தேர்தல் நடவடிக்கைகளை மும்மொழிகளில் முன்னெடுக்குமாறு கோரிக்கை-

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை மும்மொழிகளிலும் முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம், தேசிய மொழிகள் ஆணைக்குழு கோரியுள்ளது. விசேடமாக தேர்தலுக்கு பயன்படுத்தும் ஆலோசனை கையேடுகள், அறிவித்தல்கள் உள்ளிட்ட ஆவணங்களை மும்மொழிகளிலும் தயாரிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவதே இதன் நோக்கமெனவும், அதற்குத் தேவையான அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தேசிய மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க மேலும் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இந்திய தலைவர்கள் சந்திப்பு-
இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் ஐந்து தலைவர்களை சந்திக்கவுள்ளாரென இந்திய ஊடகங்கள் செ;தி வெளியிட்டுள்ளன. எதிர்;க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயத்தின்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், வெளிவிவகார செயலர் சுஜாதா சிங் உள்ளிட்டவர்களைச் சந்திக்கவுள்ளார். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜநாத் சிங்கை சந்தித்துள்ளார். இதன்போது, இந்திய இலங்கை மீனவ பிரச்சினை, வட மாகாணசபை தேர்தல், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.
தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடு பதிவு-
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 149 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலக முறைப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல்களுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்தப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 29 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குருநாகல் மாவட்டத்தில், 42 முறைப்பாடுகளும், மாத்தளை மாவட்டத்தில் 25 முறைப்பாடுகளும், கண்டி மாவட்டத்தில் 18 முறைப்பாடுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 17 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலக முறைப்பாட்டு பிரிவு மேலும் கூறியுள்ளது.
வடகொரிய மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணை-
வடகொரியாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்துள்ளது. இதற்கமைய தென்கொரியத் தலைநகரில் ஐ.நாவின் மூவரடங்கிய குழு விசாரணைகளுக்காக நேரடி சாட்சியங்களை பதிவுசெய்து வருகின்றது. விசாரணையாளர்கள் வடகொரியாவிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டமையினால் முதற்கட்ட விசாரணைகள் தென்கொரியாவில் இடம்பெறுவதுடன், அடுத்தகட்ட விசாரணைகள் ஐப்பானில் இடம்பெறவுள்ளன. துன்புறுத்தல், கடத்தல் மற்றும் சித்ரவதை முகாம்கள் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக வடகொரியாமீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்த விசாணைக்குழு அடுத்தாண்டு விசாரணை அறிக்கையை ஐ.நா சபையில் சமர்ப்பிக்கவுள்ளது
தபால்மூலம் வாக்களிக்க 1லட்சத்து 11ஆயிரத்து 383பேர் தகுதி-
மாகாண சபைத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க 1,11,383பேர் தகுதிபெற்றுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இம்முறை தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க ஒரு லட்சத்து 33ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1,11,383பேரே மேற்படி தபால்மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்கமைய தபால்மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டுகளை எதிர்வரும் 22ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து இலங்கை வந்தவர்கள் கைது-
சட்டவிரோதமான முறையில் படகுமூலம் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த 6பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உருமலைப் பகுதியில் வைத்து இவர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு ஆண்கள், பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டோர் தலைமன்னார் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.