செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுக நிகழ்வு-

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நேற்றுமாலை 3மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், செட்டிக்குளம் பிரதேச சபைத் தலைவர், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களான ஜி.ரி.லிங்கநாதன் (விசு), க.சந்திரகுலசிங்கம் (மோகன்) எம்.எம்.ரதன், செந்தில்நாதன் மயூரன், எஸ்.தியாகராஜா, எம்.பி.நடராஜா, எஸ்.ரவி, ஆர்.இந்திரராஜா, வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம் ஆகிய வேட்பாளர்களும், ஆதரவாளர்கள், பொதுமக்கள், கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது பொதுக் கூட்டமும், வேட்பாளர் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது; செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி ஆகியோரின் உரைகளுடன் ஒன்பது வேட்பாளர்களின் உரைகளும் இடம்பெற்றதுடன், பொது மக்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.

சுதந்திரக் கட்சி அலுவலகங்கள்மீது தாக்குதல் மற்றும் எரியூட்டல்-

வவுனியா தேக்கவத்தை, தோணிக்கல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுதந்திரக்கட்சி அலுவலகங்கள் நேற்றிரவு 9.30மணியளவில் தாக்கப்பட்டும், அந்த அலுவலகங்களில் இருந்த சுதந்திரக் கட்சி வேட்பாளர்களின் விளம்பரப் பலகைகள் மற்றும் பதாதைகள் எரியூட்டப்பட்டும் உள்ளன. அந்த சமயத்தில் சந்தேகத்தின் பேரில் சுயேட்சைக்குழு -இல-3இன் வேட்பாளர் ஆனந்தகுமார் பரணீதரன் என்பவரும், மூன்று முறிப்பு பிள்ளையார்கோவில் குருக்கள் சிறீ ஐயரும் வவுனியா பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு வவுனியா பொலீசில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.