பிரான்ஸில் 24ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-

aதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 24ஆம் வருட நினைவுதின நிகழ்வு புளொட்டின் பிரான்ஸ் கிளையின் ஏற்பாட்டில் பிரான்ஸ், 75013-பாரீஸ் என்னுமிடத்தில் கடந்த 21.07.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகத் தோழர்கள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது தோழர் சபா அவர்கள் தீபச் சுடரினை ஏற்றி 24ஆவது வீரமக்கள்தின நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் மற்றும் மறைந்த தோழர்களின் உருவப்படங்களுக்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த பிரான்ஸ்கிளை தோழர்கள் மற்றும் நண்பர்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிநீத்தவர்களின் கனவுகள் மற்றும் இலட்சியங்களை நினைவுபடுத்தி தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
தொடர்ந்து புளொட் தலைவரின் வீரமக்கள்தின செய்தியினை பிரான்ஸ் கிளை சார்பில் தோழர் ஜோன்சன் அவர்கள் வாசித்து உரையாற்றியதுடன், நன்றியுரையினையும் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் புளொட்டின் பிரான்ஸ் கிளைத் தேரழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். (-பிரான்ஸ் கிளை சார்பாக திரு. ஜோன் திருச்செல்வம்-)

ihjgcebd

 

 

ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தல்-

எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் பொருட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, உரிய ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயமானது என தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாளை முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வேட்புமனுவில் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

மன்னார் ஆயருடன் அமைச்சர்கள் சந்திப்பு-

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை சிரேஷ்ட அமைச்சர்கள் நேற்றையதினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் திஸ்ஸ கரலியத்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் மன்னார் மாவட்ட கத்தோலிக்க குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நேரில் கண்டறிவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாகவே இரு அமைச்சர்களும் மன்னாருக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையர்கள் பயணித்த படகு மூழ்கியது-

Australia[1]இலங்கை மற்றும் ஈரானைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளுடன் பயணித்த படகொன்று இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளின் கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த இப் படகு அனர்த்தத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, காணாமற்போயிருந்த 157பேர் மீட்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேற்றவாசிகள் 170 பேருடன் பயணித்த படகே விபத்திற்குள்ளானதுடன், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தினம்-

images 4தமிழ் தேசிய வீரர்கள் தினம் எதிர்வரும் 27ம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். 27ம் திகதி பிற்பகல் 2.30 க்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 1983ஆம் ஆண்டு ஜூலை 25,27 ஆகிய தினங்களில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட டெலோவின் ஸ்தாபக தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உட்பட போராளிகள் மற்றும் பொதுமக்கள் 53பேரின் 30ஆவது நினைவு தினத்தை முன்னிட்டே குறித்த அஞ்சலி நிழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவம், இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்று நினைவுரையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகலிடம் கோரி படகில் சென்றோர் கைது-

புகலிடம் கோரி படகில் சென்றோர் இன்று இலங்கை கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். காலியிலிருந்து சுமார் 250 மைல் தூரம் தென் கிழக்கு பகுதியிலேயே இவர்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படகிலுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜீவன் குமாரதுங்கமீது தாக்குதல்

தச்சுத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று காலி வீதியில் மொரட்டுவ ராவத்தாவத்தை பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. தமது உற்பத்தி பெருட்களுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி காலிவீதியை மறித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திப்பதற்குச் சென்றிருந்தபோது அவரை இலக்கு வைத்து, தண்ணீர் போத்தல் வீச்சு தாக்குதல் நடததப்பட்டதுடன், அவருக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பதவி விலகுவதாக தயாசிறி எம்.பி அறிவிப்பு-

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனது இராஜினாமாவை பாராளுமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து எதிர்வரும் வட மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.