யாழில் சிறீரெலோ அலுவலகம்மீது தாக்குதல்-

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறீரெலோ அலுவலகம்மீது இன்று அதிகாலை இனம் தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரே இத் தாக்குதலை நடத்தியதாகவும், இதனால் அலுவலகம் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதுபற்றி உடன் கோப்பாய் பொலீஸ் நிலையத்திற்கு சிறீரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் செந்தூரனால் தகவல் வழங்கப்பட்டு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் சிறீரெலோ கட்சியினர் ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளனர். ஏற்கனவே இந்த அலுவலகம்மீது பெற்றோல் குண்டும் வீசப்பட்டிருந்தது. 
 
காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கினால் என்ன தவறு?-சி.வி.விக்னேஸ்வரன்- 

13ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள குறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து இந்த திருத்தத்தை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கில் தற்போது நிலைகொண்டுள்ள 1,50,000 இராணுவத்தால் மக்களுக்கு அசௌகரியம் உள்ளது என தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மக்கள் ஒரே மொழியை பயன்படுத்துவதால் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் வழங்குவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இலங்கை – இந்திய நட்புறவை பிளவுபடுத்த முடியாது-யஷ்வர்தன் குமார் சிங்ஹா- இலங்கை

இந்தியாவிற்கு இடையில் காணப்படும் நட்புறவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் யஷ்வர்தன் குமார் சிங்ஹா தெரிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்ததாக அமைச்சர் மைத்திரிபால கூறியுள்ளார்.நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டதாகவும், இலங்கை சுகாதார துறைக்கு இந்தியா வழங்கி வரும் உதவிக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறிய அமைச்சர் மைத்திரிபால, இந்தியாவின் உதவி தொடர்ந்தும் அவசியமென கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். 
 
பல்கலை மாணவிகள் தங்கியிருந்த வீடுமீது தாக்குதல்-

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் தங்கிருந்த வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் தென்னிலங்கை மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு பின்புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கி கல்விகற்று வருகின்றனர்.இந்த வீட்டுக்கு நேற்று நள்ளிரவு மதுபோதையில் சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன் வாசற் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர். கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளனர். இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் சிதறியுள்ளன. இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த வீட்டில் தங்கியிருந்த 16 தென்னிலங்கை மாணவிகளும் யாழ். பல்கலைக்கழக விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பொதுநலவாய மாநாட்டின் பின் 13இல் திருத்தம்- 

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு முடிவடைந்த பின் 13ஆவது மாற்றங்களைச் செய்வதன்மூலம் அதில் அடங்கியுள்ள மாகாண சபைகளுக்கான பொலீஸ் காணி அதிகாரங்களை நீக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாண சபைகளுக்கு 13ஆவது அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மறுபரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகள் பிரதிநிதிகளை நியமிக்காத காரணத்தால் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் அரச கட்சிகளின் பிரதிநிதிகள் பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்குவதற்கு தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடியதாகவிருக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எடுக்கும் முடிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன. 
 
தேர்தலைக் கண்காணிக்க பவ்ரலுக்கு ஜப்பான் நன்கொடை-

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பதாக வாக்காளர்களை அறிவூட்டும் செயற்பாட்டுக்கும், தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்குமாக பவ்ரல் அமைப்புக்கு 11 மில்லியன் ரூபாயை நன்கொடையாக ஜப்பானிய அரசு வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொஹிபுட்டோ ஹோபோ மற்றும் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி ஆகிய இருவருக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.வடமாகாண சபைக்கான தேர்தல் 1988ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வருடமே முதன் முறையாக இடம்பெறவுள்ளது. இதனால் வடமாகாண வாக்காளர்களை அறிவூட்டும் செயற்பாட்டை நோக்காகக் கொண்டு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.  அத்துடன் இடம்பெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் நீதியானதும்  சுதந்தி ரமானதுமான தேர்தல் இடம்பெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காகவே ‘பவ்ரல்’ அமைப்புக்கு மேற்படி நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு-

இலங்கையில் பெண்கள் மீதான வன்முறை 80 வீதத்தினால் அதிகரித்துள்ளது என மனித அபிவிருத்தி மற்றும் உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த ஆய்வின் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் 80 வீதத்தால் குடும்ப வன்முறைகள், துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை, உலகில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறை காரணமாக பாதிக்கப்படுகின்றார் என பெண்கள் உரிமைகள் தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தும் குழு குடும்ப வன்முறைகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் உரிமைகள் குழுவின் உப தலைவர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவிக்கையில், தற்போது அதிகரித்துள்ள மதுபானசாலைகள் வன்முறைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டவை. சந்திக்குச் சந்தி காணப்படும் மதுபானசாலைகள் வன்முறைகள் அதிகரிக்க காரணமாகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸ் நிலையங்களில் முறையிட முன்வராமை, அத்துடன் கிராமப் புறங்களில் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வின்மை ஆகியவை இலங்கையில் வன்முறைகள் அதிகரிக்க் காரணமாகின்றன. மேலும் பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவோருக்கு எதிராக இழப்பீடு வழங்குதல் அல்லது குறைந்தகால சிறைத் தண்டனையே. எனவே இவற்றைக் கட்டுப்படுத்த பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.