உள்நாட்டில் தீர்வு கிடைக்காமையே வெளிநாடுக்கு செல்லக் காரணம்-
இரா. சம்பந்தன் எம்.பி- இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காணப்பட்டிருந்தால் நாம் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது. உள்நாட்டில் ஏமாற்றப்பட்டமையினாலேயே நாம் வெளிநாடுகளுக்குச் சென்று பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசவேண்டியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கில் இருப்பவர்கள் கனடா, இந்தியா உட்பட வெளிநாடுகளில் சென்று பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இதனால் எதுவும் நடக்காது. எமது உள்நாட்டுப் பிரச்சினையை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் பேசித் தீர்க்க வேண்டும். இதனை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் செயற்படவேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் நுவரெலியாவில் நடைபெற்ற வைபவமொன்றில் பங்கேற்று உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கருத்து குறித்து ஊடகமொன்றுக்கு தெளிவுபடுத்தும்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் நாம் வெளிநாடு செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது. டட்லி – செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் உரிய வகையில் நடைமுறைப்பட்டிருந்தால் கூட நாம் வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு மறைமுக முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இலங்கையின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13ஆவது திருத்தச் சட்டத்தினை மீறி செயற்படுவதற்கு அரசாங்கம் கடும் முயற்சி எடுத்துவருகின்றது. இந்நிலையில் உள்நாட்டில் பிரச்சினையை தீர்க்க முடியுமென்று நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும். உள்நாட்டில் தீர்வுக்கான வழிவகைகள் மூடப்பட்டமையினாலேயே நாம் வெளிநாடு செல்லும் நிலை ஏற்பட்டது. உள்நாட்டில் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வந்திருந்தால் நாம் வெளிநாடு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கமாட்டாது. உள்ளுரில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதனாலேயே நாம் வெளிநாடுகளுக்குச் சென்று அரசியல் தீர்வு குறித்து பேசவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே எமது நிலைப்பாட்டுக்கு காரணம் அரசாங்கமேயாகும். இது குறித்து சிந்தித்து அரசாங்கம் உரிய வகையில் பேச்சுக்களை ஆரம்பிக்க முன்வந்தால் நாமும் அதற்கு தயாராகவே உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்