யாழ். காணி சுவீகரிப்பு வழக்கு, பிரதிவாதிகளுக்கு அவகாசம்-

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் கையகப்படுத்துவதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிவாதிகள் தமது ஆட்சேபனையை முன்வைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 07ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கியுள்ளது. யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமரின் மகன், எஸ்.ஜே.சி கதிர்காமர் உள்ளிட்டவர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பொதுத் தேவைகளுக்கு எனத் தெரிவித்து, 6,831 ஏக்கர் காணியை அரசாங்கம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதால், அதனை தடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறு இந்த மனுவின் ஊடாக நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனுவின் பிரதிவாதிகளாக, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ஏ.சிவசாமி மற்றும் யாழ் காணி அகழ்வு உத்தியோகத்தர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். மனுவின் பிரதிவாதிகளால் இன்று ஆட்சேபனை தாக்கல் செய்யப்படவிருந்ததுடன், பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிஸ்டர் நாயகம் சவீந்ர பெர்னான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் கால அவகாசத்தினை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிவரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் அரச அதிபர்கள் நவநீதம்பிள்ளை சந்திப்பு-

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றுகாலை வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியை அவர் சந்தித்துள்ளார். இதன்போது யாழ். ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக காணாமற் போனவர்களின் உறவினர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். பின்னர் யாழ். பொது நூலகத்தில் வட மாகாண மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களையும் நவநீதம்பிள்ளை சந்தித்து பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக கேட்டறிந்துள்ளார். இந்த சந்திப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் பொது நூலகத்திற்கு வெளியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. காணாமற்போன தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரி காணாமற் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தினை நடத்தியிருந்தனர். காணாமற் போனோரை தேடிக் கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இந்திய மீனவப் படகுகளை அரசுடமையாக்க நடவடிக்கை-

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும், இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரிவுகளை கோரியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதனை தடுப்பதே இதன் முக்கிய நோக்கமென அவர் கூறியுள்ளார். இதற்கமைய, தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு சொந்தமான 12 படகுகளை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

முன்னாள் புலி உறுப்பினர்களை வவுனியா சிறைக்கு மாற்ற நடவடிக்கை-

போதைப்பொருள் பாவனையால் குற்றவாளியாகும் நபர்களை புனர்வாழ்வளிப்பதற்கு சேனபுரவில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பிவைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது சேனபுர புனர்வாழ்வு மையத்தில், முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலருக்கு புனர்வாழ்வளிக்கப்படுகின்றது. முன்னாள் புலி உறுப்பினர்களை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றிய பின்னர், போதைப்பொருள் பாவனையால் குற்றவாளியாகும் நபர்களை சேனபுரவிற்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார். இங்கு ஒரே சந்தர்ப்பத்தில் சுமார் ஆயிரம் பேரை புனர்வாழ்வளிப்பதற்கான வசதிகள் காணப்படுகின்றன. தற்போது போதைப்பொருள் பாவனையாளர்கள் 250 பேர் கந்தக்காடு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் காலங்களில் போதைப்பொருள் பாவனையாளர்களை சிறையில் அடைக்காது, புனர்வாழ்வளிக்க திட்டமிட்டுள்ளோம் என பீ.எஸ் பிதானகே மேலும் தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் சட்டங்களை மீறிய 192 சம்பவங்கள் பதிவு-

அரசியல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.  தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 192 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இவற்றில் அதிகமானவை அரச அதிகாரிகளுக்கு எதிராகவே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

ஒலுவில் துறைமுகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு-

அம்பாறை ஒலுவில் துறைமுகம் நிர்மாணிப்பிற்காக சுவீகரிக்கப்பட்டு நீண்டகாலமாக நஷ்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்படாதிருந்த காணி உரிமையாளர்களுக்கு எதிர்வரும் முதலாம் திகதி முற்கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறைமுக நிர்மாணிப்பிற்காக கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் கையேற்கப்பட்டுள்ள 49 காணிச் சொந்தக்காரர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டு வந்தது. இதனைக் கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமா லெப்பை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான கோரிக்கையை அமைச்சர் அதாவுல்லாவிடம் முன்வைத்திருந்தார். இக்கோரிக்கைக்கு அமைய துறைமுகங்கள் அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமையில் நேற்று ஒலுவில் துறைமுக மகாபொல பயிற்சி நிலையத்தில் காணிச் சொந்தக்காரர்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. இதற்கமைவாக நஷ்டஈட்டுக் கொடுப்பனவை சுமுகமாக வழங்குவதற்கு முன்னர் நிலஅளவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மதிப்பீட்டுத் தொகைக்கேற்ப ஒரு பேர்ச்சிற்கு 30 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிகுதிக் கொடுப்பனவு பின்னர் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை – பெலாரஸ் உடன்படிக்கைகள் கைசாத்து-

இலங்கைக்கும் பெலாரசுக்குமிடையில் ஏழு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நேற்று கைசாத்திடப்பட்டுள்ளன. தற்பொழுது பெலாரஸ் நாட்டில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாந்தர் லூக்கஸன் கோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விமான பயணச் சீட்டுடையவர்களை விசாக்களிலிருந்து விடுவித்தல், குற்றவியல் தொடர்பான விடயங்களின்போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பான சாசனம், சட்டம் தொடர்பான புரிந்துணர்வு, இரு நாடுகளுக்குமிடையிலான இரட்டை வரிவிதிப்பை தடுத்தல், சுற்றுலாத் துறையின் ஒத்துழைப்பு மற்றும் இராணுவ துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு என முதலான உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

 

மூதூர் கொலைகள் குறித்து சட்டமா அதிபரிடம் நவீப்பிள்ளை கேள்வி-

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மற்றும் மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டு பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சட்டமா அதிபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோவை நேற்று சந்தித்தபோதே மேற்கண்ட விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். அத்துடன், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரையும் நேற்று சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அதுமட்டுமன்றி தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவையும் நவீபிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சட்டமா அதிபருடனான சந்திப்பின் போது இந்த இரண்டு கொலைச்சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அவர் விசாரித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி கொல்லப்பட்ட தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் 5 மாணவர்களின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடர்பில் அவர் கேட்டபோது, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டதாக சட்டமா அதிபர் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2006ஆம் ஆண்டு திருமலையில் 5 மாணவர்களை சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 12பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அந்த 12 பேரையும்  குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். பட்டினிக்கு எதிரான நடவடிக்கை எனும் பிரெஞ்சு நிறுவனத்தை சேர்ந்த 17 தொண்டு சேவையாளர்கள் கொலை தொடர்பான விசாரணைகள் இன்னும் நடைபெறுகிறது என சட்டமா அதிபர் எடுத்துரைத்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்பு சபையும், மனித உரிமைகள் கண்காணிப்பகமும் அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்-

வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளார் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்காளார் அட்டைகள் நாளைமுதல் குறித்த மாகாண வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார். தபால் திணைக்களத்தினால் வாக்காளர் அட்டைகள் பகிர்ந்தளித்தல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. அதேவேளை செப்டெம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளார் அட்டை பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை நிறைவுசெய்ய தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட வாக்காளர் அட்டை பகிர்ந்தளிப்பு நாளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தமது பிரதேச தபால் திணைக்களத்தில் வாக்காளர் அட்டைகளை பெறமுடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தென் கொரிய பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

தென்கொரிய பிரதமர் சன்ங் ஹொன்ங் வொன், இருநாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாளை தினம் இலங்கை வருகிறார். 1977ம் ஆண்டுக்கு பின்னர் தென்கொரிய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விஜயத்தின்போது தென்கொரிய பிரதமர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசியல் உயர் அதிகாரிகள் பலரையும் கண்டு கலந்துரையாடலில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவினை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்று பயணத்தின்போது தென்கொரிய பிரதமர் இலங்கை – கொரிய சுற்றுச்சூழல் அழகுபடுத்தல் தொடர்பான நிகழ்வின் ஓர் பகுதியில் கலந்துகொள்ள உள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தையும் பார்வையிடவுள்ளார்.