142 உறுப்பினர்களை தெரிவு செய்ய 3785 பேர் போட்டி-

வடக்கு, மத்திய, மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 142 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக நடைபெறும் இத் தேர்தலில் 3785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சார்பாக 2279 வேட்பாளர்களும் சுயேட்சைக்குழுக்கள் சார்பாக 1506 வேட்பாளர்களும் போட்டியிடுவதாகத் தேர்தல் ஆணையாளர் கூறியுள்;ளார். இதேவேளை அரசியல் கட்சிகளின் 5 வேட்பு மனுக்களும் சுயேட்சைக் குழுக்களின் 4 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் 2 கட்சிகளினதும் ஒரு சுயேட்சைக் குழுவினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் 2 கட்சிகளின் வேட்புமனுக்களும் புத்தளத்தில் ஒரு அரசியல் கட்சியின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆஸி. செல்லத் தயாரான 39பேர் மாத்தறையில் கைது-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதியினர் நேற்றிரவு மாத்தறையில் வைத்து பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை, கனத்தகொட பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 39 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு அதில் 18 ஆண்களும் 07 பெண்களும் 14 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று மாத்தறைப் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் உரிமைக்கு மதிப்பளிக்கவும் –

அமெரிக்கா- கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதான அசம்பாவிதம் குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதற்குள்ள உரிமைக்கு மதிப்பளிக்குமாறு அமெரிக்க இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் கண்காணிப்பு குழு-

வடமாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு விரைவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகத்தினரை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒருவார காலமாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, வியாழனன்று மதியம் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள காலகட்டத்தில் தேர்தல் சூழ்நிலைகளை கண்காணிக்க சார்க் அமைப்பு, ஆசிய தேர்தல் ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு ஆகியவை வருகை தரவுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப கால அவகாசம் நிறைவு-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் குறித்த விண்ணப்பங்கள் கையளிக்கப்பட வேண்டுமென தேர்தல் செயலகம் குறிப்பிட்டிருந்தது. இதற்கான வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல் தேர்தல் மற்றும் பிரதேச செயலகங்களிலும், கிராமசேவகர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. இதேவேளை, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பிப்பதற்கு எதிர்வரும் 12ஆம் திகதிவரை சந்தர்ப்பம் காணப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

கொழும்பு தெற்கு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி-

கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8ஆம் திகதிமுதல் 13ஆம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தின் முதற்கட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 5ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார். கடலின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் நேரில்காண அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு 2016ல் துறைமுக விஸ்தரிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.