தோழர் குமரன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி

107664-274x300 யாழ். மாதகலைச் சேர்ந்தவரும், பிரான்ஸில் வசித்து வந்தவருமான விஸ்வலிங்கம் பொன்னுத்துரை (குமரன்) அவர்கள் மரணமடைந்தமை எம்மை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

78களில் காந்தீயம் ஊடாக மக்கள் சேவையினை ஆரம்பித்த தோழர் குமரன், விடுதலைப் போராட்டத்தின்; ஆரம்பகாலங்களில் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு கழக செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகித்தார்.
அத்துடன் ஆரம்ப காலங்களில் பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்குபற்றியிருந்த அவர், பொதுவுடமை சித்தாந்தத்தில் தீவிர பற்றாளராகவும் திகழ்ந்தார்
புளொட்டின் மத்திய குழு உறுப்பினராகவும், தள அரசியல் செயலராகவும் 84 – 87 காலப்பகுதியில் செயற்பட்டு வந்த தோழர் குமரன், 1987 களின் இறுதிவரை தனது பணியினைத் தொடர்ந்தார்.
தோழர் குமரன் அவர்களின் மறைவு கழகத்திற்கும், அவர் நேசித்த மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
அன்னாரருக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் எமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துவதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு-

சென்னை விமான நிலையம் உட்பட இந்தியாவின் ஏழு விமான நிலையங்களுக்குத் தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதாக புலனாய்வுக் குழுமம் (ஐ.பி) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து அந்த விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. ஏழு விமான நிலையங்களும் சிறிய வகை விமானங்களால் மோதித் தாக்கப்படவோ, விமானங்கள் கடத்தப்படவோ, புதியவகை வெடிகுண்டுகள் மூலமாகவோ தாக்கப்படக் கூடும் என புலனாய்வுக் குழுமம எச்சரித்துள்ளது. புதுடில்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் குவஹாத்தி ஆகிய 7 நகர விமான நிலையங்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் அரசு புலனாய்வுக் குழுமம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

50 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை-பவ்ரல்-

வட மாகாணத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை அற்ற நிலையில் இருப்பதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான கபே, ஆள்பதிவு திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வு நிலையம் என்பன இணைந்து கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டு நடமாடும் சேவைகளை மேற்கொண்டிருந்தன. இதன்போNது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சேவைகளின்போதே, வட மாகாணத்தில் தேசிய அடையாள அட்டை அற்ற நிலையில் பெருமளவு மக்கள் உள்ளமை தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும், எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் வாக்காளர் நலன்கருதி தற்காலிக அடையாள அட்டையினை பெற முடியும் என ஆள்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் புலி உறப்பினர்கள் மற்றும் விதவைகளுக்கு கடனுதவி-

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முன்னாள் புலி உறுப்பினர்கள் மற்றும் விதவைகளுக்கான இலகுகடன் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்டையில் இந்த வருடத்திற்குள் புனர்வாழ்வு மற்றும் இலகுக்கடன் திட்டங்களுக்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 525 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். வன்னிப் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 5ஆயிரம் பேருக்கு இவ்வருட இறுதிக்குள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. அத்துடன் 1000 விதவைகளுக்கு சுயதொழிலுக்கான இலகுக்கடன்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை காலப்பகுதியினுள் 1750 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளுக்கு அடையாளம்-

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல காணிகள் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை அடையாளப்படுத்தும் வகையில் ‘இது இராணுவத்தினருக்கு உரிய காணி” என தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பெயர்ப்பலகைகள் காணிகளில் நடப்பட்டுள்ளன. மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, மன்னார் சௌத்பார் பிரதான வீதி மற்றும் பனை மரக்காடுகள், அடர்ந்த காடுகளிலேயே காணி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன. அதிகளவான தனியார் காணிகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. போர் காலத்தில் பல ஆயிரக்கணக்காண தமிழ், முஸ்ஸிம் குடும்பங்கள் அகதிகளாக இந்தியாவுக்கும் ஏனைய இடங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றிருந்தன. அவர்களில் அநேகர் தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். அவர்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு காணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் தனியார், மற்றும் அரச காணிகள் இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டு வருவது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவங்களை எடுத்துக்காட்டாக பெற்றுக்கொள்ள முடியும்-ரவிநாத ஆரியசிங்க-

உலகின் எந்தவொரு நாட்டினதும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போதும் இலங்கை அது தொடர்பில் பெற்றுள்ள அனுபவங்களை எடுத்துக்காட்டாக பெற்றுக்கொள்ள முடியும் என ஜெனீவா ஐக்கிய நாடுகள் காரியாலயத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக பேரவையின் அமர்வில் கலந்து கொண்டபோதே இலங்கை பிரதிநிதி இந்த நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளார். 3 தசாப்த கால பிரிவினைவாத செயற்பாடுகளை எதிர்கொண்ட இலங்கை 2004ஆம் ஆண்டு ஆழிப் பேரலைக்கும் முகம்கொடுத்தது. யுத்த சூழ்நிலைகளின்போது இலங்கை பெற்ற அனுபவங்களை ஏனைய நாடுகள் பயனுள்ள விடயங்களாக கருதவேண்டும். யுத்தம் நிறைவடைந்த பின்னர் நிலக்கண்ணி வெடிகளை அகற்றல், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடிமர்த்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாடுகளை முன்னெடுத்தல் போன்றவைகளை இலங்கை முனைப்புடன் மேற்கொண்டுள்ளது என ரவிநாத ஆரியசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு விபரம் பெறுவதற்கு தொலைபேசி இலக்கம்-

1919 என்ற அரச தகவல் கேந்திர நிலையத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன்மூலம் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பப்படிவங்களை நிரப்புவதற்குரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் 1919 எனும் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதன்மூலம் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார். தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

புலிகளுக்கு நிதி வழங்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தல்-

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இயங்கிவரும் முன்னணி அமைப்புக்களால் புலிகளுக்கு நிதி வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான தனது பங்கு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென இலங்கை கோரியுள்ளதாக பி.ரி.ஐ. செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு தற்போது சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஆறு பேரடங்கிய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தூதுக்குழுவுடன் கடந்த சனியன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போதே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது,