வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பாகிஸ்தானுக்கு விஜயம்-
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கின்றார். எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கான அழைப்பிதழை பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் செரீப் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹீனா ரபானி ஆகியோருக்கு கையளிப்பதற்காக அவர் அங்கு செல்கின்றார். இதன்போது அமைச்சர் இருதரப்பு ராஜதந்திர உறவுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்க வசதி செய்து தருமாறு இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கோரிக்;கை-

இடம்பெயர்ந்துள்ள 11ஆயிரத்து 500 வாக்காளர்கள், இம்முறை மாகாணசபைத் தேர்தலில், வாக்களிப்பதற்கு வசதிகளை செய்துதருமாறு கோரி, விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்களின் தகைமை குறித்து ஆராயும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தமது சொந்த இடங்களில் வதியாதோர், மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கோரி விண்ணப்பிப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த காலஅவகாசம் கடந்த 12ஆம் திகதியுடன் முடிவடைந்ததாகவும், இதன்பொருட்டு வட மாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த வாக்காளர்கள் பொருபாலானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பீ.எஸ்.எம். சார்ள்ஸூக்கு சிறந்த பெண்மணிக்கான விருது-

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம் சார்ள்ஸூக்கு இந்த வருடத்தின் சிறந்த பெண்மணிக்கான விருது வழங்கப்படவுள்ளது. கொழும்பில் இன்று நடைபெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வொன்றில் இந்த விருது வழங்கப்பவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்களுக்கான முகாமைத்துவ நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் துறைசார் ரீதியில் இவ்வருடம் தெரிவுசெய்யப்பட்ட சில பெண்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவாகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் றொபின் மூடி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். தொழிசார் அபிவிருத்திகளையும் பெண்களின் முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் வகையில் 2012ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கனேடிய ஆலோசகருடன் சந்திப்பு-

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைப் பணிமனையான ‘அறிவகத்தில்’ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருடன் இன்று சந்திப்பை மேற்கொண்டுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நா.வை குகராசா, வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் த.குருகுலராஜா, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இச் சந்திப்பில் வட மாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் குறித்து கூட்டமைப்பின் பிரதி நிதிகளிடம் மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் கேட்டறிந்து கொண்டார்.

189 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு-கபே-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது தொடக்கம் இன்றுவரை 189 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. இதில் தேர்தல் சட்டங்களை மீறியதை தொடர்பில் 172 முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பில் 17 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 189 முறைப்பாடுகளில் இராணுவத் தொடர்புடைய 7 முறைப்பாடுகளும் சொத்து சேதம் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் தாக்குதல்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதென கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். மாகாண அளவில் மத்திய மாகாணத்தில் அதிக முறைப்பாடுகள் 91 பதிவாகியுள்ளதோடு வட மாகாணத்தில் 31 முறைப்பாடுகளும் மாவட்ட அளவில் பார்க்கையில் குருநாகலில் 45 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.