தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் சந்திப்பு-
வவுனியாவின் கணேசபுரம் மணிப்புரம் மற்றும் சமயபுரம் பகுதிகளின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், அங்கத்தவர்கள் ஆகியோருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று சமயபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்றுமாலை 3மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன், சிவநேசன் பவன், பத்மநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், பிரதேச மக்களின் அன்றாட பிரச்சினைகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது. முக்கியமாக ஐம்பது அறுபது வருடங்களாக இப்பகுதிகளில் வாழந்துவரும் மக்கள் பலருக்கும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமை, வீதி அபிவிருத்திப் பணிகள் என்பன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
மாகாண அதிகாரங்களைக் குறைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு-அமைச்சர் வாசுதேவ-
மாகாணசபையின் அதிகாரங்களை இல்லாதொழிக்கும் எந்த ஒரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பதற்கு தாம் தயாரில்லை என அமைச்சர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். 13ஆவது அரசியல் அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவர அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவை இரு மாகாணசபைகள் இணைவது மற்றும் மத்திய அரசின் யோசனைகளுக்கு குறைந்த மாகாணசபைகளின் அனுமதி போதுமானது என்ற யோசனைகளாகும். இந்நிலையில் இரு மாகாணசபைகள் இணைவதை தடுப்பதற்கான யோசனைக்கு நாம் ஆதரவளிக்கின்ற போதும் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைக்கும் எந்த அரசாங்கத்திலும் நாம் அங்கம் வகிக்கப்போவதில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்திய கொள்கையில் மாற்றம் அவசியம்- நாராயணசாமி-
இலங்கை தொடர்பிலான கொள்கையில் சரியான தீர்மானத்தை இந்தியா மேற்கொள்ளும் தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசியல் ஆய்வாளர் எம் கே நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பயற்சிப்பெற்று வந்த இலங்கை படையினர் அங்கிருந்து வெளியேறியமையானது, இலங்கை புதுடில்லி, தமிழகத்துக்கு இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எந்த ஒரு சுயமரியாதை கொண்ட நாடும் தமது நாட்டு வீரர்கள் மற்றும் நாட்டுக்கு பயிற்சிக்காக சென்று உள்ளுர் அரசியலுக்காக திருப்பியனுப்பப்படுவதை ஏற்றுக்கொள்ளமாட்டாது. தமிழகத்தின் ஆளும் மற்றும்; எதிர்க்கட்சிகள் தரப்பிலுள்ள இலங்கை எதிர்ப்புக்குழுக்கள் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலைமை தொடருமானால் அது இலங்கையில் இந்திய எதிர்ப்புக்கே வழியை ஏற்படுத்தும் என்று நாராயணசாமி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை-
தொடருந்து பாதையில் இடம்பெறும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து அமைச்சும், தொடரூந்து திணைக்களமும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹாநாமஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கடவையில் இடம்பெறும் விபத்துக்களை தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலிறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழு தயாரித்த அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீபா சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதிமோசடி வழக்கில் சாட்சியமளிக்க நிதியமைச்சின் செயலருக்கு அழைப்பு-
பெறுமதி சேர்க்கப்பட்ட வரியில் மோசடி தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்கு நிதியமைச்சின் செயலாளர் பி பி ஜெயசுந்தரவை முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது சுமார் 357 மில்லியன் ரூபாய்கள் மோசடி வழக்கில் சாட்சியமளிக்க வருமாறு இறைவரி திணைக்கள ஆணையாளருக்கும் கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடம்பெயர்ந்தோருக்காக இந்திய அரசின் உதவியுடன் வடக்கில் 1000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் அமைக்கும் திட்டத்தின் விசேட செயலாளர் பி.எஸ்.ராகவன் இத்தகவலை சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது வெளியிட்டுள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் உயர் மட்டக்குழு பார்வையிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வடக்குகிழக்கில் இடம்பெயர்ந்தோருக்கான 43ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் அல்லது திருத்தியமைக்கும் பணிகள் கிரமமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடமைப்பு திட்டங்களின்போது தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், பயனாளிகள் தமிழர்களாக இருப்பது உறுதிசெய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு 19ஆம் திகதி கூடவுள்ளது-அமைச்சர் நிமல்-
அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் 19ஆம் திகதி கூடவுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஏதிர்க்கட்சிகள் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை புறக்கணித்துள்ள நிலையில் குழு 19ஆம் திகதி கூடவுள்ளது. இக்குழுவில் தற்போது அரச கட்சியை சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களில் மாற்றம் உட்பட்ட விடயங்களை ஆராயும் பொருட்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
13ஐ முற்றாக ஒழிப்பதே இலக்கு-ஹெல உறுமய-
13ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை முற்றாக ஒழிப்பது என்பதே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் தமது கருப்பொருளாகும் என ஐhதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் இதனை நேற்று மாத்தறையில் வைத்து குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 13வது அரசியலமைப்பு சீர்திருத்தை நீக்கவேண்டும் என்பதே எமது கட்சியின் கருப்பொருளாக இருக்கும். ஜனாதிபதியாக யார் போட்டியிட்டாலும் நாங்கள் இதனையே வலியுறுத்துவோம். 13வது அரசியல் அமைப்பு நாட்டுக்கு உகந்தது அல்ல என்பதே எமது கருத்தாகும் என அத்துரலியே ரத்னதேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி-
எதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேராது தனித்துப் போட்டியிடத் தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன்அலி தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசுடன் முரண்பட்டுக் கொண்டுள்ள பங்காளிக் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹசன்அலி மாகாணசபை தேர்தல் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவோர் அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டில்லை. நிபந்தனைகளை ஏற்படுத்திக்கொள்ளவுமில்லை. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தனித்துவமான கட்சி. எனவே, மாகாண சபைத் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.