வவுனியா மாவட்டத்தில் 94,367பேர் வாக்காளர்களாக பதிவு-

வவுனியா மாவட்டத்தில் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்படடுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் என். கருணாநிதி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள வாக்காளர்களுடன் மேலதிகமாக பதிவுசெய்யப்பட உள்ளவர்களின் விபரங்களும் இத் தொகையுடன் சேர்க்கப்படவுள்ளது. இவர்கள் வாக்களிப்பதற்காக 81 வாக்களிப்பு நிலையங்கள் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளன. தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை கோரியதன் அடிப்படையில் அவை தற்போது கிடைத்த வண்ணமுள்ளன. அந்த வகையில் தபால்மூலமாக வாக்களிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். அதேபோல் இடம்பெயர்ந்தவர்கள் 2012ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்து வௌ;வேறு காரணங்களுக்காக வேறு மாவட்டங்களில் வசிக்கும் பட்சத்தில் இவர்கள் இடம்பெயர்ந்த பிரதேசத்திலேயே வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு விண்ணப்பிக்க வேண்டியவர்கள் நேரடியாக விண்ணப்பப் படிவங்களை தேர்தல் ஆணையாளருக்கோ அல்லது எம்மிடமோ சமர்ப்பிக்க முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் கைது-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்குரிய ஏற்பாடுகளுடன் பதுங்கியிருந்த மூவரைத் தாம் கைதுசெய்துளளதாக மட்டக்களப்பின் ஏறாவூர் பொலீசார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் சந்திவெளியில் வைத்து இவர்கள் மூவரும் நேற்றுமாலை கைதுசெய்யப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பொலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கிழக்கிலிருந்து கடல் மார்க்கமாக இவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு உத்தேசித்திருந்தனர் என்பது விசாரணையின்மூலம் தெரியவந்துள்ளதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்வதற்கான நடிவடிக்கைகளை தாம் மேற்கொண்டிருப்பதாக ஏறாவூர் பொலீசார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

படகு விபத்து: 4 பெண்களின் சடலங்கள் கரையொதுங்கல்-

இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய அகதிகள் படகில் பயணம் செய்த நான்கு பெண்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கியுள்ளன. இதனையடுத்து இந்த விபத்தில் மரணமானவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று படகு மூழ்கிய இடத்தில் இருந்து மேற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள உயுங் ஜென்ரெங் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்களும் அடங்கியுள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்டு உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 15 பேரில், 18 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளிட்ட ஆறு சிறுவர்களும், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அடங்கியுள்ளனர். சுமார் 204 பேருடன் சென்ற இந்த படகு மூழ்கியதில் 15பேர் பலியாகியுள்ளனர். மேலும் 189 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

திருமலை கல்வியில் பின்தங்கிய மாவட்டமாகியது-நிசாம்-

கிழக்கு மாகாணத்தில் ஏனைய இரு மாவட்டங்களை விடவும் திருகோணமலை மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இதற்கு அதிபர்கள் போரைக் காரணம்காட்டி தப்பித்துக் கொள்ள முயல்வதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும். போர் எம்மை விட்டுப் போனாலும் போரை நாம் காரணம் காட்டி கொண்டிருப்பது நாம் சமூகத்துக்குச் செய்து கொண்டிருக்கின்ற துரோகமாகும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் தெரிவித்துள்ளார். 2010ஆம், 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜி.சீ.ஈ உயர்தர மற்றும் சாதாரணதரப் பரீட்சையில் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக நடத்தப்பட்ட கூட்டம் திருகோணமலை சென். ஜோசப் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போரதீவு குளத்திலிருந்து மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு-

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி போரதீவு குளத்திலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று முற்பகல எலும்புக்கூட்டை கண்டெடுத்ததாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது அந்த பிரதேசத்தில் காணாமல்போனதாகக் கூறப்படும் வயோதிபர் ஒருவரின் எலும்புக்கூடாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 இலங்கை அகதிகள் தப்பியோட்டம்-

இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட அறுவர் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவி;க்கப்படுகின்றது. குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்ற நீதிபதியுடன் சந்திப்பு-

ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி ஹிசாசி ஒவாடாவை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், அமைச்சர் பீரிஸ், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிக்கு விளக்கமளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த சந்திப்பின்போது இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக மேலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பொதுநலவாய கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த பவ்ரல் வலியுறுத்தல்-

பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென பவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பரில் வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத் தேர்தலின்போது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டுமன்றி பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர், தேர்தல் ஆணையாளரிடம் கோரியுள்ளார்.