தாய்லாந்து மகாராணி இலங்கைக்கு விஜயம்-

தாய்லாந்தின் மகாராணியார் மஹாசக்ரி சிரின்டோம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் பெரஹரவை பார்வையிடவே அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின்போது, தாய்லாந்து மகாராணியார் கொட்டாஞ்சேனை, தீப்பதுத்தார பௌத்த ஆலயத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாளை சந்திப்பார் எனவும், இலங்கை விஜயத்தினை நிறைவு செய்துகொண்டு அவர் மாலைதீவு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தகுதி-

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஒரு இலட்சத்து 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்ததாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 22ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு இந்தியாவிற்கு அழைப்பு-

வட மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்காக இந்தியாவின் தேர்தல் ஆணையாளர் வீ.எஸ். சம்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறும் தேர்தல்களை கண்காணிக்குமாறு கோரி இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் அழைக்கப்பட்டுளளனர். வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடாத்தவே விரும்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இராஜதுரை எம்.பி தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைவு-

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பி.இராஜதுரை தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையில் ஹட்டனில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களை பயன்படுத்தல் குறித்து முறைப்பாடுகள் பதிவு- மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் 18 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல்கள் முறைப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமான நாள்முதல் இதுவரை தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 119 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

கனடாவும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்குமென அறிவிப்பு-

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கனடா உள்ளிட்ட எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உக்கு உள்ளிட்ட, 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிச்சர்ட் உக்கு, இம்முறை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும். எந்த ஒருநாடும் இதனை புறக்கணிக்காது என குறிப்பிட்டுள்ளார்.