தேர்தல்கள் தொடர்பில் முறைப்பாடு-

தேர்தல்கள் தொடர்பில் உள்ளுராட்சி சபை அமைச்சின் செயலாளரிடம் பெப்ரல் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் தேர்தல்களுக்காக பயன்படுத்தப்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஆராயுமாரே தாம் உள்ளுராட்சி மன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டத்திட்டங்களை மீறிய 210 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலக முறைப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, குருநாகல் மாவட்டத்தில் 43 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது தவிர, மத்திய மாகாணத்தில் 101 முறைப்பாடுகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாhக தேர்தல்கள் செயலக முறைப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி நாடு திரும்பினார்-

தமது அரசியல் வாழ்க்கை மற்றும் நாடாளுமன்றத்துக்கு இடையே நெருக்கமான உறவு காணப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெலரூஸ் ராஜ்ஜியத்தின் தேசிய சபை பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே. இரண்டாம் உலக யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களுக்காக மின்ஸ்க் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெலரூஸிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம்

. தாம் இலங்கை வந்திருப்பது, நாட்டின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மாத்திரமே என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நவநீதம்பிள்ளை நேற்று வடக்கு பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அவர் யாழ் அரச அதிபர், வட மாகாண ஆளுனர் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்;. வட மாகாண ஆளுநருடனான சந்திப்பின்பின் நவநீதம்பிள்ளை, யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்;. பின் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கும் விஜயம் செய்தார். யாழ் மாவட்டத்தில் உள்ள குடியியல் சமூகம், பிரதேசவாசிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் கிளிநொச்சியில் உள்ள தேசிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் சென்றார். இதனை தொடர்ந்து நவநீதம்பிள்ளை, இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்கால், நந்திக்கடல் போன்ற பிரதேசங்களுக்குச் சென்றதுடன், பொதுமக்களுடனும் கலந்துரையாடியுள்ளார். இதன்போது காணாமல்போன தமது பிள்ளைகள், உறவினர்களை கண்டறிந்து தருமாறு பொதுமக்களால் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் கேப்பாப்பிளவு, மாவடிகிராமம், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களுக்கு சென்ற அவர், அந்த பிரதேச பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அவற்றை நிவர்த்தி செய்ய தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அஞ்சல் நடவடிக்கைகளை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டாம்-

தேர்தல் ஆணையாளர்-  மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தபோது காணப்பட்ட சுதந்திர அஞ்சல் வசதிகளை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் அஞ்சல் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய இது தொடர்பாக அஞ்சல் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல்களின் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், தாம் மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தபோது வழங்கப்பட்டிருந்த சுதந்திர அஞ்சலை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தநிலையில், அவ்வாறான வேட்பாளர்களது கடிதங்களை அஞ்சலகங்களில் ஏற்கக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.