குமார முனசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நாளைய தினம்வரையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினரில் 46 ஆண்களும் 10 பெண்களும் 17 சிறார்களும் அடங்குவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கடற்படை வழங்கிய தகவலுக்கு அமைய வர்த்தக கப்பலொன்றின் ஊடாக இக் குழுவினர் சுமார் 290 கடல் மைல் தொலைவில் காப்பாற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுக கடலில் நகர வளாகம்-

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலை நிரப்பி ‘நகர வளாகம்’ ஒன்றை உருவாக்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 230 ஹெட்ரேயரில் நகரத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. சீன நிறுவனத்திற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் இடையிலேயே இவ்ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 17,920 கோடி ரூபா செலவிலேயே இந்த நகர வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. புதிய கொழும்பு தெற்கு துறைமுகத்திற்கு அடுத்ததாக உள்ள 230 ஹெக்ரேயர் நிலப்பரப்பரப்பை துறைமுக அதிகாரசபை மீளப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக துறைமுக அதிகார சபை தலைவர் பிரியாத் பண்டு விக்ரம தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகவியலாளர்மீது தாக்குதல்-

யாழில் ஊடகவியலாளர் ஓருவர்மீது வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுயாதீன ஊடகவியலாளரான சி.மயூதரன் (வயது26) என்ற ஊடகவியலாளர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவரை காப்பாற்ற முயன்ற நண்பர் சி.சிவதாஸ் (வயது28) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை 5.30 மணியளவில் திருநெல்வேலி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி கலாசாலை வீதி பகுதியில் குறித்த ஊடகவியலாளர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வெள்ளைவானில் வந்த இனம்தெரியாத நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் உடன் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன், வாகனத்தையும் அதில் வந்தவர்களையும் மடக்கிப் பிடித்து வாகனத்தின் சாவியையும் எடுத்துக் கொண்டனர். அதற்குள் அந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகநபர்கள் ஐவரையும் கைதுசெய்துள்ளனர.

தேர்தல் சட்டங்களை மீறி சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்-

வட மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படவுள்ள இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறி சுமார் 500 சிங்கள குடும்பங்களை பயிர்ச்செய்கைக்கான காணி உட்பட வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான காணியையும் வட மாகாணத்தில் வழங்குவதாக சிங்கள ஊடகச் செய்தியொன்று தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிரந்தரமாக குடியிருக்காத சிங்களக் குடும்பங்களை இவ்வாறு பதவிய, பராக்கிரமபுர, ஹொரவப்பொத்தான பிரதேசங்களின் எல்லைகளில் குடியேற்றி வருவதாக அதில் கூறப்பட்டு;ள்ளது. அங்கு இராணுவத்தின் சிங்க படையணியால் இக்குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளும் வீடுகளும் நிர்மாணித்துக் கொள்வதற்கு தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கப்படுவதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மன்னாரில் வெலிக்கடைப் படுகொலை நினைவுதினம் அனுஷ்டிப்பு-

images 41983இல் நடைபெற்ற வெலிக்கடைப் படுகொலைகளை நினைவுகூர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தலைமையில் மன்னார் கலாச்சார மண்டபத்தில் இன்றுமாலை நினைவுக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், என்.சிறீகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கருணாகரன்(ஜனா), பிரசன்னா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உiராற்றினார்கள், இந்நிகழ்வில் பெருந்தொகையான மக்களும் பங்கேற்றிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் 94,367பேர் வாக்காளர்களாக பதிவு-

வவுனியா மாவட்டத்தில் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்படடுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் என். கருணாநிதி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள வாக்காளர்களுடன் மேலதிகமாக பதிவுசெய்யப்பட உள்ளவர்களின் விபரங்களும் இத் தொகையுடன் சேர்க்கப்படவுள்ளது. இவர்கள் வாக்களிப்பதற்காக 81 வாக்களிப்பு நிலையங்கள் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளன. தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை கோரியதன் அடிப்படையில் அவை தற்போது கிடைத்த வண்ணமுள்ளன. அந்த வகையில் தபால்மூலமாக வாக்களிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். அதேபோல் இடம்பெயர்ந்தவர்கள் 2012ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்து வௌ;வேறு காரணங்களுக்காக வேறு மாவட்டங்களில் வசிக்கும் பட்சத்தில் இவர்கள் இடம்பெயர்ந்த பிரதேசத்திலேயே வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு விண்ணப்பிக்க வேண்டியவர்கள் நேரடியாக விண்ணப்பப் படிவங்களை தேர்தல் ஆணையாளருக்கோ அல்லது எம்மிடமோ சமர்ப்பிக்க முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் கைது-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்குரிய ஏற்பாடுகளுடன் பதுங்கியிருந்த மூவரைத் தாம் கைதுசெய்துளளதாக மட்டக்களப்பின் ஏறாவூர் பொலீசார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் சந்திவெளியில் வைத்து இவர்கள் மூவரும் நேற்றுமாலை கைதுசெய்யப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பொலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கிழக்கிலிருந்து கடல் மார்க்கமாக இவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு உத்தேசித்திருந்தனர் என்பது விசாரணையின்மூலம் தெரியவந்துள்ளதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடிவடிக்கைகளை தாம் மேற்கொண்டிருப்பதாக ஏறாவூர் பொலீசார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

படகு விபத்து: 4 பெண்களின் சடலங்கள் கரையொதுங்கல்-

இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய அகதிகள் படகில் பயணம் செய்த நான்கு பெண்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கியுள்ளன. இதனையடுத்து இந்த விபத்தில் மரணமானவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று படகு மூழ்கிய இடத்தில் இருந்து மேற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள உயுங் ஜென்ரெங் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்களும் அடங்கியுள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்டு உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 15 பேரில், 18 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளிட்ட ஆறு சிறுவர்களும், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அடங்கியுள்ளனர். சுமார் 204 பேருடன் சென்ற இந்த படகு மூழ்கியதில் 15பேர் பலியாகியுள்ளனர். மேலும் 189 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

திருமலை கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகியது-நிசாம்-

கிழக்கு மாகாணத்தில் ஏனைய இரு மாவட்டங்களை விடவும் திருகோணமலை மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இதற்கு அதிபர்கள் போரைக் காரணம்காட்டி தப்பித்துக் கொள்ள முயல்வதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். போர் எம்மை விட்டுப் போனாலும் போரை நாம் காரணம் காட்டி கொண்டிருப்பது நாம் சமூகத்துக்குச் செய்து கொண்டிருக்கின்ற துரோகமாகும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் தெரிவித்துள்ளார். 2010ஆம், 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜி.சீ.ஈ உயர்தர மற்றும் சாதாரணதரப் பரீட்சையில் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக நடத்தப்பட்ட கூட்டம் திருகோணமலை சென். ஜோசப் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போரதீவு குளத்திலிருந்து மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு-

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி போரதீவு குளத்திலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று முற்பகல எலும்புக்கூட்டை கண்டெடுத்ததாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது அந்த பிரதேசத்தில் காணாமல்போனதாகக் கூறப்படும் வயோதிபர் ஒருவரின் எலும்புக்கூடாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 இலங்கை அகதிகள் தப்பியோட்டம்-

இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட அறுவர் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவி;க்கப்படுகின்றது. குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்ற நீதிபதியுடன் சந்திப்பு-

ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி ஹிசாசி ஒவாடாவை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், அமைச்சர் பீரிஸ், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிக்கு விளக்கமளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த சந்திப்பின்போது இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக மேலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பொதுநலவாய கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த பவ்ரல் வலியுறுத்தல்-

பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென பவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பரில் வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத் தேர்தலின்போது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டுமன்றி பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர், தேர்தல் ஆணையாளரிடம் கோரியுள்ளார்.