தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றுமாலை 5மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், துரைரெத்தினம், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது;. பின்பு முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக நீண்டநேரம் ஆராயப்பட்டது. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை இரா.சம்பந்தன் அவர்கள் மிகவும் ஆணித்தரமாக ஆதரித்து நின்றார். அதேவேளையில் மற்றைய கட்சிகளைச் சேர்ந்த பிரதநிதிகள் மாவை சேனாதிராஜா அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக வரNவுண்டும் என்பதை ஆதரி;த்து தங்களுடைய கருத்துக்களைக் மிகவும் ஆணித்தரமாக கூறினார்கள் இந்தப் பிரச்சினை இழுபறி நிலையை அடைந்ததால் ஒரு முடிவில்லாமல் கூட்டம் நாளைய தினம்வரை பிற்போடப்பட்டு;ளளது..

இலங்கையர்களை கரைக்கு அழைத்துவர நடவடிக்கை-

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தபோது சர்வதேச கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் கடற்படையினரால் இன்றுமுற்பகல் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இக் குழுவினரில் 46 ஆண்களும் 10 பெண்களும் 17 சிறார்களும் அடங்குவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். காலிக்கு அழைத்துவரப்பட்ட இந்தக் குழுவினரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று முன்தினம் இக் குழுவினர் காப்பாற்றப்பட்டனர். காலியிலிருந்து 290 கடல்மைல் தொலைவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த நிலையிலேயே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

மனித உரிமை நிலைப்பாட்டை வெளிப்படுத்த எதிர்பார்ப்பு-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கைக்கு விஜயம் செய்யும்போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளார். பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் பரோன்ஸ் செயிடா வர்சி இதனை நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு பிரித்தானியாவின் சார்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும், வெளிவிவகார செயலர் வில்லியம் ஹேக்கும் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்கள் இலங்கையின் அரசியல் தீர்வு, மனித உரிமைகள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பெறுமதிகள் தொடர்பில் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவர் என கூறப்படுகிறது.

 பிராந்திய ஊடகவியலாளரின் வீட்டின்மீது தாக்குதல்-

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளரொவருரின் வீடு இனந்தெரியாதேரினால் நேற்றிரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டின் யன்னல் கதவுகள் சேதமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலீசார் தெரிவித்துள்ளனர். அட்டாளைச்சேனை 16ஆம் பிரிவு, கிழக்கு வீதி, தைக்கா நகரைச் சேர்ந்த எப்.எம் முர்தளா என்ற பிராந்திய ஊடகவியலாளரின் வீடே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. ஊடகமொன்றில் வெளியான செய்தியினை அடுத்தே இவரின் வீடு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பெண்ணின் மண்டையோடு அணிகலன்கள் மீட்பு-

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரின் மண்டையோடு மற்றும் அணிகலன்கள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி வாதரவத்தை பகுதியிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்துள்ளார். வாதரவத்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ காவலரணிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள காட்டு பகுதியிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இளம் பெண்ணின் தோடுகள் மற்றும் தலைக்கு அணியும் கிளிப் வகைகள், செருப்புகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார். அப்பகுதிக்கு ஆடு மேய்;க்க சென்ற ஒருவர் மண்டையோடு கிடப்பதை கண்டு அது தொடர்பில் நேற்றுமாலை அயலவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  அச்சுவேலி பொலீஸ் நிலையத்திற்கு தகவல்கள் கொடுக்கப்பட்டன. இதனையடுத்தே மேற்படி மண்டையோடு உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு குழு-

கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரிந்துரைத்துள்ளார். ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தமது செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு பணிப்புரை விடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.