தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழு கூட்டம்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக்குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரியாலயத்தில் இன்றுமாலை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பின்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் நியமனம் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசு கட்சிக்கு 03 வேட்பாளர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 02 வேட்பாளர்களும், ரெலோ அமைப்புக்கு 01 வேட்பாளரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு 01 வேட்பாளரும் என பங்கிடப்பட்டது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 02 வேட்பாளர்களும், ரெலோவிற்கு 02 வேட்பாளர்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு 02 வேட்பாளர்களும், புளொட் அமைப்புக்கு 01 வேட்பாளரும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 01 வேட்பாளருமென பங்கிடப்பட்டது. யாழ்ப்பாணம் சம்பந்தமாக சில முடிவுகள் எடுக்கப்பட்டாலும் இறுதிமுடிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடி எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களின் வேட்பாளர்கள் நியமனம் தொடர்பில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (21.07.2013) வவுனியாவில் கூடி இறுதி முடிவு எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

கப்பம் பெற முயன்றவர்கள் கைது-

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 25 லட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பெறமுயன்ற நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் உரிமையாளரிடமே இவ்வாறு கப்பம் கோரப்பட்டிருந்தது. இது தொடர்பில் உரிமையாளர் கிண்ணியா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்பின் குறித்த உரிமையாளர் கப்பம் கொடுப்பதற்கு இணங்கியுள்ளார். இதன்மூலமே கப்பம்பெற முயன்றவர்களை பொலீசார் சூசகமாக கைது செய்துள்ளனர். கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 
 
பரமேஸ்வரா சந்தியிலிருந்து தோட்டாக்கள் மீட்பு- யாழ் –

பலாலி பிரதான வீதியின் பரமேஸ்வரா சந்தியில் மேற்கொள்ளப்பட்ட வீதி அகழ்வின்போது ஒருதொகை தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப் பகுதியில் வடிகான் நிர்மாணிப்பதற்காக பெக்கோ இயந்திரம் மூலம் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோது பிற்பகல் 1மணியளவில் பொதியொன்று வெளிப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் வழங்கப்பட்டதையடுத்து கோப்பாய் பொலீசார் தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். அவற்றுள் ரி-56 ரக தோட்டாக்களும் எம்.பீ.எம்.ஜீ. ரக தோட்டாக்களும் இருந்ததாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கோப்பாய் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்மஸ் தீவிற்கு அகதிப் படகு-

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா நேற்று புதிய நடைமுறையை அறிவித்ததைத் தொடர்ந்து, முதலாவது அகதிப் படகு கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளது.  அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் க்ளேயர் இதனைக் கூறியுள்ளார்.  81 அகதிகளையும், 2 மாலுமிகளையும் கொண்ட இந்தப் படகு இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. படகில் சென்றவர்கள் தற்போது கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சட்டவிரோதமான முறையில் படகுகள்மூலம் அவுஸ்திரேலியா செல்கின்ற அகதிகள் தொடர்பில் இன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதில் வீசா இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் வந்தவர்களுக்கு நாட்டில் இடமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை அங்கத்துவத்தை கொண்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பகளுக்கு இந்த அழைப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, பொதுநலவாய நாடுகள், ஆசிய தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தெற்காசிய வலய கண்காணிப்பு குழு என்பவற்றுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஜெனீவாவில் கடந்த மார்ச்சில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சார்பாக வாக்களித்த நாடுகளுக்கு கண்காணிப்பு பணிகளுக்காக அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்பட்டிருந்தது. எனினும் இத்தகவலை தேர்தல் ஆணையாளர் நிராகரித்துள்ளதுடன், தேர்தல் விடயத்தில் ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு கருத்தில் கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

நவுறு முகாமில் கலவரம்-

அவுஸ்திரேலியாவினால் நவுறு தீவில் நடத்தப்பட்டு வரும் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் நேற்று கலவரம் வெடித்துள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி கலகம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், முகாமின் மருத்துவ நிலையம் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இனிமேலும் அவுஸ்திரேலியாவில் மீள் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனவும் அவர்கள் அனைவரும் பபுவா நியூகினியாவுக்கு அனுப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் நேற்று அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பு வெளியாகி சில மணித்தியாலங்களிலேயே இக்கலகம் இடம்பெற்றிருக்கின்றது. கலகத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஈரானியர்கள் எனவும், இலங்கைத் தமிழர்களும் இதில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. எனினும் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
முன்னாள் புலி உறுப்பினர் கடத்தப்பட்டு சித்திரவதை-

வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு கடும் சித்திரவதைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நெடுங்கேணியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான பிரதீபன் என்ற நபரே இவ்வாறு கடத்தப்பட்டு கடும் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இவரைக் கடத்திய நபர்கள் நெடுங்கேணியில் உள்ள வீடொன்றினுள் வைத்து இரும்புக் கம்பியால் தாக்கியதுடன் நெருப்பில் கம்பியை சூடாக்கி அவரின் முதுகு மற்றும் மார்புப் பகுதியில் சுட்டு காயப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

வட, கிழக்கு மாகாணங்களுக்கு புதிதாக 6 ரயில் சேவைகள்-

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆறு ரயில் சேவைகளை தொடங்கவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது. 400 மில்லியன் ரூபா முதலீடு தேவையான இந்த புதிய ஆறு ரயில் சேவைகளும் அடுத்த ஏப்ரலில் அல்லது மே மாதம் தொடங்கலாம் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பீ.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு – ஓமந்தை, மதவாச்சி – மடு ஆகிய இரண்டு ரயில் சேவைகளும் போரின் போது அழிந்த ரயில் பாதைகளை திருத்தி அமைக்கப்பட்டவையாகும். மக்களின் பயண வசதியை அதிகரிக்கவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் புதிய ரயில் சேவைகள் அவசியமாகின்றன என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் மேலும் கூறியுள்ளார்.