இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரசாரம்-

யாழ். இணுவில் பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கை இந்தவாரம் இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞரணி தலைவர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப.தர்சானந்த் ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியிருந்தனர். இதன்போது வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் அனைவரும் பெரும்பான்மையாக சென்று வாக்களிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளையிட வந்தவர்களுள் நால்வர் கைது

கொழும்பு, பம்பலப்பிட்டி டிக்மன் வீதியிலுள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டைக் கொள்ளையிட வந்த சந்தேகநபர்களில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில், பொலிஸ் காவலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். சம்பவத்தின்போது மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநாட்டில் பங்கேற்பதாக நவாஸ் செரீப் உறுதி-

இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் உறுதியளித்துள்ளார். நேற்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கான அழைப்பிதழை நவாஸ் செரீப்பிடம் கையளித்திருந்தார். இதன்போது பாகிஸ்தானிய பிரதமரால் இந்த உறுதி வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழ் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கையளிக்கப்பட்டிருந்தது. எனினும் இதில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியா இன்னும் உறுதியாக அறிக்கைவில்லை.

13ம் திருத்தச் சட்டம் முழுவதுமாக அமுல்படுத்தவும்-

பி.ஜே.பி- 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தேசிய பேச்சாளர் மீனாட்சி லகீ சென்னையில் ஊடகத்தினரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை உடன்படிக்கையின் கீழ் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதன் ஊடாக, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று மீனாட்சி லகீ மேலும் தெரிவித்துள்ளார்.

கனேடிய குழுவின் விஜயம்-

கனேடிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று வடமாகாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த குழு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன்போது எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளன. வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் கனேடிய அரசாங்கம் முக்கிய அவதானத்தை கொண்டிருப்பதாக அதன் பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர். யாழ். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று அப்பகுதி அபிவிருத்தி தொடர்பில் இக்குழு ஆராய்ந்துள்ளது.

யாழில் 55 ஏக்கர் காணியும், 46 வீடுகளும் ஒப்படைப்பு-

யாழ் குடாநாட்டில் 55 ஏக்கர் காணியும், 46 வீடுகளும், அவற்றின் உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. வட பகுதியில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய குறிப்பிட்டுள்ளார். இதன்படி மரதன்கேனி மற்றும் பளை ஆகிய பகுதிகளில் 52 ஏக்கர் காணியும், 7 வீடுகளும் அவற்றின் ஆரம்பமாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வலிகாமம் மேற்கில் உடுவில் கிராமத்திலுள்ள 39 வீடுகளும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையாளிக்கப்பட்டுள்ளன என இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் பெயரை சுயேட்சைக்குழு பாவிக்க முடியாது: சுரேஸ் எம்.பி-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரை பாவித்து சுயேட்சைக்குழு பிரசாரம் செய்வதை கண்டிக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு எந்த கட்சிகளோ இன்றேல் சுயேட்சைக் குழுக்களோ பாவிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தைக்கொண்ட ஜனநாயக ஐக்கிய முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரை பாவித்து பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றது. கொக்குவில் மஞ்சபதி முருகன் ஆலயத்திற்கு அருகாமையில், பிரசார அலுவலகம் ஒன்றினை திறந்துள்ளது இது தேர்தல் மோசடியாகும். அது மாத்திரமல்ல, வடமாகாணம் முழுவதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினை எதிர்க்க கூடியவர்கள், பிழை என்று சொல்பவர்கள். எவ்வளவு தூரம் வங்குரோத்து தனம் உடையவர்கள் என்பதை இதிலிருந்து உணர கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான வங்குரோத்து தனமான சுயேட்சைக்குழுவோ இன்றேல் ஏனைய கட்சிகளோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை பாவிப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை ஏனைய கட்சிகள் இன்றேல் சுயேட்சைக்குழுக்கள் பாவிப்பதனை தேர்தல் திணைக்களம் தடைசெய்ய வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது 5 கட்சிகளை உள்ளடக்கியதாகும். அவ்வாறே கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான கடிதம் தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்;ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால், இறக்கப்பட்ட சுயேட்சைக்குழ, அரசாங்கத்திடம் பல கோடி ரூபா பணத்தினை பெற்றுக் கொண்ட சுயேட்சைக்குழு மக்கள் மத்தியில் குழப்பநிலையை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாட்டை தேர்தல்கள் திணைக்களம் உடன் நிறுத்தவேண்டும். அந்த வகையில், கூட்டமைப்பின் வெற்றியை தடுப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. குழப்பநிலையினை ஏற்படுத்துவதற்கும் கூட்டமைப்பிற்கு விழும் வாக்குகளை விழாமல் பண்ணவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அம்பாறையில் இருந்து உத்தியோகத்தர்களை நியமிப்பது, இராணுவத்தினரை பயன்படுத்துவது, இவ்வாறான பல நடவடிக்கைகளை செய்து வருகின்றது, வாக்குவீதத்தினை குறைப்பதற்கு, குழப்பபுவதற்கு, செல்லுபடியற்ற வாக்குகளை கொண்டுவருவதற்கு, ஏதோ ஒரு வகையில், தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்லுவதை தடைசெய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது இது மிகமிக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸிக்கு ஆள் கடத்துபவர்களின் படகுகளை வாங்க ஆலோசனை-

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் வருவதை தடுப்பதற்கு ஆட்கடத்தலில் ஈடுபடும் இந்தோனேசியர்களிடமிருந்து அவர்களால் பயன்படுத்தப்படும் மோசமான நிலையிலுள்ள படகுகளை வாங்குவதற்கான தனது திட்டத்தை அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவரான டோனி அப்பொட் நேற்று வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக வரக்கூடிய முன்னணி வேட்பாளராக டோனி அப்பொட் கருதப்படுகின்றார்.. கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூத்தை விட டோனி அப்பொட்டே முன்னிலையில் உள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவிலுள்ள ஆட்கடத்தலில் ஈடுபடும் குழுக்களின் உதவியுடன் படகுகளில் அபாயகரமான கடல் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா வருவது வழமையாகியுள்ளது. இதன் காரணமாக அவுஸ்திரேலிய தேர்தல் பிரசாரங்களில் புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை முறியடிப்பது செல்வாக்கு செலுத்தும் விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் டார்வின் நகரில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய டோனி அப்பொட் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களிடமிருந்து படகுகளை வாங்கும் தனது திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் வருவதைக் தடுப்பதற்கான தனது 440 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான திட்டமானது ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் மேற்படி மோசமான மீன்பிடிப் படகுகளை கட்டணம் செலுத்தி வாங்குவதுடன் இந்தோனேசியாவிலுள்ள 100 கிராங்களில் ஆட்கடத்தல் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு ஆட்களை நியமிப்பது, ஆட்கடத்தல் தொடர்பில் வெற்றிகரமான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்குவது என்பவற்றை உள்ளடக்கியுள்ளதாக டோனி அப்பொட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.