நவநீதம்பிள்ளை திருமலைக்கும் விஜயம் செய்ய ஏற்பாடு-
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தின்போது திருகோணமலைக்கும் செல்லவுள்ளார். ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐ.நா ஆணையாளர் நவநீதம்பிள்ளை பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளார். அவரது திருமலை விஜயத்தின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து சமகால நிலைமைகளை கேட்டறிந்து கொள்ளவுள்ளார்
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை-
சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க நேரிடுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீதிவான்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 785 பேருக்கு பற்றாக்குறை நிலவுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி பெலாரஸ் விஜயம்-
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 25ஆம் திகதி பெலாரஸ் விஜயம் செய்கின்றார். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெலாரஸ் ஜனாதிபதி எலக்சாண்டர் லுகஷென்கோ, பிரதமர் பேராசிரியர் மிகைல் மியாஸ்னிகோவிச், பெலாரஸ் தேசிய பேரவையின் குடியரசு கவுன்சிலின் தலைவர் எனடொலி ருபினோவ் மற்றும் பெலாரஸ் தேசிய பேரவை பிரதிநிதிகள் இல்லத் தலைவர் விலாடிமிர் அண்ட்ரெய்சென்கோ ஆகியோர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். வர்த்தகத் தூதுக் குழுவொன்றுடன் செல்லும் ஜனாதிபதி அங்கு நடைபெறவுள்ள வர்த்தக மன்றத்தில் பங்கேற்பதுடன், அம்மன்றத்தில் அந்நாட்டு பிரதமர் மியாஸ்னிகோவிச் உடன் விசேட உரையொன்றையும் நிகழ்த்துவாரென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
சட்டம், சமாதானம் தொடர்பான புதிய அமைச்சு உருவாக்கம்-
சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சு என்ற பெயரில் புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கீழ் செயற்படும் இந்த அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான பிரிகேடியர் நந்தன மல்லவராச்சி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக தெரிவித்துள்ளார். இந்நிலையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைச்சு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்தமாதம் 16ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டு. ஏறாவூரில் கைக்குண்டு மீட்பு-
மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை வீதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று இன்றுமுற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலீசார் தெரிவித்துள்ளனர். கிணற்றினுள் பொலீசாரும் படையினரும் இணைந்து சோதனையிட்டபோது கைக்குண்டு ஒன்றும் மாட்டு எலும்பு எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இக் குடிநீர்க் கிணறு அமைந்துள்ள காணியில் தற்போது உரிமையாளர்கள் மீளக்; குடியமர்ந்துள்ளனர். இவர்கள் கிணற்றினை துப்புரவு செய்த வேளையிலேயே இந்த கைக்குண்டு காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் காணி உரிமையாளர் பொலீசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்தே குண்டு மீட்கப்பட்டுள்ளது.