முன்னாள் பெண் புலி அங்கத்தவர் உயிரிழப்பு-
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். 23வயதான கந்தசாமி புவனேஷ்வரி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். கொழும்பு புறநகர், கல்கஸை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இவர், அங்கு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக எரிகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்துச் சம்பவம் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மயிலிட்டியில் 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம்-
யாழ். வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் நாளை 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் மயிலிட்டி அக்காரயன் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 50 குடும்பங்கள் முதற்கட்டமாக நாளை மீளகுடியேற்றப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த மக்களளை மீள்குடியேற்றும் நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நோர்வே தூதுவர் மட்டக்களப்பு விஜயம்-
இலங்கைக்கான நோர்வே தூதுவர் கேட்ஜோ லோசன் இன்றுகாலை மட்டக்களப்பு காத்தான்குடிக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். மாவட்ட நிலைமைகள் மற்றும்; முஸ்லிம்களின் நிலைமைகள் பற்றியும் இதன்போது அவர் கேட்டறிந்துள்ளதுடன் சமகால அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் நேற்று நோர்வே தூதுவர் லோசன் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்டவர்களை சந்தித்து கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், விதவைகள், பிள்ளைகளின் வாழ்வாதார தொழில்வாய்வாய்ப்புக்கள், கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி ரவைகள் மீட்பு-
முல்லைத்தீவு, மாஞ்சோலைப் பிரதேசத்திலிருந்து 121 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலீசார் தெரிவித்துள்ளனர். மீராவோடை மாஞ்சோலை வீதியில் அமைந்துள்ள பாலத்திற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகள் தொடர்பாக பொதுமக்கள் பொலீசாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலீசார் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர். விசாரணைகளை வாழைச்சேனை பொலீசார் முன்னெடுத்துள்ளனர்.
முஸ்லிம் வர்த்தகர் கொலை விடயமாக குணவர்தனவின் மகன் கைது-
கொழும்பு, கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகரின் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவீந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும்நிலையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ் அத்தியட்சர் சானி அதனடிப்படையில் வாஸ் குணவர்தனவின் மகனான ரவிந்துவுக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடுவெல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ரவீந்து குணவர்தன இருந்தபோதே அவரை பொலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையின் மனித உரிமை நிலை குறித்து திருப்தியடைய முடியாது-பிரிட்டன்-
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தியடைய முடியாது என பிரிட்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டனின் குடிவரவு நீதிமன்றமொன்று இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. இலங்கை அரசினால் புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்பட்ட அகதிக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் முழுமையாக ஆராயப்பட வேண்டும். இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்படுவோர் துன்புறுத்தல்களுக்கு இலக்காகக் கூடிய அபாயங்களை எதிர்நோக்குகின்றனர். புலம்பெயர் தமிழர்களது குடும்ப உறுப்பினர்கள், புலி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கை செல்வேன்-கெலும் மெக்ரே-
எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் நிகழ்வுகளை செய்தியாக்குவதற்காக இலங்கைக்கு தாம் செல்வதற்கு சிறிய வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்தின் தயாரிப்பாளர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார். இலங்கையின் சில தூதரக அதிகாரிகள் தாம் பொதுநலவாய மாநாட்டு நிகழ்வுக்கு வர முடியாது என்று கூறி வருகின்றனர். எனினும், ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் குறித்த மாநாட்டுக்கு வர தமக்கு உரிமை உள்ளது என மெக்ரே குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாட்டு செய்தி சேகரிப்புக்காக தாம் ஊடகவியல் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும்இது தொடர்பில் தாம் பிரித்தானிய வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் மெக்ரே தெரிவித்துள்ளார். தாம் ஊடகவியலாளர் என்ற வகையில் கடந்த 4 வருடங்களாக புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறிய அவர் இதனை ஊடகவியல் என்று கூறுவர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில் மெக்ரேக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது-
கடந்த மூன்று நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று பிற்பகலுடன் கைவிடப்பட்டுள்ளது. இந்த மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வாக்குறுதி வழங்கியதையடுத்து, மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அனுமதியின்றி முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றுதல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளைத் தடைசெய்தல், உள்ளுர் கரைவலை மீனவர்களுக்கு தொழிலுக்கான நிரந்தர அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த திங்கள்முதல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.