12..07.2013
 
வீரமக்கள் தின நிகழ்வுகள்-

2013 Add_1தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் நாளை 13ம் திகதிமுதல் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நாளை வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலராஞ்சலியுடன் 24ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. மற்றும் வீரமக்கள் தின இறுதிநாளான எதிர்வரும் 16ம்திகதி செயலதிபர் உமாமகேசுவரன் நினைவில்லத்தில் மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. 
 
அலிஸ்டெயார் பேர்ட் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கையின் நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்குப் பொறுப்பான இராஜாங்கச் செயலாளர் அலிஸ்டெயார் பேர்ட் மற்றும் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ் ஆகியோருக்கிடையில் நேற்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டு, பிரித்தானியப் பிரஜையான குரம் ஷெய்க் இலங்கையில் கொலைசெய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பிலும் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

 வடமராட்சி கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்-

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ டிரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றுகாலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  இவ்விபத்தில்  ஜே.லியோ (வயது 21) என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
 
இலங்கைச் சிறார்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன-மேகன் மிச்சேல்-

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிச் சிறுவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் சிறுவர்கள் விவகார  மேகன் மிச்சேல் குற்றம்சுமத்தியுள்ளார்.. த ரேடியோ நியுசிலேண்டுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இலங்கையில் இருந்து அகதியாக சென்ற 11 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.. குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம், சிறைச்சாலையை ஒத்ததாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த சிறுவன் மீதான விசாரணையை துரிதப்படுத்தி, அவரை விடுவிக்க குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தகாயாவிற்கு செல்வதற்கு அனுமதி-

குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் புத்தகாயாவுக்கு இலங்கையர்கள் யாத்திரை மேற்கொள்வது பாதுகாப்பானது என இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் உயர்ஸ்தானிகரம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஏழாம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னர், அங்கு யாத்திரை மேற்கொள்வது, பாதுகாப்பற்றதாக கருதப்பட்டிருந்தது. எனினும் தற்போது அங்கு செல்கின்ற யாத்திரிகர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையர்கள் அச்சமின்றி புத்தகாயாவுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனம் விபத்து-

கொழும்பில் இடம்பெற்ற சமுர்த்தி வேலைத்திட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, பொலனறுவை திரும்பிய சிலர் பயணித்த பஸ் ஒன்று நேற்றுமாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மனம்பிட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவர்கள் பயணித்த பஸ் மரம் ஒன்றில் மோதியதைத் தொடர்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 20பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.. 

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க கோரிக்கை-

வடமாகாண சபைத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச அலுவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இருந்தும் தொழில் நிமித்தமாக வேறு மாவட்டங்களில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் தமது வாக்குரிமையை பெற்றுக் கொள்ள தமக்கு வாக்குப் பதிவு உள்ள மாவட்டங்களில் இருக்கும் தேர்தல்  திணைக்களத்துக்கு விண்ணப்பிக்க முடியும். தற்போது தாம் கடமையாற்றும் திணைக்களங்கள் ஊடாக எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கில் 85 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாது-கபே-

வடமாகாணத்தில் 85 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க முடியாது. தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர்களிடத்தில் இல்லை என  கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் நிலையமும் கபே அமைப்பும் இணைந்து நேற்று நடத்திய தேர்தல் தொடர்பான பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு கூறியுள்ளார். இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. வடமாகாண சபை தேர்தல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரமாட்டார்கள். அவர்கள் வராத பட்சத்தில் அந்த பணியினை கபே அமைப்பு நிறைவேற்றும் என்று கீரத்த்தி தென்னக்கோன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக பிரேம்சங்கர் நியமனம்-

யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளராக அன்னலிங்கம் பிரேம்சங்கர் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். யாழ். மேல்நீதிமன்ற ஆணையாளராக இதுவரை காலமும் கடமையில் இருந்த ஜே.விஸ்வநாதன் ஓய்வு பெற்றதையடுத்து பிரேம்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ். மாவட்ட நீதிபதியாகவும் பின்னர் திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நான்கு பாடசாலைகள் தரமுயர்வு-

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துஐற அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் ஆஸி. செல்ல இந்தியா உதவ வேண்டும்- மு.கருணாநிதி- 

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அகதிகளாக தவிக்கும் இலங்கைத் தமிழர்கள், சுதந்திரமாக வாழ அவுஸ்திரேலியா செல்ல விரும்பினால் மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.. இலங்கையில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வந்து அகதிகளாக பல ஆண்டுகளாக வாழும் அவர்களின் பரிதாபகரமான வாழ்க்கை நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.  அவுஸ்திரேலியாவுக்குச் சென்று வசதியுடனும், சுதந்திரமாகவும் வாழ முடியுமென்றால், அவர்களின் நல்வாழ்க்கையில் நாம் குறுக்கிடாமல், அவுஸ்திரேலியா செல்வதற்கு மத்திய, மாநில அரசுகள் தம்மால் இயன்ற உதவியைச் செய்ய முன் வரவேண்டும். இதற்கு மாறாக அவுஸ்திரேலியா செல்லமுயலும் அவர்களைக் கைதுசெய்து, சிறையில் அடைப்பதால் பயன் ஒன்றுமில்லை. இப் பிரச்னையை சட்ட ரீதியாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட:டுள்ளார்.