சுவிசில் வீரமக்கள்தின நிகழ்வை முன்னிட்டு பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலர் தோழர் சிறீதரன்(சுகு) அவர்களின் வீரமக்கள் தின நினைவுக் கருத்து-sugu

மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் மரணித்தவர்களை நினைவு கூர்வது சீரிய பண்பாடு. அது இன்றைய எமது வரலாற்றுச் சூழலில் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களையெல்லாம் மற்நது விடுவோம். அந்தச் சுவடே தேவையில்லை என்று ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது. அது மக்களின் இன்ப துன்பங்களில் பங்குபெறாத எந்த தியாகமும் செய்யாத கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்மக்கள் பேரழிவுகளையும் அவலங்களையும் சந்தித்தபோது சம்பந்தமில்லாமல் இருந்துவிட்டு இப்போது தமிழ் மக்கள்மீது அதிகாரம் செலுத்த புறப்பட்டிருக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பஞ்சமும் நோயுமாக வாழ, இந்த சௌகரியமான கூட்டம் இவர்களை ஆளப் புறப்பட்டிருக்கிறது. இதுபற்றி மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமிது. இதனை இந்த வீரமக்களின் தினத்திலே குறித்ததுரைக்கிறோம்.
சமூகத்தின் விடியலுக்காக என்றே ஒவ்வொரு போராளியும் வீட்டிலிருந்து புறப்பட்டிருக்கிறார்கள். தவறான வழிகளில் சிக்குண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உயிர்த்தியாகம் நிகழ்ந்திருக்கிறது. இந்த தியாகங்கள் வியர்த்தமாவதை, இழிவுபடுத்தப்படுவதை தார்மீக உணாச்சி உள்ள எவரும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. எமது சாதாரண குடும்பங்களின் பிள்ளைகளின் தியாகங்களை கனவான்களிடம் விட்டுவிட முடியாது.
இலங்கையில் தமிழர்கள் பேரழிவுகளை அனுபவித்திருந்தாலும் அனைத்து சமூகங்களும் ஏதோ ஓரு அளவில் அழிவுகளைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் தேசிய இன சுதந்திரம், ஜனநாயகம், சமூக சமத்துவத்திற்காக போராடியவர்களை நாம் மறந்து விடமுடியாது.
இன்று 30 வருடம் பாரிய யுத்தம் நடந்ததென்பதே மறக்கப்பட்டு வருகிறது. மாற்றங்கள் எதுவும் சமூகத்தில் பெரிதாக நிகழ்ந்து விடவில்லை. கிராம சேவகர் அலுவலகம், பிரதேச செயலகம், மாவட்டசெயலகம், பொலிஸ் நிலையம், வைத்தியசாலை எந்த இடங்களிலும் சாதாரண மனிதனுக்கு மரியாதை எதுவும் கிடையாது. அதிகார மமதையே மேலோங்கிக் காணப்டுகிறது.
ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம் .சாதாரண மக்களுடனான சாதாரண வார்த்தையாடல்களில் கூட வன்முறை விரவிக்கிடக்கிறது. அதிகார வர்க்கத்தின் செயற்பாடுகளை தட்டிக் கேட்கும் அரசியல், கலாச்சார இயக்கம் தேவைப்படுகிறது.
மனித தன்மையற்ற அதிகார கட்டமைப்பில் பாரிய சீர்திருத்தங்கள்- தகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.
லஞ்சம், ஊழல், முகஸ்துதி, சலுகை என்பன நிர்வாணமாகவே உலாவித் திரிகின்றன.
30 ஆண்டுகள் போராடிய சமூகத்திற்கு கிடைத்த பரிசு இதுதான் என்றால் நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். போராட்டத்தில் தார்மிவலு-அறம் என்பன எந்தளவுக்கு இருந்தன என்பது பற்றி நாம் மீளாய்வு செய்ய வேண்டும். இந்த வரலாற்று படிப்பினை மிக மிக முக்கியமானது.  ஏனெனில் நம்பிக்கை வறட்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. கண்ணியமான சுயமரியாதையுடன் கூடிய வாழ்வொன்று எம் மக்களுக்கு கிட்ட வேண்டும். சுதந்திரமான வாழ்வை நோக்கியே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் திசை தடுமாறி எங்கெங்கோ சென்று முன்னர் இருந்ததைவிட மோசமான வாழ்நிலை.
 
அதிகாரப்பரவலாக்கல் என்ற விடயம் 13 ஆவதை தாண்டி செல்லவில்லை. அந்த 13 ஆவதில் மிச்ச மீதியாக உள்ளவற்றையும் பறித்தெடுக்கும் போக்குத் தான் அரச –பேரினவாத மட்டத்தில் செயற்படுத்தப்படுகிறது. இதற்கெதிராக தெற்கின் இடதுசாரி ஜனநாயக சத்திகள் குரல் எழுப்புகிறார்கள். 13 ஆவதில் உள்ள பொலிஸ்- நிலஅதிகாரங்கள் உள்ளவாறே இருக்க வேண்டும் அதில் மாற்றம் செய்யக் கூடாது என்று இவர்கள் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் தரப்பில் 13 ஆவதை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து பகிரங்கமாக வெளிப்படுத்தப்படவில்லை. இது அதிகாரப்பரவலாக்கல்  சம்பந்தமான இதய சுத்தியை கேள்விக்குள்ளாக்குகிறது. 13 ஆவதை பாதுகாப்பதற்கு தெற்கின் ஜனநாயக இடதுசாரி சத்திகளுடனும், மலையக முஸ்லீம் மக்களுடனும் இணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டும். எமது மக்களின் இருப்பு பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பதாக ஏதோ ஒரு அளவில் அதிகார பரவலாக்கல் அரசாங்க கட்டமைப்பு அமைய வேண்டும். அதிலிருந்து தான் தொடங்க வேண்டும் .
கிழக்கு மாகாணசiயின் அதிகாரங்களை உறுதிப்படுத்த பிரதானமாக தமிழ் முஸ்லீம் கட்சிகள் இணைந்து யதார்த்தமாக செயற்படவேண்டும். அதிகாரப்பரலாக்கல் கட்டமைப்பை பலப்படுத்தும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
வடக்கு மாகாண சபை அமைந்தாலும் அது பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். புத்திசாதுரியமும், பொறுமையும் தீர்க்க தரிசனமும் தேவைப்படுகிறது. தமிழ் ஜனநாயக சத்திகளின் ஐக்கியமும், முஸ்லீம், மலையக மக்களுடன் ஐக்கியமும், தென்னிலங்கை ஜனநாயக இடதுசாரிசத்திகளுடனும் ஐக்கியமும் இவ்வாறான முறையிலேயே நாம் இயங்க வேண்டும்.
தமிழ் மக்களின உரிமைகைளை வென்றெடுக்க சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை ஜனநாயகமானதும் – பல்லினங்களின் நாடாக மறுவதற்கும் இது அவசியம். இன்று அதற்கு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. நாம் தமிழ் மக்களுக்கும் இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் கண்ணியம்- சுயமரியாதையுடன் கூடிய வாழ்வை வென்றெடுக்க வேண்டும்.
மறைந்த போராளிகள் பொதுமக்களுக்கு செய்யும் அர்த்தமுள்ள அஞ்சலியாக அது இருக்கும்!!
தோழர் சுகு- சிறீதரன்
பத்மநாபா-ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

சென்னையிலுள்ள இலங்கை நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு– 

சென்னையில் இயங்கிவரும் இலங்கை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புத்தகாயாவிலுள்ள மகாபோதி விகாரையில் நேற்று வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவத்தை தொடர்ந்தே சென்னை நகரில் இயங்கிவரும் இலங்கைசார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 5,000 பொலீசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் எழும்பூரிலுள்ள மாஹாபோதி சமூகத்துக்கும் நுங்கப்பாக்கம் இலங்கை துணைத் தூதரகத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மாணவனை கண்டுபிடிக்க வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்-

வவுனியாவில் காணாமற்போனதாகக் கூறப்படும் மாணவன் ஒருவரை கண்டுபிடித்துத் தருமாறுகோரி இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற மாலைநேர வகுப்புக்கள் நிறைவடைந்தபின் வீடு திரும்பியபோது 17 வயதான மேற்படி மாணவன் காணாமற்போனதாக வவுனியா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவனின் உறவினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். காணாமல்போன மாணவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இம்மாணவனை கண்டுபிடிக்கவென விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலீசார் கூறுகின்றனர்.

பணிப்பெண் எனும் நாமம் மாற்றப்பட்டது-வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்-

சவுதி அரேபியாவில் தொழிலுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களின் தொழில் நாமத்தை மாற்றுவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய தற்போது வீட்டுப் பணிப்பெண் என அறிவிக்கப்படும் தொழில் நாமத்தை வீட்டு நிர்வாக உதவியாளர் என மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு அதிக சம்பளத்தை பெற்றுக்கொடுக்கவும் எண்ணியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார். தேசிய தொழில் நிபுணத்துவ தேர்வில் சித்தியடையும் பெண்கள் மாத்திரமே எதிர்காலத்தில் வீட்டு நிர்வாக உதவியாளர் சேவைக்காக சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம்-

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்றுபகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பலரையும் சந்தித்துப் பேசவுள்ளார். இன்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவை அவர் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. நாளைகாலை ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொள்ளும் சிவ்சங்கர் மேனன் இதன்போது 13ஆவது திருத்தம் தொடர்பில் விரிவாக பேசுவாரென கூறப்படுகின்றது.

சிவ்சங்கர் மேனன் திரும்பி செல்ல வேண்டுமென பொதுபலசேனா வலியுறுத்தல்-

புத்தகாயாமீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முஜாஹிதீன் அச்சுறுத்தியிருந்த நிலையில் அதனை கவனத்தில் எடுக்காமை கடுமையான குற்றமாகும் என்று பொதுபல சேனா இன்று தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இலங்கையின் பாதுகாப்பை இலங்கை பார்த்துக்கொள்ளமுடியும். எனவே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், கட்டுநாயக்கவிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி செல்லவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

வவுனியா, பாராதிபுரத்தில் இருந்து மக்களை வெளியேறுமாறு வன இலாக்கா அறிவுறுத்தல்-

வவுனியா, பாராதிபுரம் பிரதேசத்தில் பொதுமக்களுக்கும் வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் கடந்த 40 வருடங்களாக வசித்து வரும் மக்களை வன இலாகா திணைக்களம் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இதற்கு அப்பிரதேச மக்கள் தமது எதிர்ப்பத் தெரிவித்துள்ளனர். பாரதிபுரம் கிராம பிரதேசத்தில் வசித்துவரும் இம்மக்கள் கடந்த 40வருடங்களுக்கு முன்னதாக மலையகத்திலிருந்து சென்று இங்கு குடியேறியவர்கள். இவ்வாறாக 240 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்ற நிலையில் அவர்கள் குடியேறியுள்ள பிரதேசம் வன இலாக்காவுக்குரியது என கூறி அம்மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு வன இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாரதிபுரத்தில் 200 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு புத்தளத்தைச் சேர்ந்த 400 குடும்பங்களை குடியமர்த்தும் முயற்சி நடப்பதாக பிரதேசத் தகவல்கள் கூறுகின்றன.

தென்பகுதி மீனவர்களை வெளியேறுமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்றுகாலை 9 மணி தொடக்கம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் தென்பகுதி பெரும்பான்மையின மீனவர்களை உடன் வெளியேற்றக்கோரியே இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தென்பகுதி சிங்கள மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி காரணமாக மாத்தளன் தொடக்கம் கொக்கிளாய் வரையிலான கரையோரப் பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்து செல்வது குறித்து உரியவர்களிடம் முறைப்பாடு செய்தும் பலனெதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையைத் தொடர்ந்து தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 பொதுநலவாய கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை-

இலங்கையில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்களை முன்னிட்டு பொதுநலவாய அமைப்பிலிருந்து சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் ஆர்வமாக உள்ளது. இதுபற்றி தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம்காண நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். பொதுநலவாய அமைப்பில் இலங்கை அங்கம் வகிப்பதால், அந்த அமைப்பிலிருந்து கண்காணிப்பாளர்களை அழைப்பதில் சிக்கல் இருக்காது என தேர்தல்கள் திணைக்களம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். வேட்புமனுக்கள் தாக்கல்செய்த பின்னரே, தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளுடனும் சுயேட்சைக் குழுக்களுடனும் அது தொடர்பில் இணக்கம் காணமுடியும். எதிர்வரும் 15ம் திகதிமுதல் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பான முறைப்பாட்டு மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொதுநலவாய நாடுகள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை வரவழைக்க தேர்தல்கள் ஆணையாளரோ அரசாங்கமோ இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான அமைப்பான கபே தெரிவித்துள்ளது. கால தாமதமாகி சர்வதேச கண்காணிப்பாளர்கள் வருவது மோசடிகள் அதிகரிக்கவே வழிவகுக்கும் என்று அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிராணி திலகவர்த்தன பதில் பிரதம நீதியரசராக நியமனம்-

நீதியரசரான சிராணி திலகவர்த்தன பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வெளிநாடு சென்றுள்ளமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதியரசரான சிராணி திலகவர்த்தன இன்றையதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டதை அடுத்து, இரண்டாவது தடவையாக சிராணி திலகவர்த்தன பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.