தியாகிகள் தின நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உரை-

Sithar ploteஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் அனுஷ்டிக்கப்படும் 23ஆவது தியாகிகள் தின நிகழ்வு கடந்த 30ஆம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், கடந்த 1977ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக தமிழீழத்திற்கு வாக்களித்திருந்தபோதிலும், 1981ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவுடன் ஏற்பட்ட ஓர் உடன்பாட்டிற்கமைய மாவட்ட சபைகள் கொண்டுவரப்பட்டன. அதற்கான தேர்தல் நடத்தப்பட்டபோது சுமுகமான ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தமிழ் மக்கள் மாவட்ட சபைக்கான தேர்தலில் வாக்களித்தார்கள். இந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்ற போதிலும் அதிகமான அதிகாரங்களைக் கொண்டிராவிட்டாலும்கூட மாவட்ட சபைகளைச் சரிவர இயங்குவதற்கு அரசாங்கம் அன்று அனுமதிக்கவில்லை. அதனால் அது கேலிக்கூத்தாகியது. அதை ஏற்று தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூடடணி தலைவர்கள் ஏமாற்றப்பட்டார்கள். அன்று தலைவர் அமிர்தலிங்கம் இந்த மாவட்ட சபையில் போட்டியிடுவதற்கு எடுத்த துணிகரமான தீர்மானத்தைப் போலவே, ஏனைய கட்சிகளும், இயக்கங்களும் புறந்தள்ளிய வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் செயலாளர் நாயகம் பத்மநாபா துணிவுடன் முன்வந்தார். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவான இந்த மாகாண சபை முறைமை இனப்பிரச்சினைக்குத் தகுந்த தீர்வாக மாட்டாது என்பதை எமது தலைவர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். அதனை ஏற்றுக்கொண்ட அவர், இதனை ஓர் ஆரம்பமாக ஏற்றுக்கொண்டு செயற்படுமாறும், வேண்டிய உதவிகளைத் தாங்கள் செய்வதாகவும் உறுதியளித்திருந்தார். இலங்கை-இந்திய ஒப்பந்தத்;திற்கமைய இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஒன்றரை இலட்சம் இந்திய அமைதிகாக்கும் படையினர் நிலை நிறுத்தப்பட்டிருந்தார்கள். அத்தகைய ஓர் இராணுவ அழுத்தம் இருந்தபோதிலும் அன்றைய அரசாங்கம் மாகாண சபையை சரிவர இயங்குவதற்கு அனுமதிக்கவில்லை. இருந்தபோதிலும், மாகாண சபையின் ஊடகத்தான் அதிகாரபூர்வமாக சட்டரீதியாகத் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. இந்த மாகாண சபைதான், குறைந்தளவாக இருந்தாலும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் படிப்படியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பலருக்கும் புரிய வைத்திருந்தது. இன்று வடக்கில் வட மாகாணசபைக்கான தேர்;தலை உப்புச்சப்பற்ற வகையில் நடத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு அமைய அங்கு மக்கள் ஒற்றுமையாக ஓர் அணியின்கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கின்றார்கள் என்பதைத் தேர்தலின் மூலம்; காட்டியிருக்கின்றார்கள். இப்போது வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டால், தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் போவதில்லை எனக் கூறுகின்ற அரசாங்கத்திற்குத் தமிழ் மக்கள் ஆதரவளிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் பலரும் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதன் ஊடாகத்தான் ஓர் அரசியல் தீர்வு ஏற்பட முடியும் என்பதை சர்வதேச சமூகத்திற்கு இன்றைய நெருக்கடியான ஓர் அரசியல் சூழலில் எடுத்துக்காட்ட வேண்டிய பொறுப்பு வட மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களைச் சார்ந்திருக்கின்றது. அந்தப் பொறுப்பை அவர்கள் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிரச்சினைகள் இருப்பதை எல்லோரும் அறிவார்கள். இருந்த போதிலும் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலின் மூலம் அரசியல் தீர்வைக் கொடுக்க விரும்பாத அரசாங்கத்தை மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்ட வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கின்றது. இதனைச் சரியான முறையில் நிறைவேற்றுவதன் ஊடாகத்தான் தமிழ் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் உயிர்களைத் தியாகம் செய்த பத்மநாபா சிறீசபாரத்தினரம், உமா மகேஸ்வரன் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்குச் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாகவும் கைமாறாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.