இந்திய புலனாய்வுத்துறை இரண்டாவது முறை எச்சரிக்கை-

தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்களை நடத்தக்கூடும் என இந்திய புலனாய்வுத் துறையினர் இரண்டாவது முறையாக எச்சரித்துள்ளனர். ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையிலிருந்து 35 தீவிரவாதிகள், தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து புலனாய்வுத்துறை இரண்டாவது முறையாக எச்சரிககை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக கடலோர மாவட்டங்களில் பொலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இலங்கையிலிருந்து, தொலைபேசிமூலம் அச்சுறுத்தல்  விடுக்கப்பட்டுள்ளதாகவும், மிரட்டியவர் யார் என்பது தொடர்பில் இலங்கை தரப்பிடம் தமிழக பொலீசார் விசாரணை நடத்தவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுன்னாகம் மின் உப நிலையத்தை இயக்க நடவடிக்கை-

இரண்டு தசாப்தங்களின் பின்னர் மின்சக்தி கட்டமைப்பில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் சுன்னாகம் மின் உப நிலையம் விரைவில் இயங்கவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் சுன்னாகம் மின் உப நிலையத்தின் ஊடாக யாழ் குடாநாட்டிற்கு மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுன்னாகம் மின் உப நிலையத்திலிருந்து 63 மெகாவொட் மின்சாரம் யாழ் குடாநாட்டிற்கு விநியோகிக்கப்பட உள்ளதாகவும் இதன்மூலம் ஒரு இலட்சத்துக்கு 20ஆயிரம் வீடுகளில் வாழும் மக்கள் நன்மையடைவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுன்னாகம் கிரீட் மின் உப நிலையம் இயங்கும் பட்சத்தில் யாழ் குடாநாட்டின் மின்சக்தி தேவையை முழுமையாக நிறைவேற்ற முடியும் என மின் சக்தி எரிசக்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

பொதுநலவாய மாநாட்டுக்கான ஊடகவியலாளர்களை பதிவு செய்ய நடவடிக்கை-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சுமார் ஆயிரம் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வருகைதருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது இதற்கமைய மாநாட்டிற்கு வரும் ஊடகவியலாளர்களை பதிவுசெய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். றறற.உhழபஅ2013.டம என்ற இணையளத்திலுள்ள நடைமுறைகளுக்கமைய சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தற்போது ஊடகவியலாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சின் செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வலது குறைந்தோர் உறவினரின் உதவியுடன் வாக்களிக்க அனுமதி-

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வலது குறைந்த வாக்காளர்கள் தமது வாக்கினை பதிவு செய்வதற்காக உறவினர் ஒருவரது உதவியை பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் வாக்காளரின் உடல் நிலையை விளக்கும் மருத்துவ சான்றிதழ் ஒன்றை வாக்களிப்பு நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

 

உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி கொழும்பில்-

லோகோஸ் ஹோப் (லோகோஸ் நம்பிக்கை) என்ற பெயரிலான உலகிலுள்ள கப்பல் ஒன்றில் நடைபெறும் மிகப்பெரிய புத்தகக்கண்காட்சி கொழும்பு துறைமுகத்தில் இம்மாதம் 30ம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 22ம் திகதிவரை பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்காக நங்கூரமிடப்படவுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள புத்தகங்களை வாசிப்பதற்கும், பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதுடன் அக்கப்பலில் பணிபுரியும் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 பேருடன் நேரில் சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். விஞ்ஞானம், விளையாட்டு, பொழுதுபோக்கு, குடும்ப வாழ்க்கை, சிறுவர் புத்தகங்கள், கல்விமான்களுக்குரிய நூல்கள், அகராதிகள், உலகப் படங்கள் போன்றவை உட்பட பலதரப்பட்ட நூல்கள் இந்தக் கப்பலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சிக்கு செல்லும் பார்வையாளர்களுக்கு கப்பலில் உள்ள வசதிகள், நூல்கள் பற்றிய குறுந்திரைப்படம் முதலில் காண்பிக்கப்படும். இந்தக் கப்பலில் பார்வையாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிற்றுண்டிச் சாலையும் இருக்கும். கப்பலுக்குள் செல்வதற்கு பிரவேச கட்டணமாக 100 ரூபா. வயது வந்தவர்களுக்கும் 12 வயதிற்குட்பட்டவர் களுக்கும் இலவசமான அனுமதியும் கொடுக்கப்படவுள்ளது.

 

நீதித்துறை முக்கியஸ்தர்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு

இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இன்று பிரதம நீதியரசர், சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருக்கும் பிரதம நீதியரசருக்கும் இடையிலான சந்திப்பு உயர்நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ அறையில் நடைபெற்றுள்ளது. பின்னர் சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு சென்ற நவனீதம்பிள்ளை, சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோவுடன் கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருக்கும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பு இன்றுமுற்பகல் நீதி அமைச்சில் நடைபெற்றுள்ளது.

 

நவநீதம்பிள்ளையின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணா சக்தி அமைப்பு இன்றுகாலை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அரசாங்கப் பிரதிநிதிகளை சந்திககவுள்ளார். நாளை வடக்கிற்கான விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்திக்கவுள்ளார்.

 

தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைவு-

இலங்கை இராணுவத்தில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைந்துகொண்டுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள படைப்பிரிவில் இணைப்பதற்காகவே இவர்கள் தெரிவாகியுள்ளனர். அண்மையில் நாடு பூராகவும் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளில் தோற்றிய தமிழ் பெண்களில் 45பேர் தெரிவுசெய்யப்பட்ட நிலையிலேயே இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். வடக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த தமிழ் யுவதிகளுடன் 10 சிங்கள யுவதிகளும் இன்று இராணுவத்தில் இணைந்துள்ளனர். இவர்களை இராணுவத்தில் இணைப்பதற்காக வன்னி தலைமையகத்தில் சிறப்பு நிகழ்வொன்று இன்று இடம்பெற்றுள்ளது.  இந்நிகழ்வில் தமது பிள்ளைகளை இராணுவத்தில் இணைத்த பெற்றோர், கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

திருமலை சூடைக்குடாவில் மீள்குடியேற்றம்-

திருகோணமலை, மூதூர் கிழக்கு சூடைக்குடா கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த 56 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். குறித்த பிரதேச மக்கள் தமது சொந்த காணிகளை துப்பரவு செய்வதற்கான  அங்கீகாரத்தை மாவட்ட செயலாளர் மேஜனர் ஜெனரல் ரஞ்சித் சில்வா அனுமதி வழங்கியுள்ளார். கூனித்தீவு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வின்போது மூதூர் பிரதேச செயலர் பிரதீபன் முன்னிலையில் சூடைக்குடா பதில் கிராமசேவை உத்தியோகத்தர் க.செல்வnரெத்தினத்திடம் மாவட்ட செயலாளரின் கடிதம் வழங்கப்பட்டது. இதில் திருமலை மாவட்ட கட்டளைத் தளபதி பிரிகேடியர் விக்கிரமரத்தன, சம்பூர் கடற்படை முகாம் கட்டளை அதிகாரி கே.ஜி.போல் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். தமது சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக கிளிவெட்டி நலன்புரி  நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் இராணுவத்தினரால் பஸ்கள் மூலம் அழைத்துவரப்பட்டிருந்தனர். கூனித்தீவில்  இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள டைக்குடா கிராமத்திற்கு கால்நடையாக சென்ற இவர்கள் அங்குள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபட்டபின் தமது காணிகளை துப்பரவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.