மிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுக நிகழ்வு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்றுமாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை வவுனியா மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான ஜி.ரி.லிங்கநாதன், எஸ்.சந்திரகுலசிங்கம், எஸ்.தியாகராஜா, இ.இந்திரராஜா, எம்.பி.நடராசா, வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், எம்.ரதன், மயூரன், ரவி ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மையாக வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை அனைவரும் வலியுறுத்தி உரையாற்றியுள்ளனர்

சட்டவிரோத குடியேறிகளே எமக்கு சவால்- கெவின் ரட்-

அவுஸ்திரேலியா எதிர்வரும் மாதத்தில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், சட்ட விரோதமாக குடியேறிகள் நாட்டிற்குள் வருவது தமக்கு சவாலாக உள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக தீர்வொன்றை பெறாமல் தேர்தலை சந்திப்பது கடினமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி சார்பாக போட்டியிடும் ரோனி அபோட்டுடன் போட்டியிடுவதாயின் இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண வேண்டிய கட்டாயம் எமக்கு முன்பாக இருக்கின்றது. செப்டம்பர் 7ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் எமது கட்சியை முன்னணிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என பிரதமர் கெவின் ரட் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதுவராலயங்களை சிலநாட்கள் மூட நடவடிக்கை-

தீவிரவாதிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் காரணமாக நேற்று மூடப்பட்ட அமெரிக்க வெளிநாட்டு தூதுவராலயங்களை எதிர்வரும் சனிக்கிழமை வரை மூட அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தீர்மானித்துள்ளது. வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிரதேசங்களில் உள்ள தூதுவராலயங்களே மூடப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் குறிப்பாக அல் கைடா இயக்கத்தினர் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற புலனாய்வுத் தகவலையடுத்து நேற்று 21 தூதுவராலயங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், முஸ்லீம்களின் புனித ரம்ழான் நிறைவடையும் வரை யேமனில் உள்ள தமது உயர் ஸ்தானிகராலயத்தை மூட தீர்மானித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்கர்கள் இந்நாட்களில் தமது வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அமெரிக்க ராஜாங்க திணைக்கம் கூறியுள்ளது.

மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக வலியுறுத்தல்-

இலங்கை கடற்பிராந்தியத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், தமிழக மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துவருவதாக மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை கடற்பகுதியில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட 29 மீனவர்களின் குடும்பங்களுடன் கலந்துரையாடிய வி.நாராயணசுவாமி, இலங்கை கடலில் மீன்பிடிக்க உரிமை வேண்டுமாயின் அதற்கு இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார் எனவே இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தமிழக முதலமைச்சரை வலியுறுத்துமாறு நாராயணசாமி மீனவர்களின் உறவினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் களஞ்சியசாலை திறந்து வைப்பு-

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய கொள்கலன் களஞ்சியசாலை மற்றும் இறங்குதுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த களஞ்சியசாலை சீனாவின் நிதி உதவியுடன் சுமார் 1000 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வருடத்துக்கு 2.5 பில்லியன் கொள்கலன்களை ஏற்றி இறக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கலன் களஞ்சியசாலை மற்றும் இறங்குதுறை திறந்து வைக்கப்படுவதன் மூலம் கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவு ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரிக்குமென அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதம்-

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேசசெயலர் பிரிவில் நேற்றுமாலை வீசிய சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதமடைந்துள்ளன இவற்றில் 15 வீடுகள் முழுமையாகவும், 48விடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கரடியனாறு பகுதியில் 10 வீடுகள் முழுமையாகவும், 7 வீடுகள் பகுதியளவிலும், மரப்பாலம் பகுதியில் 5 வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியாகவும், கித்துல் பகுதியில் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமைடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதிகளுக்கு சென்ற உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் மற்றும் அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டதுடன் சேத மதிப்பீடுகளையும் மேற்கொண்டு;ள்ளனர்.

அரியாலையில் வெடிபொருள் வெடிப்புச் சம்பவம்

குப்பைக்கு தீ மூட்டியபோது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததில் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியாலை பூம்புகார் 3ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்த குப்பைகளை காணி உரிமையாளர் தீ மூட்டிய வேளையிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த இப்பகுதியில் 2010ஆம் ஆண்டில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 500 குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. அம்பகமுவ பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட 368 குடும்பங்களைச் சேர்ந்த 1,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் 4 பாதுகாப்பு முகாம்களை நிறுவியுள்ளதாகவும் கொட்டகலை நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிறி தெரிவித்துள்ளார். நுவரெலியா பிரதேசசெயலகப் பிரிவில் கொட்டகலையில் 90 குடும்பங்களும், ருவன்புரவில் 17 குடும்பங்களும், நுவரெலியா நகரத்தைச் சேர்ந்த 80 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை கண்டி மாவட்டத்தின் கம்பளை, சிங்ஹாபிடிய பகுதியில் மண்சரிவு அபாயம் தொடரும் நிலையில் இப்பகுதியில் இருந்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் கம்பளை, தர்மசோக விகாரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இக்குடும்பங்;களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்க கம்பளை பிரதேச செயலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நேற்றையதினம் இப்பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.