வட மாகாணசபைத் தேர்தலை இரத்து செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுப்பு-

வட மாகாணசபைத் தேர்தலை இரத்துச் செய்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த பிறகு நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.  ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய வடமாகாண சபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால், நாட்டின் அரசியல் சாசன சட்டத்தின்படி, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என அரச தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும் சிங்கள ஜாதிக பெரமுன ஒரு அரசியல் கட்சி என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தேர்தல்கள் ஆணையாளர் அந்தக் கட்சியை இதுவரை அங்கீகரிக்கவில்லை என வழக்கு விசாரணையின்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிறீஸ்கந்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

வவுனியாவில் ஒலிபெருக்கி தொடர்பில் கட்டுப்பாடு-

வவுனியா பிரதேச செயலர் பிரிவிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களில், ஒலிபெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள்புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேசசெயலர் கா.உதயராசா சகல வழிபாட்டு தலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். வவனியா பிரதேச செலயாளர் பிரிவில் அதீத ஓசையுடன் ஒலிக்க விடப்படும் ஒலிபெருக்கிகளால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே இவ் விடயம் தொடர்பில் ஒவ்வொரு மத வழிபாட்டு தலங்களும் தத்தமது ஆள்புல எல்லைக்குள் அதாவது உட்பிரகார எல்லைக்குள் ஒலிக்க விடுவதற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அச் செயற்பாடு பின்பற்றப்படாத நிலை சில மதத் தலங்களில் காணப்படுகின்றன. எனவே புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கூடிய கவனமெடுத்து தமது வழிபாட்டு தலங்களில் ஒலிக்க விடப்படும் ஒலிபொருக்கிகளின் ஓசையை உட்பிரகாரத்தினுள் மாத்திரம் ஒலிக்கவிடவும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

புங்குடுதீவு கடற்பகுதியில் மேலும் ஒரு சடலம்-

யாழ் தீவக கடற்பகுதியில் மற்றுமொரு ஆணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த சடலத்துடன் கரையொதுங்கியதாக இதுவரையில் ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக யாழ்.தீவக கடற்கரைப் பகுதியில் தொடர்ச்சியாக சடலங்கள் கரையெதுங்கி வருகின்றன. குறித்த சடலம் மீட்கப்பட்டு சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலீசாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவருக்கு 35 முதல் 45 வரையான வயது இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையில் தீவகக் கடற்பகுதியில் 7 சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 சடலங்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளன. அதன்படி அதில் 2 ஆண்களது சடலங்களும் மன்னாரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆணின் சடலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரது என்றும் அடையாளம் காணப்பட்டது. எனினும் மீதமானவற்றில் பெண் ஒருவரது உடலிலும் குழந்தை ஒருவரது உடலிலும் உயிர்பாதுகாப்பு அங்கி காணப்பட்டுள்ளது. இவர்கள் அவுஸ்திரேலியா சென்றவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பேராசிரியர்களை நாட்டிற்கு அழைக்கத் தீர்மானம்-

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பல்கலைக்கழக பேராசிரியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது உடன்படிக்கைகளின் பிரகாரம் கடந்த 30 வருடங்களுக்குள் பேராசிரியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஷெனிகா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் நாட்டுக்கு மீண்டும் திரும்பவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு பேராசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றமையினால் வெளிநாடு  சென்றுள்ள பேராசிரியர்கள் நாட்டுக்கு திரும்பும் பட்சத்தில் அவர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

பேர்டி பிரேம்லாலின் இணைப்புச் செயலாளர் இடைநிறுத்தம்-

வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவின் இணைப்புச் செயலாளர் விஜயரத்ன ஹேரத் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த இடைநிறுத்தம் வட மத்திய மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாகாண கல்வி பணிப்பாளர் நிர்மல ஏகநாயக்கவை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவின் இணைப்புச் செயலாளர் விஜயரத்ன மாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றி வருகின்றார்.

விசாரணை செய்ய இராணுவத்துக்கு அனுமதியில்லை-மன்னிப்புசபை-

கம்பஹா, வெலிவேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்;டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடாத்த இராணுவத்தினரை அனுமதிக்ககூடாது என அனைத்துலக மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. குடிநீருக்கு போராட்டம் நடத்தியவர்கள்மீது படையினர் தாக்குதல் நடத்தியபோது அதில் மூவர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதனையடுத்து உரிய விசாரணைகளை நடத்துவதற்காக இராணுவத்தினர் விசாரணைப்பிரிவு ஒன்றை அமைத்துள்ள நிலையில், இதனை கண்டித்துள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பொலி ட்ரெஸ்கொட், தமது தவறுகள் தொடர்பில் இராணுவம் விசாரணை செய்வது என்பது முற்றிலும் தவறான விடயம் என குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விசாரணைகள் பக்கசார்பற்ற வகையில் நடத்தப்படவேண்டும் என்று ட்ரெஸ்கொட் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடு, சட்டரீதியாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தாம் செய்த தவறுக்காக படையினரே விசாரணை நடத்துவது மீண்டும் அந்த மக்கள்மீது பலப்பிரயோகத்தை மேற்கொள்வதற்கு சமனான விடயம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.