ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்-

1360_content_IMG_0568ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளை ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்றுமுற்பகல் இலங்கைக்கு வருகைதந்துள்ளார். ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை அவர்களுடன் மேலும் நான்கு பிரதிநிதிகளும் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் முதலில் ஐ.நாவின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ஸ ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கிம், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், சட்டமா அதிபர் பாலித்த பெர்னான்டோ ஆகியோரையும் நவநீதம்பிள்ளை சந்திப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநகர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை பேச்சுவாரத்தைகளை நடாத்தவுள்ளார். இந்த விஜயம் நிறைவுபெற்றதும் ஐ.நா உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கையொன்றையும் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

12ஆயிரம் ஆண்டுள் பழைமையான எலும்புக்கூடு கண்டுபிடிப்பு-

களுத்துறை புலத்சிங்கள பாஹியன்கல குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எழும்புக்கூடு 12ஆயிரம் வருடங்கள் பழமையானதென தெரியவந்துள்ளது. ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள காலநிர்ணய அறிக்கையில் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாஹியன்கல குகையிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட பழமை வாய்ந்த மனித எழும்புக்கூடு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடமொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த எழும்புக்கூட்டினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியாவின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது கடந்த ஜூன் மாதம் பாஹியன்கல குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பழமையான எழும்புக்கூடு இலங்கையில் முதற்தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதனின் முழுமையான எழும்புக்கூடு என்று கருதப்படுகிறது.

கொழும்பு மாநகரசபை ஆவண எரிப்பு குறித்து விசாரணை ஆரம்பம்-

கொழும்பு மாநகர சபையின் பெருமளவு ஆவணக் கோவைகள் ஏரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேல் மாகாண சபை அறிவித்துள்ளது. மாகாண ஆணையாளரின் தலைமையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபை அலுவலகத்திலிருந்த ஆவணக் கோவைகளே ஏரிக்கப்பட்டுள்ளன. 126 ஆவணக் கோவைகளை அழிப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு மேற்பட்ட ஆவணக் கோவைகள் ஏரிக்கப்பட்டுள்ளன. ஊழல் தொடர்பான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் வகையில் இந்த ஆவணக் கோவைகள் ஏரிக்கப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்வதே விசாரணைகளின் நோக்கமாகும் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

சவூதி – இலங்கை தொழில் உரிமை பேச்சுவார்த்தை-

சவுதி அரேபியாவின் தொழில் உறவு அமைச்சர் அடேல் பாகேனிற்கும், அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்திக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளதாக அரபு நியுஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, சவுதி அரேபியாவில் தொழில் செய்கின்ற இலங்கையர்களின் தொழில் உரிமைகள் தொடர்பில் பேச்சிவார்த்தை நடத்தியதாக தூதுவர் வீ.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அங்குள்ள இலங்கை பணியாளர்கள் சவுதியில் தொடர்ந்து பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே அவர்களுக்கான தொழில் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடியை சந்தித்துள்ளது-தேசிய பிக்குகள் முன்னணி-

இலங்கையில் தற்போது பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய பிக்ககள் முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அதன் செயலாளர் நீதியாவல பாலித தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு தற்போது முகம் கொடுக்க முடியாத அளவில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலைமை எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் பின்னர் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.