Posted by plotenewseditor on 12 August 2013
Posted in செய்திகள்
தபால் மூல வாக்களிப்பு-
எதிர்வரும் வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களின்போது தபால் மூலம் வாக்களிக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்தல்கள் திணைக்களம் இதுவரை கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் தபால்மூலம் வாக்களிக்க 12 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தவிர குருநாகல் மாவட்டத்திற்காக 45 ஆயிரத்து 964 விண்ணப்பங்களும், கண்டி மாவட்டத்திற்காக 30 ஆயிரம் விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பவர்கள் குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் 15ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தபால் மூலமான வாக்களிப்புக்கள் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்-
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய வீடமைப்பு தொகுதி அமைக்கப்படவுள்ளது இதற்கான அனுமதி விரைவில் அமைச்சரவையினால் கிடைக்கப்பெறும் என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்டுள்ள வீடமைப்பு தொகுதியில் வசதிகள் இல்லாமை காரணமாகவே புதிய வீடமைப்புக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் கடமையில் சுமார் 40 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களிலேயே அதிகளவிலான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது.
தேர்தல் கடமையில் 40ஆயிரம் அரச ஊழியர்களை ஈடுபடுத்த நடவடிக்கை-
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் கடமையில் சுமார் 40 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களிலேயே அதிகளவிலான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாண மக்களின் பிறப்பு, இறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் கணனியில் பதிவேற்றம்- வடமாகாண மக்களின் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப்பத்திரங்களை கணனியில் பதிவேற்றம் செய்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களின் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையால், காணாமற்போன அல்லது அழிவடைந்த பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளை பெற்றுக்கொள்வதில் வடமாகாண மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாது என சுட்டிகாட்டப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்படாத எவரேனும் இருந்தால் உடனடியாக உரிய பிரதேச செயலகத்திற்கு சென்று அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளுமாறு பதிவாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
தேர்தல் வன்முறைகளை தடுக்க விசேட செயற்றிட்டம்-
தேர்தல் வன்முறைகளை தடுப்பதற்காக விசேட செயற்றிட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலனாய்வுப் பிரிவினரை பயன்படுத்தி தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றைத் தடுப்பதற்கான ஒழுங்குகளை செய்துள்ளதாக தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன அறிவித்துள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களிலுள்ள பிரதிநிதிகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் ஒத்துழைப்பும் இதற்காக பெறப்பட்டுள்ளது. தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் இதுவரை 10 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன குறிப்பிட்டுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் 5 முறைப்பாடுகளும், யாழ் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு முறைப்பாடுகளும், கண்டியில் ஒரு முறைப்பாடும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிராண்ட்பாஸ் தாக்குதல்; குறித்து அமெரிக்கா கவலை-
கொழும்பு,கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துக்கு அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம், மதஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களின்போது அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில், முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சம்பவங்களை கிராண்பாஸ் தாக்குதல் சம்பவம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அதன்மூலம், மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளியிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.