செப்டம்பர் 21ஆம் திகதி தேர்தல்-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மாகாண சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் இன்று நண்பகல் 12மணியுடன் நிறைவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி மாகாண சபைகளின் தேர்தலுக்காக கடந்த 25ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை வேட்புமனுக்கள் தக்கல் செய்யப்பட்டு வந்தன. 16 அரசியல் கட்சிகளும் 49ற்கும் அதிகமான சுயேட்சை குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

வட மாகாணசபை தேர்தலில் 11 கட்சிகள், 9 சுயேட்சைகள் போட்டி-

வடமாகாண சபைத் தேர்தலில் 13 அரசியல் கட்சிகளும் 10 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தன. எனினும் வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகளுள் யாதிக சங்வர்த்தன பெரமுண, எமது தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் மற்றும் முருகன் குமார வேல் தலைமையிலான சுயேட்சைக் குழுவினது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 20 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்த 3 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக மனு காணப்டாமையே காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 9 சுயேட்சை குழுக்களும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளன. யாழ்ப்பாணத்தின் 16 ஆசனங்களுக்காக 380பேர் போட்டியிடவுள்ளனர். 526 வாக்களிப்பு நிலையங்கள் யாழில் அமைக்கப்படவுள்ளன. யாழ் மத்திய கல்லூரியில் வாக்குகள் எண்ணும் பணி இடம்பெறவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 6 ஆசனங்களுக்காக 171 பேர் போட்டி-

வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்துள்ள வேட்புமனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள் 12 அரசியல் கட்சிகளும் 8 சுயேற்சைக்குழுக்களும் வவுனியா மாவட்டத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்நிலையில் செல்லையா விஜயகுமார் தலைமையிலான சுயேற்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என வவுனியா தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக் குழுக்ளையும் சேர்ந்த 171 பேர் 6 ஆசனத்திற்காக வவுனியாவில் போட்டியிடவுள்ளனர்.

தென் மாகாண மீன்பிடி அமைச்சர் கைது-

தென்மாகாண மீன்பிடி அமைச்சர் டி வி உபுல், தங்காலைப் பொலீசாரினால் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தங்காலை, மஹவெல ஊடாக மாத்தறை வரை செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதிமீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சாரதியான டபிள்யூ. எஸ். சந்ரசேன தங்காலை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தங்காலை பேருந்து சாலையின் பணியாளர்கள் சேவைப்புறக்கணிப்பி;ல் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் – கொழும்பு போக்குவரத்து நெருக்கடி-

யாழ்ப்பாணம் கொழும்பு வீதியில் சேவையில் ஈடுப்படும் தனியார் பேரூந்து சேவையில் நிலவும் நெருக்கடி நிலையை தீர்ப்பது குறித்து இன்று ஆய்வொன்று நடத்தப்படுகின்றது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், யாழ்ப்பாணம் – கொழும்பு போக்குவரத்தில் நிலவும் குறைப்பாடுகள், ஒழுங்கின்மை போன்ற விடயங்கள் குறித்து ஆராயப்படுகின்றது. வழி அனுமதி பத்திரமின்றி சில பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுகின்றமை காரணமாக இந்நிலை தோன்றியிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுகின்றது. அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுப்படுபவர்களை சட்டரீதியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு இன்றுமுதல் தீடீர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

வெளிநாடு செல்லும் பணியார்களுக்கு சிறப்பு பரீட்சை-

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் பணியாளர்கள் எதிர்வரும் காலங்களில் என் வீ கியூ 3 பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சவுதி அரேபியா செல்பவர்கள் இந்த பரீட்சையில் சித்தியடைபவர்கள் வீட்டு பணியாளர்கள் என்றழைக்கப்படாது இல்ல பாதுகாப்பு உதவியார்கள் என அழைக்கப்படுவார்கள் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரிவாக்கல் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர்களின் வருமானத்தை குறிப்பிட்டளவு அதிகரித்துக் கொள்ளமுடியும். இதன்மூலம் இலங்கை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பும் கிடைக்கும். இதற்கு சில முகவர்கள் நிலையம் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள். எனினும் இது சிறந்த நடைமுறையாகும் என்றே கருதமுடியும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

பார்வையற்ற ஏழு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்-

மாற்றுத்திறனாளிகளான பார்வையற்ற ஏழு பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால்  அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் இந்த பட்டதாரிகள் சித்தியடைந்துள்ளதை அடுத்தே அவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிஸாம் தெரிவித்துள்ளார். பிறப்பிலேயே கண்பார்வையற்ற பட்டதாரிகள் ஏழு பேருக்கு முன்னோடி நடவடிக்கையாக நேற்றைய தினம் நியமனங்கள் வழங்கப்பட்டதாக மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார். ஆசிரியர் நியமனம் பெற்றுக்கொண்ட மாற்றுத் திறனாளிகளில் 2 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றனர். மாகாணத்திற்குள் தத்தமது வசிப்பிடங்களை அண்மித்த பாடசாலைகளில் சேவையாற்றும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சிறை-

கலைஞர்களான ரூகாந்த குணதிலக்க மற்றும் சந்திரலேக பெரேரா தம்பதியினர் தங்கியிருந்த மத்தேகொடை பகுதி வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து அவர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பத்து பேருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேல்நீதிமன்ற நீதவான் குசல சரோஜினி வீரவர்தன முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். இதற்கமைய பிரதிவாதிகள் 9 பேருக்கு நான்கரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர 21,000 ரூபா வீதம் அபராதமும் இரண்டு இலட்சம் ரூபா வீதம் இழப்பீடும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் ஐந்தாவது பிரதிவாதி அங்கவீனராக இருப்பதால் அவருக்கு இலகு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிக்கு 11 வருட சிறை-

இலங்கை தமிழ் அகதி ஒருவருக்கு தமிழக நாகப்பட்டினம் நீதிமன்றம் ஒன்று 11 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. வெடிப்பொருள் கடத்த முற்பட்டார்; என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த இலங்கையருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சௌந்;தரராஜன் என்ற குறித்த இலங்கையர் திருச்சிராப்பள்ளி கே.கே நகரின் அகதி முகாமில் தங்கியிருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி கியூபிரிவு காவல்துறையினரால் இவர் கைதுசெய்யப்பட்டார். வாகனம் ஒன்றை சோதனை செய்த போது, அதில் ஜெலட்டின் குச்சிகள், செய்மதி தொலைபேசி என்பவற்றுடன் குறித்த இலங்கையர் கைதுசெய்யப்பட்டதாக த பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இவர் இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்த முற்பட்டார் மற்றும் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்த முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நாகப்பட்டிணம் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு கடுழிய சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.