சர்வதேச அழுத்தங்களே தேர்தல் நடத்துவற்கு காரணம்- கூட்டமைப்பு வேட்பாளர் த.சித்தார்த்தன்-

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்,

Sithar ploteஇங்கு கருத்துரைத்த திரு.சித்தார்த்தன் அவர்கள்,

இந்தத் தேர்தலை சாதாரண ஒரு மாகாணசபைத் தேர்தலாக நாங்கள் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் வருவதற்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள்தான் நிச்சயமாக காரணமாக இருந்திருக்கின்றது. இந்நாடுகள் அனைத்துமே மிகப் பெரிய அழுத்தத்தை இலங்கை அரசுமீது கொடுத்திருந்தது. அதனால்தான் இந்த மாகாணசபைத் தேர்தல் வருகின்றது.

இந்தத் தேர்தலின் பெறுபேறுகளை எங்களுடைய விடயத்திலே அக்கறையுள்ள உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. ஆகவே தமிழ்மக்கள் ஒரு சரியான பதிலை, ஒரு உறுதியான செய்தியை இந்தத் தேர்தல் மூலம் கொடுக்க வேண்டும்.

நான் இந்தத் தேர்தல் சம்பந்தமாக பார்க்கின்றபோது, மக்கள் அக்கறையெடுத்து வாக்களிக்கச் செல்வார்களா? என்ற கேள்வியெழுகிறது. ஏனென்றால் கடந்தகால தேர்தல்களைப் பார்க்கின்றபோது மக்கள் தேர்தல்களிலே ஆர்வம் காட்டுவது குறைவு. இப்போதுகூட மக்கள் மத்தியில் அந்த ஆர்வம் நிச்சயமாக இல்லை. எனவே அந்த ரீதியிலே நாங்கள் மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தினை எடுத்துக்கூறி அவர்களை வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்வதும், அவர்களை வாக்களிக்கச் செய்வதும்தான் தொண்டர்கள் மற்றும் கட்சிகளைச் சார்ந்தவர்களின் முதலாவது கடமையாக இருக்கவேண்டும். வாக்களிப்பதன் மூலம்தான் தமிழ்மக்கள் இன்றும் தங்களுடைய உரிமையை வேண்டி நிற்கின்றார்கள் என்கிற ஒரு செய்தியை கொடுக்க முடியும்.

இன்று எங்களுக்கிருக்கின்ற ஒரேயொரு பலம் இந்த வாக்கு. இந்த வாக்கின்மூலம் ஒரு நியாயமான செய்தியினை உலகத்திற்கு சொல்லி எங்களுடைய பிரச்சினையிலே அக்கறை காட்டுகின்ற நாடுகளின் அழுத்தத்தின்மூலம் ஒரு நியாயமான தீர்வினைக் கொண்டுவர முடியுமென நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனுபவங்கள் கற்க சாலமன் தீவு விருப்பம்- இலங்கை மற்றும் சொலமன் தீவுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட நிலையில் இலங்கையிடமிருந்து பல விடயங்களை தமது நாடு கற்றுக்கொள்ள வேண்டும் என அந்த நாட்டிற்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பான ராஜதந்திர ஒப்பந்தமொன்று அண்மையில் நியுயோக்கில் வைத்து சொலமன் தீவின் நிரந்தர பிரதிநிதிக்கும், இலங்கையில் பிரதிநிதி பாலித்த கொஹொனவுக்கும் இடையில் கைச்சாத்தானது. இந்த சந்திப்பின்போதே சொலமல் தீவின் பிரதிநிதி கொலின் பெக் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். ராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட நிலையி;ல் இருநாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர அரசியல் சமூக, பொருளாதார மற்றும் கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் தேர்தல் வன்முறைகளுக்கு அதிக வாய்ப்பு- எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய மாகாண சபைத் தேர்தலுக்காக அரச சொத்துக்கள் பாரியளவில் பயன்படுத்தப்படுகின்றன. அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்கள் ஏனைய மாகாணங்களை விட இங்கு கூடியளவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் ஊர்வலங்களும், வாகன பேரணிகளும் இடம்பெறுகின்றன. இதனை பொலீசாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் நீதியான தேர்தலை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் ன அவர் குறிப்பிட்டுள்ளார்.