வவுனியாவில் இன்றும் ‘வீரமக்கள் தின’ விழா புளொட் அமைப்பால் நினைவு கூறப்பட்டது.. 

2013 Add_1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பால் வருடா வருடம் நினைவு கூறப்படும் வீர மக்கள் தினத்தை முன்னிட்டு நேற்று வவுனியாவில் ஆரம்பமாகிய 24வது வீரமக்கள் தின நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்றைய தினம் புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் மரணித்த தோழர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கழகத்தின் மூவர்ண தோரணங்கள் கட்டப்பட்டது.

அத்துடன் கழக அஞ்சலிச் சுவரொட்டி வவுனியா நகர்இ சிதம்பரபுரம்இ கல்லாண்டகுலம்; பெரியகோமரசன்குளம்; ஆச்சிபுரம்; எல்லப்பர் மருதங்குளம்; சமளங்குளம்; கோவில்புதுக்குளம்; கோவில்குளம்; தெக்கிலுப்பைக்குலம்; வெளிக்குளம்; இறம்பைக்குளம்; மூன்றுமுறிப்பு, தவசிக்குளம், குருமன்காடு, திருநாவற்குளம், தாண்டிக்குளம் உட்பட வவுனியாவின் பிரதேசமெங்கும் ஒட்டப்பட்டுக் காணப்படுகின்றது.
இதேவேளை வவுனியா நகர்இ கண்டி வீதியில் அமைந்துள்ள வசந்தி திரையரங்குக்கு அருகாமையில் வவுனியா நகரசபையால் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் புளொட் ஆதரவாளர்களினால் வீரமக்கள் தின அஞ்சலிச் சுவரொட்டியை ஒட்டிக் கொண்டு இருக்கும் போது சற்று முன்னர் அவ்விடத்துக்கு வந்த பொலிஸாரினால் புளொட் ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டுஇ அவர்கள் வசம் இருந்த அஞ்சலிச் சுவரொட்டிகளும் பறித்துச் செல்லப் பட்டுள்ளது. இதுகுறித்து புளொட் அமைப்பு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

யாழ். பொலிஸ் நிலையங்களில் தேர்தலுக்காக விசேட பிரிவுகள்-

யாழ். நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் விசேட பிரிவுகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தின் சகல பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் விசேட பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு இந்த விசேட பிரிவுகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் உரையாடக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்முறைச் சம்பவங்களை தடுக்க பொலிஸார் 24 மணித்தியாலங்களும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
தொலைபேசியில் அச்சுறுத்தல் வந்தால் உடன் அறிவிக்க வசதி-

தொலைபேசி மூலமாக பலரை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசெட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  பணம் கேட்டு அச்சுறுத்தும் நபர்கள் பற்றி உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸ் முறைப்பாட்டு பிரிவின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.  தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் உட்பட பல பேரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு பணம் பறிக்கும் நபர்களுக்கு எதிரான இரகசிய பொலிஸ், பயங்கரவாத தடுப்பு பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளை நடத்தி அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக எவராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அச்சுறுத்தி பணம் கேட்டால், அது பற்றி, பயப்படாது, பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும்.  அல்லது கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்க வேண்டும். 0112 444 480 அல்லது 0112 818 283 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ள வேண்டும் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுள்ளது. 
 
இலங்கைப் பெண் படையினர் ஐ.நா படையில் இணைப்பு-

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதிப் படையில் இணைந்து கொள்வதற்காகப் பயிற்சிகளை நிறைவுசெய்த இலங்கையின் 100 பெண் படையினர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளனர். அமைதி காக்கும் படையில் பெண் படையினரை இணைத்துக் கொள்ளும் இந்த நடவடிக்கை 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. .ஏற்கனவே இலங்கை இராணுவவத்தினர் ஐ.நா அமைதிப்படையில் இணைந்துள்ளனர். இவர்கள் லெபனான், ஹெய்டி போன்ற நாடுகளில் பணியாற்றி வருகின்றனர் என இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
13ஐ திருத்த விடாதீர்கள்: மன்மோகனுக்கு ஜெயா கடிதம்-

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் இரத்து செய்வதற்கோ இன்றேல் திருத்துவதற்கோ முயற்சிக்கின்றது. தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அந்த சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கு இடமளிக்கவேண்டாம் என தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா கோரியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கோரியுள்ளார். இலங்கை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை நீர்த்து போக செய்யவோ, அல்லது ரத்து செய்ய வழிவகை செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இறுதி கட்ட போரில் பலரை இராணுவம் கொன்று குவித்த பின்பும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது என இதற்கு முன்பு தங்களுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன். இலங்கையில் இன்னும் தமிழர்கள்மீதான கொடுமைகள் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அங்கு சிங்களவர்களுக்கு இணையான சமஉரிமை அந்தஸ்து, வழங்குவதற்கான அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. மேலும் தன்னாட்சி உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளும் மாற்றம் செய்யும் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 27 ஆம் திகதி தமிழக சட்டசபையில் தனி தமிழ் ஈழம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி ஈழம் குறித்து உலக தமிழர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். இதையே தான் இலங்கை தமிழர்களும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் இலங்கையின் அரசியல் சட்டம் 13 ஆவது சட்ட திருத்தம் கவலைக்குரியதாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் 13 ஆவது சட்டத்தை திருத்த வலியுறுத்தி சிங்கள தீவிரவாதிகள் போராட்டம் நடத்தினார்கள். எனவே, அந்த சட்டத்தை திருத்த நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியுள்ளார். வருகிற செப்டம்பரில் வடக்கு மாகாணத்தில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இந்த சட்டத்தை திருத்த வேண்டும் என பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியுறவு மந்திரியை சந்தித்து பேசினார். அப்போது சட்ட திருத்தம் செய்வதை நியாயப்படுத்தினார். 1987 ஆம் ஆண்டு உருவான இலங்கை-இந்திய ஒப்பந்தத் தின்படி 13 ஆவது திருத்தம் உருவானது. அதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை, பாதுகாப்பு, மதிப்பு, மரியாதை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். என்றும் இந்த 13 ஆவது திருத்தத்தில் உள்ளது. ஆனால், ஜனதா விமுகதி பெரமுனா கட்சியின் வழக்கின் மூலம் 2007-ம் ஆண்டு இலங்கை உயர்நீதிமன்றம் அரசின் இந்த முடிவை ரத்து செய்தது. அதனால் 2 மாகாணங்களும் இணைக்கப்படவில்லை. இதுவே இலங்கை-இந்திய ஒப்பந்தத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இலங்கையில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான தமிழர்களின் வாழ்வு மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அது 13 ஆவது சட்ட திருத்தத்தினால் மட்டுமே முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்குவதில் இலங்கை அரசு விதிவிலக்காக உள்ளது. எனவே, இலங்கையின் சட்ட பிரிவில் திருத்தம் கொண்டு வராமல் தடுக்க மத்திய அரசு அனைத்து வகையான நடவடிக்கையும், நெருக்கடிகளையும் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.