தேர்தலைப் பாதிக்கும் வகையில் இராணுவத் தலையீடு தொடர்கிறது
Captureவெலிவேரிய உயிரிழப்பு சம்பவத்தை பெரியதொரு விடயமாக எண்ணி சர்வதேச விசாரணை தேவை என்று கோஷமிடும் சிங்களக் கட்சிகள், இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் உயிரிழந்த போது ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார்கள் என்று கேள்வியெழுப்பிய  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் சித்தார்த்தன், இனிமேலாவது எல்லாச் சம்பவங்களையும் சேர்த்து விசாரிப்போம் என்று இவர்கள்  கூறுவார்களா? என்றும் வினவினார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பேட்டியின் விபரம் வருமாறு;
கேள்வி: இலங்கை வரவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்  நவநீதம்பிள்ளையை சந்திக்கும் வாய்ப்பு கூட்டமைப்பினருக்கு இருக்கிறதா?
பதில்: ஆம். தமிழ் மக்கள் இந்நாட்டில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும்  எடுத்துக்கூறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று நான்  நினைக்கிறேன்.
கேள்வி: எவ்வாறான விடயங்களை அவரிடம் நீங்கள் முன்வைக்க இருக்கிறீர்கள்?
பதில்: முக்கியமாக நாம் அடிக்கடி பேசிவரும் விடயங்களான இளைஞர்களின் விடுதலை பற்றி பேசவிருக்கிறோம். முதலாவதாக தடுப்புக்காவல்களில் நீண்டகாலமாக  விசாரணைகளின்றி இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, இன்றும்  இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வடகிழக்கில் உளவியல் ரீதியாக  அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் சம்பவங்கள் பல இடம்பெறுகின்றன அவை  பற்றியும் மேலும், காணிபறிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற பல விடயங்கள்  குறித்தும் பேசவிருக்கிறோம். இவை பலமுறை கூறப்பட்ட விடயங்களாக இருப்பினும், திரும்பத் திரும்ப இவற்றைக் கூறினால் தான் அவர்கள் இவ்விடயங்களை தமது  கவனத்தில் சரியாக எடுத்து அதற்கு ஒரு சரியான தீர்வை எமக்குப் பெற்றுத்  தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு வரும் கூட்டமைப்பு வேட்பாளர்களின்  பாதுகாப்புத் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை  எடுத்துள்ளது?
பதில்: அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடுகள் வரும்போது அது குறித்து தேர்தல்  கண்காணிப்புக் குழுவிடமும், தேர்தல் ஆணையாளரிடமும் பொலிஸாரிடமும்  அறிவிக்கிறோம். இதைத்தான் எம்மால் முதலாவதாக செய்யக்கூடியதாக இருக்கிறது. இதைவிட மிகக்கூடிய அச்சுறுத்தல்கள் வரக்கூடிய வேளையில் தான், மேலதிகமாக  என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என யோசிக்கலாம்.
கேள்வி: வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகிறது. இது  தேர்தல் வாக்களிப்புத் தினத்தில் எவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: இது தொடர்பில் நாம் சர்வதேசத்திடமும் இலங்கை அரசிடமும் பேசியிருக்கிறோம். உண்மையில் இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள், தேர்தல்  விடயங்களிலும் மக்களையும், வேட்பாளர்களையும் நேரடியாக பாதிக்கும் வகையில்  அவர்கள் ஈடுபடுகிறார்கள். இவை நிறுத்தப்பட வேண்டுமாயின் இராணுவம்  முகாம்களுக்குள் முடக்கப்படவேண்டும். ஆனால், அரசு இதை தங்களால்  முற்றுமுழுதாக செய்ய முடியாது என்று கூறுகின்றது. இருந்தபோதும், இது  தொடர்பில் நாம் சர்வதேசத்திடம் தொடர்ந்தும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். இது தொடர்பில், சர்வதேசம் நேரடியாக தலையிடாவிட்டாலும் மறைமுகமாக அரசுக்கு  அழுத்தங்களை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் இராணுவத்தினரின்  தலையீடு முழுமையாக இல்லாவிடினும், ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படும் என்று  நான் நினைக்கிறேன்.
கேள்வி: தெற்கில் முஸ்லிம் பள்ளிகளை அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் சிங்களக்  கடும் போக்காளர்கள் வடக்கில் புத்தர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்புக்  காட்டாமல் இருப்பது ஏன்?
பதில்: யுத்தம் முடிவடைந்ததன் பின் வடக்கு, கிழக்கிலே பெருமளவான விகாரைகள்  உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே இவற்றுக்கெதிராக நான்  கண்டனங்களை தெரிவித்திருக்கிறேன். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன், “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரைகள் அமைப்பது  புத்தபெருமானை அவமதிக்கும் செயல்’ என்று கூறியிருக்கிறேன். இதுவொரு  ஆக்கிரமிப்பின் அடையாளமாகவே நான் கருதுகிறேன். “யுத்தத்தில்  வென்றுவிட்டோம்; நீங்கள் தோற்கடிக்கப்பட்ட ஓர் இனம்’ என்ற மமதையிலே  செய்யும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே இதை நான் பார்க்கிறேன். பல  ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு செய்கிறது. அதிலொன்றுதான் இதுவும். பல  புத்த விகாரைகள் வட, கிழக்குப் பகுதிகளில் கட்டப்பட்டிருந்தாலும்  வழிபடுவதற்கு ஆட்களில்லாமல் அவை வெறுமையாகவே காணப்படுகின்றன. பௌத்தர்கள்  இருந்தால் அங்கு ஆலயம் அமைப்பதை ஏற்றுக்கொள்ளலாம். இது குறித்து நாம்  பேசினால், பௌத்த தலைவர்கள், கொழும்பு, காலியில் இந்தக்கோயில்கள்  இருக்கும்போது நாம் வட, கிழக்குப் பகுதியில் பௌத்த விகாரைகளை அமைத்தால்  என்ன? என்று கேட்கிறார்கள். கொழும்பிலும் காலியிலும் இராணுவமோ அரசாங்கங்களோ இந்துக்கோயில்களை அமைக்கவில்லை. அவற்றை அந்தந்த பிரதேசங்களில் வாழ்ந்த  இந்து மக்கள் தாங்கள் வழிபடுவதற்காக அமைத்தார்கள் ஆனால், வடகிழக்கில் புத்த விகாரைகள் அமைப்பது அவ்வாறல்ல. இவற்றை இராணுவம் எமது நிலங்களை  ஆக்கிரமிக்கும் நோக்கில் அமைக்கின்றது. அதையே நாம் எதிர்க்கிறோம்.
கேள்வி: வவுனியாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனரா?
பதில்: அனைவரும் மீள்குடியேற்றப்படவில்லை. சிறுதொகையினர் மெனிக் முகாமில் இன்னும் இருக்கிறார்கள். எத்தனைபேர் அங்கு இருக்கிறார்கள் என்று அதிகமானோர் அவரவர் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்பட வில்லை. மிகப்பெரும்பான்மையான மக்கள்  இன்றும் எந்தவொரு வசதியுமில்லாது சிறு குடிசைகளில் மிகவும் கஷ்டமானதொரு  நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். வீட்டுத்திட்டங்கள் சரியான முறையில்  பூர்த்தி செய்யப்படவில்லை. இந்திய வீட்டுத்திட்டங்கள்கூட மக்களிடம் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை. இந்திய வீட்டுத்திட்டத்தில் கூட அரசு  பலதடைகளைச் செய்து வந்தது. தற்போது இந்தியா அந்த மக்களுக்கு பணத்தை  கொடுத்து வீடுகளை கட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், இந்த அரசு இன்றுவரை மக்களுக்கு எந்தவொரு வீட்டையும் கொடுக்கவில்லை. அழிக்கப்பட்ட  வீடுகள் அழிக்கப்பட்டதாகவே இருக்கின்றன. மக்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். இதுதான் இன்றைய அவர்களின் நிலைமை. இன்று வன்னியிலே பல குடும்பங்கள்  பெண்களை தலைமையாகக் கொண்டுதான் இருக்கின்றன. ஆண்கள் யுத்தத்தில்  இறந்துவிட்டார்கள். அதனால் பெண்கள் தலைமை தாங்கி தமது குடும்பங்களை மிகவும் கஷ்டப்பட்டு வழிநடத்துகிறார்கள். இக்குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றன. இவர்களுக்கு உதவிசெய்து வாழ்வாதாரத்தை உயர்த்த  வேண்டுமென்ற கடமை அரசுக்கு இருந்தாலும், அபிவிருத்தி என்ற பெயரில் பாதைகளை  அபிவிருத்தி செய்வதிலும் மின்சாரத்தை வழங்குவதிலுமே அரசு மும்முரமாக  செயற்பட்டு வருகின்றது. சுகாதார வசதிகளை வழங்குவதிலோ அல்லது அம்மக்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலோ அரசு ஒரு துணியளவுகூட அம்மக்களுக்கு  உதவமுன்வரவில்லை. இன்று இவற்றைப் பார்த்து அந்த மக்களுக்கு அடிப்படை  வசதிகள் பெற்றுக் கொடுப்பது நிச்சயமாக எங்களுடைய கடமையாக இருக்கிறது. இவ்விடயங்கள் தொடர்பில் நான் சம்பந்தனுடன் கதைத்திருக்கிறேன். அவரும் மாகாண சபைத் தேர்தலுக்குப்பின் அரசின் நிதியில் தங்கியிராமல் கூடியளவுக்கு எமது  வெளிநாட்டில் வாழும் உடன் பிறப்புகளான புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து  உதவிகளைப் பெற்று அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைப்  பெற்றுக்கொடுப்பதில் கவனம் காட்டுகிறார். எவ்வாறு அதிகாரப் பரவலாக்கல்  பிரச்சினையை நாம் எடுத்துச் செல்கிறோமோ, அதேயளவு வேகமாக இந்த மக்களின்  அடிப்படைத் தேவைப் பிரச்சினையையும் எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே  நாம் இன்று இருக்கிறோம்.
கேள்வி: மீள்குடியேற்றம் சரியாக இன்றும் இடம்பெறவில்லை என்று கூறினீர்கள். இது  மாகாண சபைத்தேர்தலில் எவ்வாறானதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள்  கருதுகிறீர்கள்?
பதில்: நிச்சயமாக வாக்களிப்பு வீதம் குறையும். அதேபோன்று அவர்கள் மத்தியில்  வாக்களிப்பதன் மூலம் என்ன பிரயோசனம் இருக்கிறது? என்றதொரு எண்ணப்பாடு  தோன்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று அந்த மக்கள் இன்று  பலவீனமானதொரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இந்த பலவீனத்தை அரசு  நிச்சயமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். இவற்றையெல்லாம் மீறி அவர்கள் தமது வாக்குகளைச் சிதறாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு  வாக்களிக்க வைப்பது என்பது ஒரு பெரிய விடயமாகும். அதற்கான முயற்சிகளை நாம்  எடுத்து வருகிறோம்.
கேள்வி: கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் உங்களது கட்சி எவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?
பதில்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள்  போராட்டங்களுக்கு ஆதரவாக நாம் செயற்பட்டு வருகிறோம். அதேபோன்று சட்டரீதியாக கொழும்பில் இருக்கும் வழக்கறிஞர்கள் குறிப்பாக சுமந்திரன் போன்றவர்கள்  அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நாம் உதவியாக இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நான்  சர்வதேசங்களில் இருந்து வருகின்ற தூதுவர்கள், பிரதிநிதிகளை சந்திக்கின்ற  பொழுது இதுதொடர்பில் அவர்களிடம் எடுத்துக் கூறிவருவதுடன், அவர்களை விடுதலை  செய்விப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
கேள்வி: யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தின் கல்வி எவ்வாறானதொரு நிலைமையில் உள்ளது?
பதில்: யுத்தத்தின் பின்னர் எமது குழந்தைகள் கல்வியில் ஒரு நாட்டம்  கொண்டுள்ளார்கள். எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் மின்சாரம் இல்லாத  நிலையில் கூட விளக்கை வைத்து படித்து ஓரளவுக்கு நன்றாக கல்வியில்  முன்னேற்றம் காட்டுகிறார்கள். இதை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை எடுத்து  வருகிறோம். இருந்தபோதும், இதுபோதாது. இன்றைய அவர்களின் வறுமையான  சூழ்நிலையில் பல பிள்ளைகள் பசியுடன் பாடசாலைகளுக்கு செல்கிறார்கள். இதனால்  படிப்பில் சரியாக நாட்டம் காட்ட முடியாது. தவிக்கிறார்கள். இதற்கு உணவு  கொடுப்பதாலோ அல்லது உடைகளை கொடுப்பதாலோ தீர்வை ஏற்படுத்த முடியாது அந்த  குடும்பங்கள் சொந்தக்காலில் நின்று வாழக்கூடிய வகையில் வாழ்வாதாரத்தை  கொடுக்கவேண்டும். அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தினால் அவர்கள் தாங்களாகவே முன்னேறி விடுவார்கள். கையேந்தி வாழும் நிலைமையை நாம் மாற்றவேண்டும். அந்நிலைமை நீண்டகாலத்திற்குச் செல்லக்கூடாது. அவ்வாறு செல்லவும் முடியாது. இதை மாற்றுவதற்கான நடவடிக்கையை நாம் நிச்சயமாக எடுக்கவேண்டும். இன்றும்  வெளிநாடுகளிலிருந்து வருவோரைச் சந்தித்து எமது மக்களின் அத்தியாவசியப்  பிரச்சினைகள் குறித்து பேசி ஒருசில வேலைகளைச் செய்து வருகிறோம். நாம்  மட்டுமல்ல, பலர் இவ்வாறான செயல்களை செய்து வருகிறார்கள். இருந்தபோதும் இவை  போதாது. வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றி  பெற்றால் வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி  செய்ய எண்ணியுள்ளோம். குறிப்பாக கல்வியில் கவனம் செலுத்தவிருக்கிறோம். இன்று நாம் மிகவும் பின்தள்ளிய நிலையிலேயே இருக்கிறோம். ஆகவே, கல்வியின்  மூலமே நம் முன்னேறமுடியும்.
கேள்வி: நாவற்குளி விகாரை மீதான தாக்குதல் குறித்து?
பதில்: இன்று வடக்கிலே வாழுகின்ற தமிழர்கள் இருக்கும் மனநிலையில், எந்தவொரு  தமிழராலும் நடத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நான் கருதவில்லை. இது  தேர்தலுக்காக அல்லது மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை தக்க வைத்திருக்க  வேண்டியிருப்பதற்காக ஏதாவதொரு குழுவால் செய்திருக்கக்கூடிய விடயமாகவே நான்  கருதுகிறேன்.
கேள்வி: வெலிவேரிய சம்பவம் பற்றி…?
பதில்: வெலிவேரியாவில் நடந்த சம்பவம் பற்றி சிங்களக்கட்சிகள் எவ்வளவு தூரம்  மிகவும் ஆக்ரோஷமாக சர்வதேச விசாரணை தேவை என்று கோஷமிட்டார்கள். ஆனால், எங்களுடைய தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்தபோது இவர்கள் எல்லாம் கண்ணை  மூடிக் கொண்டிருந்தார்கள். இந்த நாட்டிலுள்ள எதிர்க்கட்சியாக இருக்கட்டும்  அல்லது ஏனைய சிங்களக் கட்சிகளாக இருக்கட்டும். இவர்கள் இந்த வெலிவேரிய  சம்பவத்தை ஒரு பெரிய விடயமாக காட்டுகிறார்கள். அச்சத்தில் மூன்றுபேர்  இறந்தாலென்ன, முப்பது ஆயிரம் பேர் இறந்தாலென்ன அப்பாவி மக்கள் இவ்வாறு  இறப்பது ஒரு பிழையான விடயம். அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வெலிவேரிய சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அதேநேரத்தில் இதைக்கண்டித்தவர்கள் எமது  மக்கள் உயிரிழந்தபோது கண்டிக்காததையே தவறு என்று கூறுகிறோம். இன்றாவது  இவர்களுக்கு தெரிந்திருக்கிறது நாட்டில் இவ்வாறான பிரச்சினைகள்  இருக்கிறதென்று. ஆகவே, இனியாவது உணர்ந்து எல்லாச் சம்பவங்களையும்  விசாரிப்போம் என்று கூறுவார்களா? இன்றுவரை அவ்வாறானதொரு கருத்தை யாரும்  வெளியிடவில்லை.
கேள்வி: முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது பற்றி…?
பதில்: தமிழ் மக்கள் அடக்கப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் மக்கள் மத்தியிலும்  ஒருவிதமான மனரீதியான பயத்தை உருவாக்கி இந்த நாட்டில் நீங்களும் இரண்டாம் தர பிரஜைகள் தான் என்பதை ஞாபகப்படுத்தி வைத்திருப்பதற்கும், தமிழ் மக்கள்  இராணுவ ரீதியாக முற்றுமுழுதாக அடக்கப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் மக்கள்  இவை பற்றி சிந்திக்கக்கூடாது என்பதை ஞாபகப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே  நான் இவற்றைப் பார்க்கிறேன்.