எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவிற்கு விஜயம்-

எதிர்;க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். அவர் அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து, இந்திய அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளின்போது, வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படுமென கூறப்படுகிறது.

நீதியமைச்சர் ஹக்கீமின் இந்தோனேசிய விஜயம்-

நீதி அமைச்சர் ரவுக் ஹக்கீம் நாளைய தினம் இந்தோனேசியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆட்கடத்தல் மற்றும் தஞ்ச கோரிக்கையாளர்கள் குறித்த அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர். சர்வதேச ரீதியாக ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துதல், மற்றும் அரசியல் அந்தஸ்து கோரியுள்ளவர்களின் உரிமைகள் தொடர்பில் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த, புலம்பெயர்ந்த வாக்காளர்களின் விபரம் கோரல்-

2012 ஆம் ஆண்டின் வாக்காளர் தேர்வு இடாபில் பதிவு செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உயிரிழந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கிராம அலுவலர்களுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். அவர்களின் விவரங்கள் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியினருக்கும் வழங்கப்படவுள்ளன. வாக்காளர் அட்டைகளை உரியவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பயன்படுத்தித் தேர்தல் மோசடி செய்ய முற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்ப டுகிறது. 2012ஆம் ஆண்டின் வாக்காளர் தேர்வு இடாப்பில் பதிவுசெய்து வாக்காளர்களாக உள்ளவர்களில் யாராவது உயிரிழந்திருந்தால் அல்லது வெளிநாடுளுக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டால் அத்தகையவர்களின் பெயர் விவரம், தொடரிலக்கம் உள்ளிட்ட விடயங்களைப் பதிவுசெய்து அனுப்புமாறு கிராம அலுவலர்களிடம் தெரிவத்தாட்சி அலுவலர்களால் கோரப்பட்டுள்ளது.     யாழில் நான்கு இளைஞர்கள் கைது- யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி நேற்று அறிவித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட 4 இளைஞர்களையும், விசாரணையின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமரை மாநாட்டிற்கு அழைக்க அமைச்சர் டில்லி விஜயம்-

கொழும்பில் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாளை இந்தியா செல்லவுள்ளார். இந்தியா செல்லும் அவர், புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமருடனான சந்திப்பின்போது, கொழும்பில் நவம்பர் 15-17 வரை நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் உறுப்பு நாடு என்ற முறையில் பங்கேற்க வரும்படி முறைப்படி அழைப்பு விடுக்கவுள்ளார். எனினும் இக்கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகினறமையும், உலக நாடுகள் பங்கேற்கும் இக்கூட்டத்தை அரசியல் காரணங்களைக் கூறி தவிர்க்கக்கூடாது என மத்திய அரசு கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பளை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-

பளையில் நேற்றுமாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வரலக்ஷ்மி பூஜை வழிபாடுகள் இரட்டைக்கேணி அம்மன் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அவசரமாக வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் இருவர் எடுத்துச் சென்றுள்ளனர். சிகிச்சையின் பின்னர் மீண்டும் பளை நோக்கி வந்துகொண்டிருக்கையில், தலைக்கவசம் அணிந்திராத பயத்தினால் பொலீசாரை கண்டவுடன் வேறு ஒரு பாதைக்கு சைக்கிளை திருப்ப முனைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் பின்னால் வந்துகொண்டிருந்த பஸ் மோதியதிலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விபத்தில் பலியானவர் 54 வயதுடைய வயிரன் தியாகராசா என்றும், இவர் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர் எனவும் தெரியவருகிறது.

நவநீதம்பிள்ளைக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் மகஜர் அனுப்பி வைப்பு-

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை செல்லும் முன்னர் 47 அரசசார்பற்ற நிறுவனங்கள் அவருக்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று விசாரணை நடத்துமாறும், வடக்கில் உள்ள மக்களை தனிப்பட்ட ரீதியாக சந்தித்து தகவல்களை கேட்டறியுமாறும் அவை கோரிக்கை விடுத்துள்ளன. இதனை மேலும் சில விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் இந்த அமைப்புகள் மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நீதிமன்ற ஆவணங்கள், பொலீஸ் அறிக்கைகள், அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறு இந்த அமைப்புகள் கோரியுள்ளன. இதனை தவிர நவநீதம்பிள்ளை வடக்கு பகுதிக்கு விஜயம் செய்யும்போது, இராணுவம் அல்லது பொலீஸ பாதுகாப்பை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் இந்த அமைப்புகள் கோரியுள்ளன. அதேவேளை பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 800 பேர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து செயற்படும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றே நவநீதம்பிள்ளைக்கு மேற்படி மகஜரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா இலங்கை தொடர்பாக விசாரணை நடத்தவே ஐ.நா ஆணையாளரை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.