இந்தியப் பிரதமரின் செய்தியுடன் சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்-

manmogansinghஇந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் செய்தியுடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன். எதிர்வரும் 07ம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார். அவர் ஜுலை 9ஆம் திகதி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள, 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. 13ஆவது அரசியல் அமைப்பு தொடர்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் விசேட செய்தியொன்றையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இலங்கை ஜனாதிபதிக்கு கொண்டுவரவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. சிவ்சங்கர் மேனனின் இலங்கைக்கான விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

அமைச்சர் பஷில் ராஜபக்ஷ – சல்மான் குர்ஷித் டெல்லியில் சந்திப்பு-

pasil13ஆவது திருத்தச்சட்டம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 04ஆம் திகதி புதுடில்லி செல்லவுள்ள அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை நேரில் சந்தித்து 13ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச திருத்தங்கள் சம்பந்தமான விடயங்கள் உள்ளிட்ட அரசியல் நிலைவரம் குறித்து எடுத்துரைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல்கள் முடிவடையும் வரை 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்களை கொண்டுவருவதனை நிறுத்துமாறு இந்தியா கொழும்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளதென அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிகாரங்களை குறைத்தால் அரசிலிருந்து விலகுவேன்-அமைச்சர்

vaasudevaஅரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படல் வேண்டுமென்று தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மாகாண சபைக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டால் அரசிலிருந்து விலகுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கோ இன்றேல் அதிலிருக்கின்ற அதிகாரங்களை குறைப்பதற்கோ எடுக்கப்படும் முயற்சிகளை தான் முழுயாக எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவற்றைக் கூறியுள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொள்ளாமல் 13ஆவது திருத்தச் சட்டமூலம் மாற்றியமைக்கப்பட்டு மாகாணசபை முறைமை ஒழிக்கப்படுமாயின் இந்த அரசிலிருந்து நான் விலகிவிடுவேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தூதுவரிடம் வெளியுறவு அமைச்சு விளக்கம் கோரல்-

us & sriஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசன், இலங்கை வெளியுறவு அமைச்சினால் விளக்கம் கோரலுக்காக அழைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள பயண எச்சரிக்கை தொடர்பில் விளக்கம் கோரலுக்காகவே மிச்செல் ஜே சிசன் அழைக்கப்பட்டுள்ளார். இதன்போது, மிச்செல் ஜே சிசனிடம், குறித்த எச்சரிக்கை விடுத்தமை தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பயணம் செய்யும் அமெரிக்கர்கள் உட்பட்ட வெளிநாட்டவர்கள் வாய்மூலமாக, உடல்ரீதியாக பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே, வெளிநாட்டவர்கள் குறிப்பாக பெண்கள், இலங்கையின் ஏனைய பயணிகளுடன் பஸ்களில் பயணம் செய்யும்போது கவனமாகப் பயணிக்க வேண்டுமென அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
புலிகளுக்கு  எதிரான தடைஇந்தியாவில் நீடிப்பு-

Ltte & indiaபுலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக கணிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு வரை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தடையுத்தரவினை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தடையுத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வை.கோபாலசுவாமி கருத்து தெரிவித்துள்ளார். புலிகள் சார்பாக வழக்கறிஞரான அவரே முன்னிலையாகி சில கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கான நியாயபூர்வ இறையாண்மையான தீர்வை பெறுவதற்காகவே புலிகள் முயற்சித்ததாக அவர் வாதிட்டார். அவர்களின்  நடவடிக்கைகள்  எந்தவிதத்திலும் இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்த அவர், ஆகவே புலிகளை தொடர்ந்தும் தடைசெய்த இயக்கமாக கணிப்பது சட்டவிரோதமானது என கூறியுள்ளார். எனினும் புலிகள் இயக்கம்மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

 வெலிக்கடையிலுள்ள இந்தியக் கைதிகளை இடமாற்ற தீர்மானம்-

velikadaகொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியக் கைதிகள் அந்நாட்டு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர், 11தமிழக கைதிகளே இவ்வாறு இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்த தமிழகப் பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது. இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கைதிகளை பரிமாறிக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த தமிழக கைதிகளுக்கான தண்டனை குறைக்கப்படாது என்ற போதிலும் தமிழக சிறைகளில் தண்டனை அனுபவி;த்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களினால் அவர்களை பார்வையிட சந்தர்ப்பம் கிட்டும் எனக் கூறப்படுகின்றது.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தம்-

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயத்துடன் தொடர்புடைய ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை இதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார். அரச கரும மொழிகள் தொடர்பான கொள்கைகளை சிறப்பாகப் பேணும் வகையில் இத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இக் கொள்கைகளை கிராமிய மட்டங்களுக்கு கொண்டுசெல்லும் வகையில் திருத்தங்கள் அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக ஒட்டுக்கேட்கும் உபகரணம் கண்டுபிடிப்பு-

teleகையடக்க தொலைபேசிகள், வீடு மற்றும் அலுவலங்கங்களில் பயன்படுத்தப்படும் வயர் இணைப்பு தொலைபேசிகளின் உரையாடல்களை இரகசியமான முறையில்  ஒட்டுக்கேட்கும் உபகரணங்கள், கணனி பாகங்கள் என்ற போர்வையில், இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சில இலங்கை தூதுவர்களின் தொலைபேசிகள் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளால் ஒட்டுக்கேட்கப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே இந்த உபகரணங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள விடயம் வெளியாகியுள்ளது. ரொவின் பக் என்ற தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கும் நடவடிக்கைகள் வெளிநாடுகளில் செயற்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் புலனாய்வுச் சேவையின் வெளிநாட்டு விசாரணை சட்டத்தின்கீழ் மாத்திரமே இதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. கையடக்க தொலைபேசி பயன்படுத்தப்படாத நிலையில், அதன் பட்டரி சூடேறுதல், தொலைபேசி அடிக்கடி வெளிச்சத்தை வெளியிடுதல், பீப் என்ற சத்தம் ஏற்படுத்தல் என்பவற்றின் மூலம் தொலைபேசி ஒன்று பிறிதொரு தரப்பினரால்   ஒட்டுக்கேட்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் என இலங்கை புலனாய்வுப்பிரிவின் தகவல்கள்மூலம் தெரியவருகின்றது.