முல்லைத்தீவு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விருப்பு இலக்கம் – 3 கந்தையா சிவநேசன் (பவன்) கருத்துப் பகிர்வு-

4கந்தையா சிவநேசன் ஆகிய நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே வட மாகாணசபைத் தேர்;தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். இந்த மாகாணசபைத் தேர்தலானது ஏனைய தேர்தல்களைப் போலல்லாமல் இது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்மூலம் கிடைக்கப்பெற்ற 13ஆவது திருத்தச் சட்டத்திற்கமைய இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது. இது மிக நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்த ஒரு தேர்தலாகும். திட்டமிட்டு இந்த சிங்கள அரசு இந்தத் தேர்தலை நடாத்தாமல் இவ்வளவு காலமும் இழுத்தடித்து வந்து, சர்வதேச மற்றும் இந்தியாவினுடைய அழுத்தங்களின் மூலம்தான் இந்தத் தேர்தலை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலையை அவர்களுக்கு உருவாகியிருக்கின்றது. சுதந்திரம் அடைந்ததிலே இருந்து சிங்கள அரசும், சிங்களப் பேரினவாதிகளும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வந்த சூழ்நிலையிலே உருவாக்கப்பட்ட சகல சாத்வீகப் போராட்டங்களும் நசுக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து வந்த ஆயுதப் போராட்டமும் இன்று நசுக்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தேர்தல் நடாத்தப்படுகின்றது. எனவே நாங்கள் இந்தத் தேர்தலிலே தோல்வியடைவோமாக இருந்தால் இன்று இருக்கின்ற சர்வதேச அபிப்பிராயங்களும், எங்களுக்கிருக்கின்ற ஆதரவுகளும் நிச்சயமாக அற்றுப் போய்விடும். காரணம் என்னவென்றால் உங்களுக்குத் தெரியும் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் யுத்தக்குற்றங்கள் கூட இந்தத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்துதான் அவற்றை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த 13ஆவது திருத்தச் சட்டம், அதிலே தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விடயங்கள் போதாது என்பதற்காக, அதை ஏற்றுக்கொள்ளாமல் தான் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இந்த ஆயுதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டதன் பின்பு எங்களுக்கு சட்டமாக்கப்பட்டிருக்கின்ற ஒரேயொரு விடயமாக தமிழ் மக்களுடைய தீர்வு விடயத்திலே இந்த 13ஆவது திருத்தம் மாத்திரமே இருக்கின்றது. அதையும் ஏதோ ஒரு காரணங்களுக்காக அல்லது ஒரு மிகக்குறைந்த அதிகாரங்களைக்கூட தமிழ் மக்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற அடிப்படையிலே பேரினவாத சக்திகள் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டுமென்று முனைப்புடன் செயற்படுகின்றன. இதனால் நிச்சயமாக இந்தத் தேர்தலிலே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தங்களுடைய 13ஆவது திருத்தத்துக்கான இந்த தேர்தல் குறித்த மகிந்தவினுடைய கொள்கையினை முறியடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏறக்குறை 82ஆம் ஆண்டு காலப்பகுதியிலே இருந்து தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்திலே பங்குபற்றியவன் என்ற ரீதியிலும் பல பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியவன் என்ற அடிப்படையிலும் இன்று இருக்கின்ற இந்த சூழ்நிலையிலேயே இந்தத் தேர்தலிலே நான் போட்டியிடுகின்றேன். எனவே மிக நீண்டகால போராட்ட அனுபவம், ஆயுதப் போராட்ட அனுபவம் மாத்திரமல்ல, அரசியல் ரீதியான அனுபவங்களைக் கொண்டிருக்கின்றபடியினால் நான் உங்களுடைய அபிலாசைகளை அல்லது உங்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிப்பேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். அததுடன் நிச்சயமாக உங்களுக்குத் தெரியும் இன்று அரசினால் முன்வைக்கப்படுகின்ற ஒரேயொரு காரணம் அபிவிருத்தி என்ற விடயம் மாத்திரமே. அபிவிருத்தி என்பது அது எங்களுடைய உரிமை. இது ஒரு தனிக் குடும்பம் எங்களுக்குக் கொடுக்கின்ற சொத்துக் கிடையாது. அல்லது பேரினவாதிகள் எங்களுக்குக் கொடுக்கின்ற ஒரு சொத்தும் கிடையாது. இது எங்களுக்குரிய அபிவிருத்தி. நாங்களே அந்த அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும். எங்களுடைய சொந்த உரிமைகளை இவர்கள் பிச்சை போடுவதாக கூறிக்கொண்டிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. எனவே இந்தத் தேர்தலிலே நீங்கள் எனக்கு வாக்களித்தால் நிச்சயமாக உங்களுடைய அபிலாசைகளையும் உங்களுடைய எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நான் செயற்படுவேன் என்று உறுதி கூறுகின்றேன்.

நன்றி. கந்தையா சிவநேசன் (பவன்)- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர், முல்லைத்தீவு மாவட்டம் – விருப்பு இலக்கம் – 3.