தேவை ஏற்படின் விக்னேஸ்வரனுடன் பேசத் தயார்-ஜனாதிபதி-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனுடன் தேவை ஏற்படின் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் விக்னேஸ்வரனது கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் இன்று அலரி மாளிகையில் ஜனாதிபதியிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதில்லை. அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரே மாகாண சபைகளுக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார். அவ்வாறாகவே இம்முறை தேர்தலும் இடம்பெறவுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இலங்கை விஜயம்-

பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் எதிர்வரும் வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். இவ்வாறு அவரது விஜயம் அமையுமாயின் வத்திக்கான் ஆன்மீக தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மூன்றாவது பயணம் இதுவாகும். 1977ஆம் ஆண்டு பாப்பரசர் நான்காம் போல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அதேவேளை, 1995ஆம் ஆண்டு பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் இந்நிலையில் எதிர்வரும் வருடம் பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கை மற்றும் பிலிப்பீன்சுக்கான விஜயத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நவநீதம்பிள்ளையை சிவில் பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு-

இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன உட்பட 50 சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். இச்சந்திப்புக்கான அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பில் நவசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவிக்கையில், நவநீதம்பிள்ளையை எமது கட்சி உட்பட மனித உரிமை அமைப்புக்கள் ஊடக அமைப்புக்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகளென 50 அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கின்றோம். இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பிவைத்தோம். சந்திப்பதற்கான அனுமதி எமக்கு கிடைத்துள்ளது. இச்சந்திப்பின்போது விசேடமாக எதுவிதமான குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முறைப்பாட்டை முன்வைக்கப்படவுள்ளதோடு வட பகுதி மக்களின் காணிகள் பறிக்கப்படுவது, இராணுவ பிரசன்னம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தெரியப்படுத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வலியுறுத்துவதோடு இலங்கை அரசுக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.

யாழில் போட்டியிடும் ஆளும்கட்சி வேட்பாளர்கள்-

நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்லில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் யாழ். மாவட்டத்தில் போட்யிடுகின்றன. இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 ஆசனங்களும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்களும், லங்கா சமசமாஜ கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அகியவற்றுக்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளன. இதில் முதன்மை வேட்பாளராக ஈ.பி.டி.பியின் சின்னத்துரை தவராஜா போட்டியிடவுள்ளர். இதன்படி ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி) சார்பில் சி.தவராஜா, க.கமலேந்திரன், ஐ.சிறீரங்கேஸ்வரன், எஸ்.பாலகிருஸ்ணன், ஏ.சூசைமுத்து, சுந்தரம் டிலகலால், அ.அகஸ்டின், கோ.றுஷாங்கன், எஸ்.கணேசன் உள்ளிட்டோரும், சுதந்திர கட்சி சார்பில் இ.அங்கஜன், மு.றெமிடியஸ், எஸ்.பொன்னம்பலம், எஸ்.அகிலதாஸ், அ.சுபியான், சர்வானந்தன்;, எஸ்.கதிரவேல் ஆகியோரும், லங்கா சமசமஜாக் கட்சி சார்பில் ந.தமிழழகனும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எம்.எம். சீராஸூம் ஆளும்கட்சி சார்பில் வட மாகாணசபையில் போட்டியிடுகின்றனர்.

நாளைய இளைஞர் அமைப்பு வேட்பு மனுத்தாக்கல்-

வடமாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு நாளைய இளைஞர் அமைப்பு வேட்பு மனுவினை இன்று தாக்கல் செய்துள்ளது. நாளைய இளைஞர் அமைப்பு சுயேட்சைக் குழுவாகவே போட்டியிடவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியினரே யாழ். மாவட்டத்தில்; இளைஞர், யுவுதிகள் சார்பாக போட்டியிடவுள்ளனர். சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளரான அன்டனி ரங்கதுஷார யாழ். அரசாங்க அதிபரிடம் சுயேட்சைக் குழுவிற்கான வேட்பு மனுவை கையளித்துள்ளார்.