13.08.2013.
ஆஸி செல்ல முற்பட்டவர்கள் தடுத்து வைப்பு-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட 111 புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டம் பேருவளையிலிருந்து கடந்த 7 ஆம் திகதி ருவன்புத்தா என்ற படகுமூலம் சென்ற இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த 10ஆம் திகதியன்று காலி கடற்படை முகாம் பகுதியிலிருந்து 250 மைல் தொலைவில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடல்-

 வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல்கள் தொடர்பில், தேர்தல் இடம்பெறவுள்ள மாவட்டங்களின் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய கலந்துரையாடவுள்ளார். நாளை மறுதினம் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோல் எதிர்வரும் 16ம் திகதி தேர்தல்கள் ஆணையாளருக்கும், மாவட்ட உதவி ஆணையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் தொடர்பிலான முறைபாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதுவரையில் இவ்வாறான 87 முறைபாடுகள், கொழும்பு தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன.

இந்தியா இலங்கையிடம் இருந்து ஆயுதம் கொள்வனவு –

இந்தியா கடந்த மூன்று வருடங்களாக இலங்கையிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் பதில் வழங்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியா கடந்த மூன்று வருடங்களில் 235 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது. ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து இவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் –
சொல்ஹெய்ம்- இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான விசேட தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் தமிழ் அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்புடன் புலம்பெயர் தமிழர்கள் அஹிம்சை வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், ஜனநாயகத்தையும் பொருளாதார உரிமைகளையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். உள்ளக ரீதியில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்படாவிட்டால் சர்வதேச சமூகம் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளை நடத்த வேண்டும். யுத்தம் நிறைவடைந்து நான்காண்டுகள் கடந்துள்ளன. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தாமதம் ஏற்படுவதனை தொடர்ந்தும் நியாயப்படுத்த அனுமதிக்க முடியாது. இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை குறித்து இலங்கைக்கு வலுவான செய்தியொன்றை வழங்க வேண்டும் என நோர்வே முன்னாள் அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் மேலும் கூறியுள்ளார்.

 

 ஐ.நாவின் 24ஆவது கூட்டத்தொடரில் நவநீதம்பிள்ளை விசேட உரை-
ஐக்கிய நாடுகளின் 24ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் விசேட உரையாற்றவுள்ளார். இந்த 24அவது கூட்டத்தொடர் எதி;ர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 27ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. 47 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். அத்துடன் சில நாடுகளுக்கு எதிரான பிரேரணைகளும் இதன்போது தாக்கல் செய்யப்படவுள்ளன. இந்நிலையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 25ஆம் திகதிமுதல் 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்