எதிர்வரும் 25முதல் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை வேட்புமனு தாக்கல்-

srilanka flagவட மாகாண சபை, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை அமையும் என தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியே மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் திகதியை தேர்தல் ஆணையாளர் அறிவிக்கவுள்ளார். பெரும்பாலும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் செப்டெம்பர் 21 அல்லது 28 ஆம் திகதிகளில் சனிக்கிழமை தினம் ஒன்றில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதிகள் இன்று 11ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் அறிவிக்கப்படவுள்ளது. வட மாகாண சபை மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
 
வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தேர்தல் பணிகளுக்கு வர ஏற்பாடு-

வடக்கு, மத்திய, வடமேல் ஆகிய மாகாண சபை தேர்தல் நடவடிக்கையின் பொருட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 பேர் இலங்கை வரவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தாய்லாந்து, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய ஆசிய வலய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களே இவ்வாறு இலங்கை வர தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பெப்ரல் அமைப்பு அரசியல் கட்சிகளிடம் எழுத்துமூலமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. உத்தேச மாகாண சபைத் தேர்தல்களின்போது முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களுக்கு வேட்பு மனுத்தாக்கல்களை மேற்கொள்ள இடமளிக்க வேண்டாம் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
யாழ். அக்கரை கிராமம் விடுவிப்பு-

jaffnaயாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் இன்று பொதுமக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றுகாலை இந்த கிராமத்தை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 1986ஆம் ஆண்டு இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் யுத்தம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். இதுவரை காலமும் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த இந்த கிராமத்தில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு படையினர் இன்று உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளனர். இதன் முதற்கட்டமாக இக்கிராமத்தில் வாழ்ந்த 38 குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அம்மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பிரதேச செயலாளர் ஊடாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
பொதுமக்களின் முறைப்பாடுகள் அதிகரிப்பு-

பொதுமக்கள் தற்சமயம் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை அதிகளவில் செய்வதாக லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் லக்ஸ்மன் ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த காலப்பகுதியில் லஞ்ச மற்றும் ஊழல் தொடர்பான அதிகளவிலான முறைப்பாடுகள் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அதிகளவிலானவை துஸ்பிரயோகம் தொடர்பானவை என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
 
பெண்கள் முறைப்பாட்டு செயற்குழு-

எதிர்வரும் காலத்தில், பெண்கள் முறைப்பாட்டு செயற்குழு அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகளீர் ஒன்றியம் நேற்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் ஒன்று கூடியது. மகளீர் ஒன்றியத்தின் தலைவர் சுமேதா ஜி. யசேனாவின் தலைமையில் இந்த ஒன்றுகூடல் இடம்பெற்றது. இதில், சபாநாயகர் ஷமல் ராஜபக்ச, பிரதமர் டி.எம்.ஜயரட்ன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றும்போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.. இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மகளீர் தொடர்பாக ஆராய்வதற்கான தேசிய மட்ட மகளீர் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போது மதமானது பெண்களினாலேயே தக்க வைக்கப்பட்டுள்ளது என  பிரதமர் டி.எம். ஜயரட்ன தனதுரையில் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற குழு இலங்கை விஜயம்-

indiaதமிழகத்தில் இருந்து 10 பேர் அடங்கிய இந்திய நாடாளுமன்றக் குழு ஒன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் இக்குழு இலங்கை வரும் என பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த குழுவினர் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் குறித்து ஆராயவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இந்த குழு இலங்கைக்கு வருகை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆஸி. செல்ல முயன்ற இலங்கையர்கள் தமிழகத்தில் கைது-

australienதமிழ் நாட்டிலிருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற முகவர் உட்பட இரண்டு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் ஊத்துக்காட்டில் சந்தேகப்படும் படியாக சிலர் கடந்த 2 நாட்களாக தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதி முகாம்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் இவர்கள் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது. விசாரணையின் போது இவர்கள் மதுரை ஆணையூர் அகதிகள் முகாம் சுப்ரமணிய அகதிமுகாம் மற்றும் கும்மியடிப்புண்டி அகதி முகாம்களைச் சேர்ந்தோர் என தெரியவந்துள்ளது.. இவர்கள் விசாரணைகளின் பின்னர் தத்தம் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.