129 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு-

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது முதல் இதுவரை 129 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய மற்றும் பிங்கிரிய பகுதிகளில் அதிக வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென கபே குறிப்பிட்டுள்ளது. தாக்குதல், வானத்தை நோக்கி சுடுதல், அச்சுறுத்தல், கட்சி அலுவலகங்கள் தாக்கப்படுதல் போன்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் கடந்த வாரத்தில் குருநாகலில் பதிவாகியுள்ளன. அங்கு ஒரே கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் அதிகரித்து வருகிறது. யாழ் நெடுந்தீவு, மாத்தளை நாவுல, கண்டி வத்தேகம ஆகிய பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் எவ்வித தேர்தல் வன்முறைகளும் பெரியளவில் இடம்பெறவில்லை என கபே கூறியுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி நவநீதம்பிள்ளையை சந்திக்க நடவடிக்கை-

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆனையாளர் நவநீதம்பிள்ளைக்கும் குற்றப்பிரோனை மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்குமிடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குற்றப்பிரேரணை மூலம் கடந்த மார்ச் மாதம் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் முன்னாள் நீதியரசர் கலந்துகொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இதுவென்று கூறப்படுகிறது. அதேபோல் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஷிராணி பண்டாரநாயக்க சந்திக்கும் முதலாவது ராஜதந்திரி நவநீதம்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஷிராணி பண்டாரநாயக்க ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் சர்வதேச நீதியரசர்களின் கூட்டத்தில் உரையாற்றவிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறினால் அது முடியாமற் போயிருந்தது.

தேர்தல் ஆணையாளர் வடபகுதிக்கு விஜயம்-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு, ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் தகுதி பெற்றுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 542 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அவற்றில் 22 ஆயிரத்து 159 விண்ணப்பங்கள் நிராக்கப்பட்டன. அதிக அளவில் குருநாகல் மாவட்டத்தில் இருந்தே அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணிப்பிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து குறைந்த அளவாக 831 பேர் அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணபித்துள்ளனர். கண்டி மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களே அதிக அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இம்மாதம் 21ம்திகதி வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் விமானப்படையினர் இருவர் பலி, ஒருவர் படுகாயம்-

திருகோணமலை, பளிங்கு கடற்கரைப் பகுதியில் (மாபல்பீச்) உள்ள விடுமுறை விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விமானப் படையில் பணி புரியும் பெண் ஒருவரும் விமானப்படை வீரர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். விமானப் படையினால் நடத்திச் செல்லப்படும் விடுமுறை விடுதியிலேயே இத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானப்படை கோப்ரல் ஒருவர் குறித்த இருவர்மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின்கமான்டர் என்டி விஜேசூரிய தெரிவித்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் செய்தபின் விமானப்படை கோப்ரல் தன்னைத்தானே சுட்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரமே இச்சம்பவத்திற்கு காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் உண்மை நிலவரம் அறிய சந்தர்ப்பம்-பிரிட்டன்-

இலங்கையின் உண்மை நிலைமைகளை பார்வையிடுவதற்கு பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். உலகத் தலைவர்கள் வெளிவிவகார அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கு நாட்டின் உண்மையான நிலைமைகளை நேரில் கண்டுகொள்ள இந்த அமர்வு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் வர்த்தக மாநாட்டுக்கான முன்னோடி நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு லண்டனில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கை சமாதானத்தை எட்டியுள்ளதாகவும், இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் கிறிஸ் நோனீஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சார்க் கண்காணிப்பாளர்கள் 17பேர் வடக்கு தேர்தல் பணியில்-

வட மாகாண சபைத்தேர்தலை கண்காணிப்பதற்கு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) கண்காணிப்பாளர்கள் 17 பேர் கண்காணிப்பதற்கு வருகை தருவர் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின்போதும் அரசாங்கம், அரச சொத்துக்களை தேர்தல்கள் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வடக்கில் இராணுவத்தின் இடையூறுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி கட்சி உறுப்பினர்களின் விபரங்களை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் திரட்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

யாழ் – கொழும்பு புகையிரத சேவை ஆரம்பம்-

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவை அடுத்த சித்திரை புத்தாண்டு தினத்தில் ஆரம்பிக்கப்படும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ். பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றும்பேதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் யாழில் இருந்து புகையிரதத்தின் மூலம் கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் ஒரு நெருக்கமான உறவைப் பேணக் கூடிய நிலை காணப்பட்டது. இப்போது மறுபடியும் புகையிரதம் கிளிநொச்சி வரை வந்து செல்கின்றது எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தன்று யாழில் இருந்து கொழும்புக்கான புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த கால அவகாசம்-கபே

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பினர்களால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென சுதந்திரமானதும் நியாயமானதுமக்கான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அறிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 6 வார காலப்பகுதிக்குள் வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி வட மாகாண வேட்பாளர்களின் அரசியல் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு வருதல் மற்றும் வடமாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியா மாவட்ட வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிப்பதற்கு சுமார் ஒரு இலட்சம் பேரிடம் தேசிய அடையதள அட்டைகள் இல்லை. அதிலும் சுமார் 80ஆயிரம் பேருக்கு எந்தவிதமான அடையாள அட்டைகளும் இல்லை. இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சி வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அச்சுறுத்தல்; விடுக்கப்பட்டுள்ளது என ஆறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வடக்கில் இன்னும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்கள் மற்றும் அரச தரப்பினர் போட்டியிடாத பிரதேசங்களைச் சேர்ந்த வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைளுக்கு பாதுகாப்பு தரப்பினர் இடையூறு விளைவிக்கின்றனர். இந்நிலையில், எதிர்வரும் 6 வார காலப்பகுதிக்குள் வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி வட மாகாண வேட்பாளர்களின் அரசியல் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.