வரலாற்றுத் தேர்தலில் உங்களுக்கு வெற்றியென்றால் தமிழ்த் தேசியம் வட மாகாணத்தை ஆட்சி செய்யும்-
வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன்-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாம் அவரைச் சந்தித்தபோது எமக்கு தனது நம்பிக்கையை வெளியிட்டு வலுச் சேர்த்ததுடன் இத்தேர்தலில் நிச்சயம் உங்களுக்கே வெற்றியை மக்கள் பெற்றுத் தருவார்கள் எனத் தெரிவித்ததை நான் மறக்க முடியாதுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புகழ்பூத்த அரசியல் ஞானி தர்மலிங்கத்தின் புத்திரரும், புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் த.சித்தார்த்தனின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம், நவாலியில் வலி. மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கூறுகையில்,
வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தான் வெற்றி வாகை சூடிப் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி அமைப்பார்கள். இத் தேர்தலில் அரசு சார்ந்த எந்தக் கட்சியும் வெல்ல முடியாது. அந்தளவிற்கு தமிழர்கள் ஒற்றுமையுடன் அணிதிரண்டு விட்டனர்.
கடந்த கால சாத்வீகப் போராட்டம், அதன் பின்னர் ஏற்பட்ட அழிவுகள், பல ஆயிரக்கணக்கான போராளிகளின் இழப்புகள், பல இலட்சக் கணக்கான மக்களின் உயிரிழப்புகள், இன்னும் மீள முடியாத சுமைக்குள் தள்ளப்பட்ட பொதுமக்கள், ஊனமுற்றோர்கள், விதவைகள், அநாதைகள், பிணியாளர்கள் என எமது சமூகம் நொந்துவிட்ட நிலையில் உள்ளது.
இன்று 13ஆவது திருத்தத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று, திவிநெகும என்ற அழிவுச் சட்டம், 19ஆவது சரத்து மாற்றம், வடக்கு கிழக்கு துண்டிப்பு, காணி பறிப்புச் சட்டம், இவ்வாறாக அரசும், அரசுடன் இணைந்தவர்களும் ஒத்து ஓதி தமிழ் இனத்தை அழிப்பதற்கு துடிக்கின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அண்மையில் கூறும்போது, விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவே நிச்சயம் வெல்லும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேசும்போதும், வடக்கு மாகாணசபையை தமிழ்த தேசியக் கூட்டமைப்பே வெல்லும் எனவும் நாம் எமது பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்போம். ஆனால் காணி, பொலீஸ் அதிகாரம் தர மாட்டேன் எனவும் சூளுரைத்துள்ளார்.
இதுதான் ஒரு முக்கியமான விடயமாகும். நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெல்லுவோம் என்பதை மகிந்த ராஜபக்சவே கூறிவிட்டார். நாம் காணி பொலீஸ் அதிகாரம் தொடர்பாக பெரிதும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதனை நாம் சர்வதேசத்தின் வல்லமையுடன் பெற்று கூடுதலான அதிகாரங்களுடன் ஆட்சி அமைப்போம். இதற்குத் தமிழ் மக்கள் தமது பலத்தைக் காட்ட வேண்டும். இதற்காக அர்ப்பணித்து வெற்றியீட்ட முயல வேண்டும். தூங்கிக் கிடக்கின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களிக்க முன்வர வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். யார் உங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றாலும் உங்களது எண்ணம், சிந்தனை யாவும் வீடு என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது. இவ் வரலாற்றுத் தேர்தலில் உங்களுக்கு வெற்றியென்றால் தமிழ்த் தேசியம் வட மாகாணத்தை ஆட்சி செய்யும் என வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் வலி. தென்மேற்குப் பிரதேச சபை உப தவிசாளர் சண்முகம் சிவகுமார், வலி. தென்மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் சின்னத்துரை மகேந்;திரன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.