17.07.2013.
வவுனியாவில் 24ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்-
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுமாலை 4மணியளவில் ஆரம்பமாகி மாலை 6.30மணிவரையில் நடைபெற்றது. வீரமக்கள் தினமானது கடந்த 13ம்திகதி முதல் நேற்று 16ம் திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது.
24ஆவது வீரமக்கள்தின நிகழ்வுகளை திரு.ராஜா அவர்கள் ஆரம்பித்து வைத்து உரைநிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து குடியிருப்பு சிறீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கந்தசாமி குருக்கள் தீபச் சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கும், ரெலோ இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவித்தனர். அமரர் சிறிசபாரத்தினம் அவர்களின் உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களும், அமரர் பத்மநாபா அவர்களின் உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் மலர்மாலை அணிவித்தனர். தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா அவர்களும் மலராஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கழகக் கண்மணிகள் மற்றும் போராளிகளின் உருவப்படங்களுக்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டது.
மௌன அஞ்சலியைத் தொடர்ந்து புளொட் மத்தியகுழு உறுப்பினரும், முன்னைநாள் வவுனியா நகரபிதாவுமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அஞ்சலி உரையாற்றினர்.
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் தனதுரையில்,
வீரமக்கள் தினமான இந்நிகழ்வில் அனைத்துப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து வருகின்றோம். இவர்கள் எதனை அடைவதற்காக தமது வாழ்வினை அர்ப்பணித்தார்களோ அவர்களது தியாகங்களுக்கு இடைக்கால தீர்வுகளெதுவும் ஈடு இணையாக முடியாது. இருந்தாலும் இன்று ஒரு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம்தான் அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையுமென்று கருதுகின்றோம்.
தமிழ் மக்கள் இன்றைய சூழ்நிலையில் படுகின்ற அவலங்கள் சொல்லிலடங்காது. அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ ஆக்கிரமிப்பு, நிலப்பறிப்பு இவைகளினால் நாம் ஒரு தேசிய இனமாக எங்களது மண்ணிலிருந்து மறைந்து விடுவோமோ என்கிற நிலைமைகள் உருவாகி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எங்களிடையே ஓர் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்பதுவே எங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டதற்கான முழுமுதற் காரணமாக இருந்தது.
மேலும், இயக்கங்கள் அனைத்தும் தங்களுடைய தலைவர்களதும், உறுப்பினர்களதும், பொதுமக்களதும் உயிர் அர்ப்பணிப்புக்களை ஞாபகப்படுத்துவதற்காக தனித்தனியாக நினைவு தினங்களை நடாத்துகின்றன. வருங்காலங்களிலாவது எம் மக்களிடையே இருக்கக்கூடிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒரு பொதுவான நாளினை தேர்ந்தெடுத்து அந்த நாளில் இந்த நினைவுகூரலை அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து நடத்த வேண்டும். இதுவே ஒரு சிறந்த நினைவு தினமாக இருப்பது மாத்திரமன்றி கசப்பான கடந்தகாலங்களை மறந்து ஒற்றுமையை வலுப்படுத்த அது உதவும் என நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து புளொட் மத்தியகுழ உறுப்பினரும், வன்னிப் பிராந்திய அமைப்பாளருமான திரு. சிவநேசன் (பவன்) அவர்களின் நன்றியுரையுடன் வீரமக்கள்தின நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்வுகளில் புளொட் முக்கியஸ்தர்கள், புளொட் அங்கத்தவர்கள், வவுனியா நகரசபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், கல்விச் சமூகத்தினர், தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், கணவன்மாரை இழந்த பெண்கள், மறைந்த எமது தோழர்களின் உறவினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டிருந்தனர்.
பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டிகள் அறிமுகம்-
செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களின்போது சில வாக்களிப்பு நிலையங்களிலேனும் வாக்குச் சீட்டுக்கள் வெளியில் தெரியும் வகையிலான பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டிகளை தேர்தல் திணைக்களம் அறிமுகம் செய்யவுள்ளது. மரப் பலகையிலான வாக்குப் பெட்டிகளை பயன்படுத்துவது அதிக செலவானது என்பதால் தேர்தல் திணைக்களம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. பிளாஸ்ரிக் பெட்டிகள் பாரம் குறைந்தவை என்பதால் அவற்றைக் கையாள்வது இலகுவானது என தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வேட்பு மனுக்களை ஜூலை 25ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை ஏற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் திணைக்களம், அந்தந்த தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பை சுத்தப்படுத்தும் பணியில் கைதிகளை ஈடுபடுத்த திட்டம்-
கொழும்பு நகரை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் கைதிகளை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலரின் ஆலோசனைக்கு அமைய புதிய திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபை, பொலீசார் மற்றும் சுற்றாடல் பிரிவு என்பன இணைந்து இத் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் கைதிகளை அதிகாரிகள் விசேடமாக கண்காணிக்க உள்ளனர். கைதிகளை சாதாரண உடையில் வீதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என சந்திர ரத்ன மேலும் கூறியுள்ளார்.
வவுனியா விபத்தில் இரு படையினர் உயிரிழப்பு-
யாழ் – கண்டி ஏ9 வீதியின் வவுனியா, நவகமுவ பிரதேசத்தில் இராணுவ கெப் ரக வாகனமொன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் இரு படையினர் பலியானதுடன், மேலும் நான்கு படையினர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலீசாரிடம் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான வாகனம், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்தது என கூறப்படுகின்றது. விபத்தில், கிளிநொச்சி படைத் தலைமைகயத்தின் 24ஆம் கெமுனு படைப்பிரிவைச் சேர்ந்த கேணசேகர (வயது 29) மற்றும் அதே படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 20ஆவது கஜபா றெஜிமண்டைச் சேர்ந்த தென்னகோன் (வயது 25) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த நான்கு படையினரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மர்மப்பொருள் வெடித்ததில் இளைஞர் படுகாயம்-
மன்னாரில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியிலேயே நேற்றுப்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். தனது வீட்டின் பின்புறத்தில் காணப்பட்ட மர்மப்பொருளை இந்த இளைஞர் தொட்டபோது அது வெடித்துள்ளதாகவும் பொலீசார் கூறியுள்ளனர். திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த 25வயதான ரீ.கஜேந்திரன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.
நந்திமித்திர ஏக்கநாயக்கவின் வாகனம் கடத்தல்-
உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்கவிற்குச் சொந்தமான கெப் ரக வாகனமொன்ற நேற்றிரவு மாத்தளை யடவத்த பிரதேசத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஒருவர் குறித்த வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டுச் சென்ற நிலையிலேயே கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யடவத்தை பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட சிலர் இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக பிரதியமை;சசர் குற்றம்சுமத்தியுள்ளார். அவர்கள் வாகனத்தை கடத்திச் சென்று ஒரு மின்சார கம்பத்தில் மோதச் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.