பிரபாகரன் தலைமையில் யுத்தகளத்தில் நின்றவர்கள் இன்று மகிந்த ராஜபக்ச தலைமையில் தேர்தல் களத்தில்

KP,-Thamilini,-Daya-Masterஎதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் நியமனங்களுக்கென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதி சேகரிப்பாளரும், ஆயுதக் கொள்வனவாளருமான ‘கே.பி’ என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணித் தலைவி ‘தமிழினி’ என அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் அதே அமைப்பின் முன்னாள் பேச்சாளரும், பிரச்சார அணித் தலைவருமான ‘தயா மாஸ்டர்’ என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மூவரும் விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளதாக ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கையில், வடக்கு, வட – மேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கென நியமனம் கோரி விண்ணப்பித்தவர்களை கட்சியின் வேட்பாளர் நியமனக் குழு நேர்முகத் தேர்வு நடத்தும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரும் அதன் முன்னிலையில் சமூகமளிக்குமாறு வேண்டப்படுவரென தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இதுபற்றி தொடர்ந்தும் கூறுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் மூவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கையின் எந்தவொரு சட்ட நீதிமன்றத்திலும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, வட மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான அவர்களின் விண்ணப்பங்களை நாம் எதற்காக கவனத்திற்கு எடுக்கக் கூடாதென்பது என்பது குறித்து எனக்கு விளங்கவில்லை’ என விபரித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் அவர்களுக்கு வேட்பாளர் நியமனங்கள் வழங்கப்படும் முன்னர் முதலில் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது அதன் பங்காளிக் கட்சியொன்றினதோ உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேவேளையில் வட மாகாண சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கை விளக்கத்தை தயாரிப்பதில் தயா மாஸ்டர் உதவப் போவதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தமிழ் மக்களால் எதிர்நோக்கப்பட்டு வரும் பிரச்சினைகளை இனங்கண்டுள்ளதாகவும், இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்புப் பணிகளில் தானும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் மற்றும் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய ஆளுங்கட்சி உறுப்பினர்களும் மும்மூரமாக ஈடுபட்டு வருவதாகவும் தயா மாஸ்டர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தத்தை பாதுகாக்க கையொப்ப வேட்டை-

13th-am13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாதுகாப்பதோடு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் அதிகாரத்தை பகிர்ந்து ஒன்றிணைவோம் என்னும் தொனிப்பொருளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து வேட்டையை நடத்தியுள்ளன. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐ.தே.கட்சி எம்.பிக்களான மங்கள சமரவீர, எரான் விக்கிரமரட்ண, கொழும்பு மாநகர மேயர் முஸம்மில், மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண, சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி, புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திரா மற்றும் தொழிற்சங்க ஒன்றியங்கள் பல இணைந்து 13ஐ பாதுகாப்பதற்கான கையெழுத்து வேட்டை நிகழ்வில் பங்கேற்றிருந்தன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோருக்கிடையில் இன்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு செங்கம்பள வரவேற்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினைத் தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகர் .சிங்ஹா தனது நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

13ஆவது திருத்தம் தொடர்பில் மனுத் தாக்கல்

law help13அவது அரசியல் அமைப்பு, சீர்திருத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை மத்திய மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட முறை தொடர்பில், எதிர்க்கட்சி இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. மாகாண சபையின் சட்ட விதிமுறைகளுக்கு முரணான வகையில், சட்டவிரோதமாகவும், நீதியற்ற முறையிலும், எதிர்க்கட்சிகளின் விவாதமின்றி இப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை மீண்டும் சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீள் பரிசீலனைக்காக எதிர்வரும் 11ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 இங்கிலாந்தில் மூன்று இலங்கையர்கள் கைது-

ukமூன்று இலங்கைப் பணியாளர்கள் இங்கிலாந்தின் கெனிட் நகரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத பணியாளர்களாக இருந்த குற்றத்திற்காகவே இவர்கள் கைதுசெய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா வீசாவில் அங்கு சென்ற இவர்கள், எரிப்பெருள் நிரப்புநிலையம் ஒன்றில் வேலைசெய்து வந்தமை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பிரித்தானிய பொலீசார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவிலில் துப்பாக்கி தயாரிக்குமிடம் கண்டுபிடிப்பு-

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கிவந்த சட்டவிரோத துப்பாக்கி தயாரிக்கும் இடமொன்றை கண்டறிந்து பொலீசார் சுற்றிவளைத்துள்ளனர். திருக்கோவில் பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு தயாரிக்கப்பட்டிருந்த 3 துப்பாக்கிகள், மூன்று ரவைகள், 10 கிராம் வெடிமருந்து மற்றும் 10 ஈயத்தகடு என்பவற்றையும் பொலீசார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்செய்ய பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையர்கள்மீது சவூதி பொலீசார் தாக்குதல்-

இலங்கையிலிருந்து பணியாளர்களாக சென்ற சிலரை சவூதி அரேபிய பொலீசார் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தார் பாலத்திற்கு அடியில் தங்கியிருந்தவர்களே தாக்கப்பட்டுள்ளனர். சில இலங்கையர்கள் இது குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு முறைப்பாடும் செய்துள்ளனர். சவூதி அரசின் தற்காலிக பொதுமன்னிப்பு காலம் நிறைவடைவதாக தெரிவித்தே இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வீசா அனுமதிக்காலம் நிறைவடைந்த நிலையில், மேலும் பல இலங்கையர்கள் ஒலாயா தடுப்பு முகாமிலும், அதேனா பாலத்திற்கு கீழேயும் தங்கியுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் இது குறித்து அவர்கள் முறைப்பாடு செய்தபோதிலும் அவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை-

ukஇலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கு பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்வோர், வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்குப் பொறுப்பான ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக்குழுக்கள் இலங்கையில் செயற்படுவதை மனத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் அரிதாகவே இடம்பெறுகின்ற போதிலும், அங்கு சிறார்கள் உள்ளிட்டவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. எனவே குறிப்பாக பெண்கள், தனியாகவோ சிறிய குழுவாகவோ பயணம் செய்யும்போது கூடிய கவனம் எடுக்கவேண்டும். பிரித்தானியர்களுக்கு மட்டும் ஆபத்து உள்ளது என பரிந்துரைப்பதற்கு சான்றுகள் இல்லாதபோதிலும், குறிப்பிட்ட குற்றக்குழுக்கள் சுற்றுலாப் பிரதேசங்களில் அதிகம் நடமாடுகின்றனர் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.