Header image alt text

News

Posted by plotenewseditor on 10 July 2013
Posted in செய்திகள் 

 முன்னாள் பெண் புலி அங்கத்தவர் உயிரிழப்பு-

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். 23வயதான கந்தசாமி புவனேஷ்வரி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். கொழும்பு புறநகர், கல்கஸை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இவர், அங்கு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்துச் சம்பவம் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
 
மயிலிட்டியில் 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம்-

யாழ். வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் நாளை 50 குடும்பங்கள்  மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் மயிலிட்டி அக்காரயன் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 50 குடும்பங்கள் முதற்கட்டமாக நாளை மீளகுடியேற்றப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த மக்களளை  மீள்குடியேற்றும்  நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
நோர்வே தூதுவர் மட்டக்களப்பு விஜயம்-

இலங்கைக்கான நோர்வே தூதுவர் கேட்ஜோ லோசன் இன்றுகாலை மட்டக்களப்பு காத்தான்குடிக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். மாவட்ட நிலைமைகள் மற்றும்; முஸ்லிம்களின் நிலைமைகள் பற்றியும் இதன்போது அவர் கேட்டறிந்துள்ளதுடன் சமகால அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் நேற்று நோர்வே தூதுவர் லோசன் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்டவர்களை சந்தித்து கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், விதவைகள், பிள்ளைகளின் வாழ்வாதார தொழில்வாய்வாய்ப்புக்கள், கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
துப்பாக்கி ரவைகள் மீட்பு-

முல்லைத்தீவு, மாஞ்சோலைப் பிரதேசத்திலிருந்து 121 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலீசார் தெரிவித்துள்ளனர். மீராவோடை மாஞ்சோலை வீதியில் அமைந்துள்ள பாலத்திற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகள் தொடர்பாக பொதுமக்கள் பொலீசாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலீசார் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர். விசாரணைகளை வாழைச்சேனை பொலீசார் முன்னெடுத்துள்ளனர்.
 
முஸ்லிம் வர்த்தகர் கொலை விடயமாக குணவர்தனவின் மகன் கைது-

கொழும்பு, கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகரின் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவீந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும்நிலையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ் அத்தியட்சர் சானி அதனடிப்படையில் வாஸ் குணவர்தனவின் மகனான ரவிந்துவுக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடுவெல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ரவீந்து குணவர்தன இருந்தபோதே அவரை பொலீசார் கைது செய்துள்ளனர்.
 
இலங்கையின் மனித உரிமை நிலை குறித்து திருப்தியடைய முடியாது-பிரிட்டன்-

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தியடைய முடியாது என பிரிட்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டனின் குடிவரவு நீதிமன்றமொன்று இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. இலங்கை அரசினால் புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்பட்ட அகதிக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் முழுமையாக ஆராயப்பட வேண்டும். இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்படுவோர் துன்புறுத்தல்களுக்கு இலக்காகக் கூடிய அபாயங்களை எதிர்நோக்குகின்றனர். புலம்பெயர் தமிழர்களது குடும்ப உறுப்பினர்கள், புலி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
 
பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கை செல்வேன்-கெலும் மெக்ரே-

எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் நிகழ்வுகளை செய்தியாக்குவதற்காக இலங்கைக்கு தாம் செல்வதற்கு சிறிய வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்தின் தயாரிப்பாளர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார். இலங்கையின் சில தூதரக அதிகாரிகள் தாம் பொதுநலவாய மாநாட்டு நிகழ்வுக்கு வர முடியாது என்று கூறி வருகின்றனர். எனினும், ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் குறித்த மாநாட்டுக்கு வர தமக்கு உரிமை உள்ளது என மெக்ரே குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாட்டு செய்தி சேகரிப்புக்காக தாம் ஊடகவியல் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும்இது தொடர்பில் தாம் பிரித்தானிய வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் மெக்ரே தெரிவித்துள்ளார். தாம் ஊடகவியலாளர் என்ற வகையில் கடந்த 4 வருடங்களாக புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறிய அவர் இதனை ஊடகவியல் என்று கூறுவர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில் மெக்ரேக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது-

கடந்த மூன்று நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று பிற்பகலுடன் கைவிடப்பட்டுள்ளது. இந்த மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வாக்குறுதி வழங்கியதையடுத்து, மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அனுமதியின்றி முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றுதல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளைத் தடைசெய்தல், உள்ளுர் கரைவலை மீனவர்களுக்கு தொழிலுக்கான நிரந்தர அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த திங்கள்முதல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிவ்சங்கர் மேனன் சந்திப்பு-

india &tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்குமிடையிலான சந்திப்பொன்று 08.07.13 திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்துரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அங்கு நிலைகொண்டுள்ள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேர்தல் முடியும்வரை கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தில் அரசு மேற்கொண்டுவரும் அதிகாரக் குறைப்பு செயற்பாடுகளுக்கு இந்தியா இடமளிக்கக் கூடாது. ஏனெனில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விடயங்களை இலங்கை அரசு மாற்றியமைக்கிறது. இலங்கையில் பல மொழிகள் மற்றும் மதங்கள் உள்ளன என்பதை இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதேபோன்று வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீகம் என்பதையும் அவ்வொப்பந்தம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், தற்போது அவ்வொப்பந்தத்தில் காணக்கூடிய பல விடயங்களை மாற்றியமைக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது. உதாரணமாக வடக்கில் இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் அப்பகுதிகளில் இராணுவ மற்றும் சிங்கள குடியேற்றத்தை அரசு அதிகரித்து வருகின்றது. ஆகவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு இந்தியா இடமளிக்கக்கூடாது. ஏனெனில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கும் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் இவ்வொப்பந்தத்தின் பாதுகாவலனாக இந்தியா இருக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வட மாகாணசபைத் தேர்தல் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை அவதானத்தில் எடுத்துக்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன் தெரிவிக்கையில், 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. அண்மையில் இலங்கைப் பிரதிநிதியை புதுடில்லியில் வைத்து சந்தித்த பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். அதில் 13ஆவது திருத்தச சட்டம் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாக சுட்டிக்காட்டப்படிருந்தது. ஆகவே, அந்நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இதனையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இடம்பெறும் சந்திப்பின்போதும் எடுத்துக்கூறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News 09.07.13

Posted by plotenewseditor on 10 July 2013
Posted in செய்திகள் 

புத்தகாயா தாக்குதலுக்கு எதிராக சத்தியாக்கிரகம்-

பீஹார் புத்தகாயா மகாபோதி விகாரை வளாகத்தில், இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 13ஆம் திகதியன்று சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த சத்தியாகிரகப் போராட்டம் புத்தகாயா வளாகத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பில், நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது உரையாற்றிய, தேசிய சங்க சம்மேளன செயலாளர் தொம்பகொட சாராணந்த தேரர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தல் சர்வதேச தேர்தலாக மாறியுள்ளது-ஐ.தே.கட்சி-

வட மாகாணசபை தேர்தல் தற்சமயம் சர்வதேச தேர்தலாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலர் திஸ்ச அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை தேர்தலானது இலங்கையின் உள்ளக தேர்தலாக மட்டும் கருத முடியாது. இது சர்வதேச தேர்தலாக உருவெடுத்துள்ளது. இத் தேர்தலை நடத்துவதாக இந்தியாவிடம் உறுதிபூண்டமை, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திடம் உறுதி வழங்கியமை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்திடம் உறுதி வழங்கியமை மூலம் இது நன்றாக புலப்படுகின்றது எனவே இது சர்வதேசமே அவதானிக்கும் தேர்தலாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளவாலையில் பிரித்தானியப் பிரஜை கைது-

யாழ்.இளவாலை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு அருகில் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு சட்ட வரையறைகளை மீறி, விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டிற்கு வருகை தந்தமைக்காவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த பிரித்தானியப் பிரஜை மீண்டும் எதிர்வரும் 21ம்திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். விசாரணைகளை இளவாலை பொலீசார் முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை வெடிப்புச் சம்பவத்தில் சிறுவன் காயம்-

அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தில் பழைய இரும்பு பொருட்கள் சேகரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் அந்நிலையத்தை நடத்திச் சென்றவரின் மகன் என பொலீசார் தெரிவித்துள்ளனர். பழைய இரும்பு பொருட்களை பிரிக்கும்போது மோட்டார் குண்டு ஒன்று வெடித்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மத்திய முகாம் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 மல்லாகம் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-

யாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்றுகாலை 7.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகம் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்று திரும்பி வந்த ஒருவர் சுன்னாகம் பக்கமிருந்து வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டதிலேயே உயிரிழந்துள்ளார். விபத்தையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த தில்லையம்பலம் இராசலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாகம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்மீது தாக்குதல்-

யாழ். நல்லூர் செம்மணி வீதியில் குடித்துவிட்டு கும்மாளம் போட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழக சட்டபீட சிங்கள மாணவர்கள் இருவர் நல்லூர் செம்மணி வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது நேற்று முன்தினம் இரவு 9மணியளவில் நடைபெற்றுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலில் காயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்கள் எதற்காக இவர்களைத் தாக்கினார்கள் என்ற விடயம் வெளிப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 துன்புறுத்தல்கள் தொடர்பில் தேசிய ரீதியில் ஆய்வு-

துன்புறுத்தல்கள் தொடர்பில் தேசிய ரீதியில் ஆய்வுகளை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பிரதி பொதுச் செயலாளர் மற்றும் அவ்வமைப்பின் மனித உரிமைகள் குழு அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். துன்புறுத்தல்களைத் தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று இந்த ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள அதிகாரிகள் தமிழ் பிரதேசத்தில் கடமையாற்றுவர்;-ஜனாதிபதி-

நாட்டில் சிங்கள அதிகாரிகள் தமிழ் பிரதேசங்களுக்கும், தமிழ் அதிகாரிகள் சிங்கள பிரதேசங்களுக்கும் பணிகளுக்காக செல்ல வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னேற்றம் பற்றி ஆராயும் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தமிழ் அதிகாரிகள் சிங்கள பிரதேசங்களுக்கும் சிங்கள அதிகாரிகள் தமிழ் பிரதேசங்களுக்கும் பணிக்காக செல்ல வேண்டும். மக்களின் நலன்களுக்கான தீர்மானங்களை எடுப்பதுடன் இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இனங்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதில் முதன்மையான அமைச்சாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்களுடன் பயணித்த கப்பல் சோமாலிய கடற்பரப்பில் மூழ்கியது-

இலங்கையர்கள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்களுடன் பயணித்த கப்பலொன்று சோமாலிய கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. ஆ.யு.அல்பெடோ என்ற இக்கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்டிருந்தது. மலேசிய நிறுவனமொன்றிற்குச் சொந்தமான குறித்த கப்பல் சோமாலியாவிற்கு 900 கடல்மைல் தொலைவில், இந்து சமுத்திரத்தில் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அதில் 23 பணியாளர்கள் இருந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கப்பல் நீரில் மூழ்கியபோது அதில் இருந்த 4 வெளிநாட்டவர்களும் 7 கடற்கொள்ளையர்களும் உயிரிழந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சோமாலிய கடற் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஐரோப்பிய கடற்படை குறிப்பிட்டுள்ளது. ஆ.யு.அல்பெடோ என்ற இந்தக் கப்பலின் பிரதான பொறியியலாளராக இலங்கை மாலுமியான ரொஹான் வெக்வெல்ல செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.