தேர்தல்கள் தொடர்பில் சுற்றுநிரூபம்-

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியாவினால் ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை, திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கான விசேட சுற்றுநிரூபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்கள் நிறைவடையும் வரையில், அரச அதிகாரிகளின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் பதவியளிப்புகள் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் தேர்தல்கள் ஆணையாளருக்கு உள்ள அதிகாரங்களின் கீழ் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காலப்பகுதியில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்க சொத்துக்களை பயன்படுத்தப்படுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
 
இலங்கை அகதிகள் விடயத்தில் ஆஸி கடும் தீர்மானம்-

இலங்கை அகதிகள் தொடர்பில் எதிர்வரும் வாரம் அவுஸ்திரேலியா கடுமையான தீர்மானம் ஒன்றை அறிவிக்கவிருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கெவின் ரட் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், நீண்டகாலமாக காணப்படுகிற அகதிகளின் நெருக்கடி குறித்த துரித தீர்மானம் ஒன்றை அமுலாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏற்கனவே தொழில்கட்சி இவ்விடயத்தில் மந்தமாக செயற்பட்டு வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த வாரம் அவர் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தொடர்பில் கடுமையான தீர்மானம் ஒன்றை அறிவிக்கவுள்ளார். 
 
தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வகட்சிக் குழு-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சர்வகட்சிக் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு அரசியல் கட்சிகளின் நிரந்தர பிரதிநிதிகளை உள்ளடக்கிய  குழுவொன்றை நியமிக்க தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மாகாண சபைத் தேர்தலின்போது மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து சர்வகட்சிக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் சர்வக்கட்சி குழு நியமிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 
 
இணையத்தளம் ஊடாக காணிகளின் வரைபட பரிசீலனை-

இணைத்தளம் ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்கும் வசதிகளை ஏற்படுத்த நில அளவையியலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்கீழ் நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுகிற காணிகளின் வரைபடங்களை பரிசீலிப்பதுடன் ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் அவற்றின் பிரதிகளை பெற்றுக்கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி அளவையியலாளர் பீ.எப்.பி.உதயகாந்த் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். றறற.ளரசஎநல.பழஎ.டம என்ற இணையத்தள முகவரி ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்க முடியும் என்றும் நில அளவையியலாளர் திணைக்களம் குறிப்பி;ட்டுள்ளது. 
 
அடுத்தவாரத்தில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க பவ்ரல் நடவடிக்கை-

வடமாகாணத்தில், அடுத்த மாதம்முதல் தங்களின் உத்தியோகபூர்வ தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. அதன் வடமாகாண திட்டப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் இதனைத் கூறியுள்ளார். இதன்படி பவ்ரல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
 
தமிழகத்தில் இருந்து கைதிகள் பறிமாற்றம்-

தமிழகத்தில் இருந்து 11 சிறைக்கைதிகள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர். கைதிகள் பறிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர்களை கைமாற்ற அனைத்து சட்ட ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக எம்.எம்.கே. தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். குறித்த சிறைக்கைதிகளில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்றும் அவர்கள் இன்னோரன்ன உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை – இந்திய கைதிகள் பறிமாற்ற ஒப்பந்தம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜுன் 9 திகதி கைச்சாத்திடப்பட்டது. இதேவேளை, கடந்த மார்ச் மாதம் கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து 20 கைதிகள் கைமாற்றப்பட்டனர்.