வடக்கில் வேட்புமனு தாக்கல்-
வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல அரசியல் கட்சிகள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. அமைச்சர்களாளன சுசில் பிரேமஜயந்த, டக்ளஸ் தேவானந்தா, றிசாட் பதியுதீன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் ஆகியோர் முறையே யாழ். மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். யாழ். மாவட்டத்திற்கான வேட்புமனுவை மாவட்ட செயலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி இன்று தாக்கல் செய்துள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி மற்றும் முதன்மை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். யாழ். மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை மக்கள் விடுதலை முன்னணியும் இன்று தாக்கல் செய்துள்ளது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். சிறீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸும் மன்னார் மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. அக்கட்சியின் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் பொருளாளர் முஹமட் அஸ்லம் ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை, வடமேல் மாகாண சபைக்கு புத்தளத்தில் போட்டியிடும் மூன்று கட்சிகளின் வேட்பு மனுக்கள் இன்றுகாலை புத்தளம் மாவட்ட செயலரிடம் கையளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் என்பனவே கையளிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணிகளுக்கு அரச வாகனங்கள் பயன்படுத்த தடை-
மூன்று மாகாண சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை 01ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. சகல சுயேச்சைக் குழுக்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தும் காலம் இன்றுடன் முடிவடைகின்றது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், அரச உடைமைகளையோ அல்லது அரச வாகனங்களையோ இத்தேர்தல்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சுதந்திரமான முறையில் இத்தேர்தல்களை நடாத்தவேண்டும். பொலிஸ் அதிகாரத்தினை கட்டாயம் பயன்படுத்தவேண்டிய அவசியம் உள்ளது. அதுபோல் மக்கள் தமது வாக்குப் பதிவுகளை சரிவர பயன்படுத்தவேண்டும். சுயாதீனமானதும் மக்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் மக்கள் தமது பொறுப்பினை உணர்ந்து செயற்படுவது அவசியமானது. அதைப்போன்று தேர்தல்களின்போது மக்களுக்கு ஏதும் அசௌகரியங்களோ, தேர்தல் மோசடிகளோ? நடைபெறுமாயின் உடனடியாக தேர்தல்கள் திணைக்களத்திடம் முறையிடவேண்டும். அதற்கான நடவடிக்கைகளினை தேர்தல்கள் திணைக்களம் மேற்கொள்ளும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 70 பேர் கைது-
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்ட 70பேரை கடற்படையினர் இன்றையதினம் கைது செய்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். படகின்மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுகொண்டிருந்தபோது கடற்படையினர் இவர்களை கைதுசெய்து திருகோணமலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு நகரில் இதனோடு தொடர்புபட்ட மூன்று வான் மற்றும் ஒரு கார் ஆகியவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இவை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களாக இருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்-
வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இதனைக் கூறியுள்ளார். மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும். அந்த உரிமை எவ்விதத்திலும் மறுக்கப்படக்கூடாது. இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களில் மக்களின் அடையாள அட்டை, வாக்களிக்கும் அட்டை என்பன தேர்தலுக்கு முதல்நாள் ஆயிரக்கணக்கில் பறிக்கப்பட்டன. இத்தேர்தல் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் சர்வதேச சமூகத்தின் அழுத்தமே எனவும் அவர் கூறியுள்ளார்.
சகல இன மக்களும் சமத்துவமாக வாழ்வதையே இந்தியா விரும்புகிறது:
சல்மான் குர்ஷித்- இலங்கையில் வாழ்ந்து வரும் அனைத்து இன மக்களுக்குமான சம அளவிலான புலமொன்றை இந்தியா விரும்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பெங்களுரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒத்துணர்வு நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தினை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியும் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டை எதிர்த்தும் நேற்று முன்தினம் கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக தேசியவாதக் குழுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தினால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று நடத்தப்பட்டிருக்கும் நிலையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய இராணுவத்தளபதியிடம் கடமைகள் கையளிப்பு-
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவிடம் இராணுவ தளபதிக்கான கடமைகள் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்தின் 19 ஆவது இராணுவத்தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுத்தளபதி பதவியிலிருந்து இன்றைய தினத்துடன் ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் வைத்து அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுவ தளபதிக்கான கடமைகளை தயா ரத்னாயக்கவிடம் ஒப்படைத்ததுடன் இராணுவ தளபதியின் உத்தியோபூர்வமான வாளையும் கையளித்துள்ளார்.
65 இந்திய மீனவர்கள் 9 படகுகளுடன் கைது-
சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 65 இந்திய மீனவர்கள் 9 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். ஊர்காவற்துறை வட கடலில் வைத்து 5 படகுகளுடன் 34 மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் 31 இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து 4 படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் ஊர்காவற்துறை மற்றும் திருகோணமலை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். பல்கலைக மாணவர்களை வெளியேற்றத் தீர்மானம்-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் விடுதிகளிலிருந்தும் வெளியேற்ற பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இன்று குறித்த வருட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரியரட்ணம் தெரிவித்துள்ளார்.
குடாநாட்டில் போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரிப்பு-
வட மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரித்துள்ளது. வங்கி ஊழியர்களே போலி நாணயத்தாள்களை இனங்காண்பதில் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, வடக்கில் போலி நாணயத்தாள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வங்கி ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதற்கு மேலதிகமாக போலி நாணயத்தாள் அச்சிட்ட ஒருவர் யாழ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து பணம் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் போலி நாணயத்தாளை இனங்காண்பது தொடர்பான செயலமர்வு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியக் கிளையினால் நடத்தப்படவுள்ளது வடமாகாணத்திலுள்ள சகல வங்கிகள், நிதி நிறுவனங்கள், லீசிங் நிறுவனங்கள் என்பவற்றின் ஊழியர்களுக்கே இந்தச் செயலமர்வு நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இச் செயலமர்வில் போலி நாணயத்தாளை இனங்காண்பது மற்றும் நாணயத்தாள் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் விளக்கவுரைகள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை காலை 9மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்தச் செயலமர்வு இடம்பெறவுள்ளது.