வடக்கில் கூட்டமைப்பை ஐ.ம.சு.மு. தோற்கடித்தால் மட்டுமே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் : திஸ்ஸ விதாரண
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோற்கடித்தால் மட்டுமே நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் கண்டு நாட்டை ஐக்கியப்படுத்த முடியும் என்று முன்னணியின் பங்காளிக் கட்சியான லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் இளைஞர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி அரசியல் செய்துகொண்டிருக்கின்றது. எந்தவொரு நல்ல விடயத்தையும் விமர்சித்தே வருகின்றது. இது சர்வதேசமட்டத்தில் இயங்குகின்ற இலங்கைக்கு எதிரான சக்திகளுக்கு சிறந்த ஆயுதமாக அமைகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கு மக்களின் இதயங்களை வெல்வதற்கு வடக்குத் தேர்தலை சுயாதீனமாகவும் நேர்மையானதாகவும் நடத்தவேண்டும். இதனை அரசாங்கம் கவனத்திற்கொள்வது அவசியமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் பாரிய விளைவுக்கு வழிவகுக்கும் : சபையில் சம்பந்தன் எச்சரிக்கை
அரசியல் தீர்வு, 13ஆவது திருத்தத்திற்கு மேலான அதிகாரப்பகிர்வு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐ.நா. வுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் உறுதி மொழிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைப் புறக்கணிக்கவோ அல்லது தான்தோன்தோன்றித்தனமாக செயற்பட்டு இலங்கை – இந்திய உடன்படிக்கையை இரத்துச் செய்யவோ முயற்சிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடக்கிலே நிலவியுள்ள காணிப்பிரச்சினையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பதால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அங்கு நிலவும் நீதியற்றதும் நியாயமற்றதுமான நிலைமைக்கு தீர்வு காணுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது வடக்கு – கிழக்கில் எழுந்துள்ள காணி விவகாரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரேரணையை சமர்ப்பித்த அவர் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக உரை நிகழ்த்தியதுடன் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் காணி சுவீகரிப்பு இராணுவ மற்றும் சிங்களக்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களை புள்ளிவிபரங்களுடனும் முன்வைத்தார்.
சம்பந்தன் எம்.பி.யின் பிரேரணைக்கு அஸ்வர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை
வடக்கில் உருவாகியுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டு வரவிருந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பாக ஆளுந்தரப்பு எம்.பி.ஏ.எச்.எம்.அஸ்வர் எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினையால் நேற்று வியாழக்கிழமை சபை நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியினால் 10 நிமிடங்களுக்கு இடை நிறுத்தப்பட்டன.
பாராளுமன்றத்தில் நேற்று வடக்கில் உருவாகியுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தன் எம்.பி. சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை விவாதத்திற்கு சமர்ப்பிக்க முற்பட்ட போது ஒழுங்குப் பிரச்சினை கிளப்பிய அஸ்வர் எம்.பி.இவ்விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் 177ஃ2013, 178ஃ2013, 179ஃ2013, 180ஃ2013, 236ஃ2013, 237ஃ2013, 238ஃ2013 ஆகிய இலக்கங்களுக்கிடையிலான அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் அதேபோல் 145ஃ2013, 135ஃ2013, 205ஃ2013 ஆகிய இலக்கங்களிலான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுடன் அவற்றில் அமைச்சர் ஒருவரும் பிரதிவாதியாக இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் இது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட அமைந்திருப்பதற்கு அமைய விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாதென்று சுட்டிக் காட்டினார். அதன் பிரகாரம் இவ்விடயம் தொடர்பில் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் பிரதி சபாநாயகரிடமிருந்து தீர்ப்பொன்றை எதிர்பார்ப்பதாகவும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.
எனினும் இவ்விடயமானது சபாநாயகரின் முன்னிலையில் பல தடவைகளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்டு இணக்கம் காணப்பட்டதற்கமைய விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அஸ்வர் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்சினை தொடர்பில்லாததொன்று என ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ரவி கருணாநாயக்க எம்.பி. சுட்டிக் காட்டினார். இதேவேளை ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுர திஸாநாயக்க இதன் போது கருத்து வெளியிடுகையில், இவ்விடயம் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 3 தடவைகளுக்கும் அதிமாக பேசப்பட்டுள்ளது. அவற்றில் சபை முதல்வர், ஆளுந்தரப்பு பிரதம கொறடா இருவரும் கலந்து கொண்டிருந்தனர். வடக்கு மக்களின் காணி பிரச்சினைகள் பற்றி பேசுவது தொடர்பில் ஆளுந்தரப்பில் எவரும் அதன் போது ஆட்சேபம் வெளியிட்டிருக்கவில்லை.
எனவே வழக்குகள் தொடர்புபட்ட விடயங்கள் அல்லது ஏனைய காணி பிரச்சினைகளை பற்றி நாம் இங்கு பேச முடியும். ஆகையால் இந்த பிரேரணையை விவாதிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த நேரம் பிரேரணையை கொண்டு வருவதற்கு நாங்கள் இணக்கம் வெளியிட்டிருந்த அதேநேரம் உறுப்பினர் ஒருவர் சபையின் பிரேரணை தொடர்பில் பிரச்சினை கிளப்புவதற்கான உரிமையை மறுக்க முடியாது. வழங்கும் தீர்ப்வை தாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் தான் பிரேரணையின் பிரதிகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கிடைத்ததன் பின்னர் தான், அதன் உள்ளடக்கம் தெரியவரும் என்றும் ஆளுந்தரப்பின் பிரதம கொறடவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். எனினும் இவ்விடயம் பற்றி கட்சித் தலைவர் கூட்டத்தைக் கூட்டி சுட்டிக்காட்டி ஆராயும் பொருட்டு சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு இடை நிறுத்துவதாக சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி பிற்பகல் 2.15 க்கு சபைக்கு அறிவித்தார்.