தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிவ்சங்கர் மேனன் சந்திப்பு-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்குமிடையிலான சந்திப்பொன்று 08.07.13 திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்துரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அங்கு நிலைகொண்டுள்ள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேர்தல் முடியும்வரை கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தில் அரசு மேற்கொண்டுவரும் அதிகாரக் குறைப்பு செயற்பாடுகளுக்கு இந்தியா இடமளிக்கக் கூடாது. ஏனெனில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விடயங்களை இலங்கை அரசு மாற்றியமைக்கிறது. இலங்கையில் பல மொழிகள் மற்றும் மதங்கள் உள்ளன என்பதை இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதேபோன்று வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீகம் என்பதையும் அவ்வொப்பந்தம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், தற்போது அவ்வொப்பந்தத்தில் காணக்கூடிய பல விடயங்களை மாற்றியமைக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது. உதாரணமாக வடக்கில் இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் அப்பகுதிகளில் இராணுவ மற்றும் சிங்கள குடியேற்றத்தை அரசு அதிகரித்து வருகின்றது. ஆகவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு இந்தியா இடமளிக்கக்கூடாது. ஏனெனில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கும் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் இவ்வொப்பந்தத்தின் பாதுகாவலனாக இந்தியா இருக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வட மாகாணசபைத் தேர்தல் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை அவதானத்தில் எடுத்துக்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன் தெரிவிக்கையில், 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. அண்மையில் இலங்கைப் பிரதிநிதியை புதுடில்லியில் வைத்து சந்தித்த பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். அதில் 13ஆவது திருத்தச சட்டம் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாக சுட்டிக்காட்டப்படிருந்தது. ஆகவே, அந்நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இதனையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இடம்பெறும் சந்திப்பின்போதும் எடுத்துக்கூறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.