அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு விபத்துக்குள்ளானது
இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 3 இலங்கையர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 அகதிகளே உயிரிழந்துள்ளதோடு இதில் இரு பெண்களும் குழந்தை ஒன்றும் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர்களில் ஒரு 18 மாத ஆண் குழந்தை, 2 வயது, 7 வயதுடைய இரு பெண் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் அடங்குகின்றனர்.
ஜாவாத் தீவு கடற்பரப்பில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற இவ் விபத்தின் போது 200க்கும் மேற்பட்டோர் வரை படகில் இருந்ததாகவும் அதில் 189 பேர் வரை காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. படகில் இருந்தோர் இலங்கை, ஈராக், ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.விபத்துக்குள்ளான படகில் இருந்த சிலர் நீந்தி கரையை வந்து சேர்ந்து வழங்கிய தகவல்களையடுத்தே மீட்பு பணிகள் தொடங்கப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன