ஐ.நா அலுவலகத்திற்கு கடும் பாதுகாப்பு-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைத் தலைமைக் காரியாலத்திற்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதன்பிள்ளை, இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் முன்னர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளார். இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது. நவநீதன்பிள்ளையின் வாகனத் தொடரணியை வழி மறித்து மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக சில பௌத்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி-
நீண்டகால அபிவிருத்திகளின் ஊடாக நிலையான மீளமைப்பை ஏற்படுத்த முனையும் இலங்கையின் முயற்சிகளை வரவேற்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீன்பிடி சமூகத்தின் மீளமைப்பு மற்றும் உட்கட்டுமான வசதிகளுக்காக ஜப்பான் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக ஜப்பான் 37 மில்லியன் ரூபாய்களை வழங்கிவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதியின் மூலம், முல்லைத்தீவில் புதிதாக குடியேற்றப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார தேவைகள், குளங்களை மறுசீரமைத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்-நவநீதம்பிள்ளை-
இறுதி யுத்தம் தொடர்பில், இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன்பிள்ளை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை வந்திருந்த நவநீதன்பிள்ளை இன்று இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார். இதனையொட்டி கொழும்பில் உள்ள ஐ.நா காரியாலயத்தில் அவரது ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதில் உரையாற்றிய நவநீதன்பிள்ளை, இலங்கையின் இறுதி யுத்தம் சம்பந்தமாக உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளார். அத்துடன் புலிகள் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இன்றைய தினமும் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக நவிபிள்ளையின் அறிக்கை பக்கச்சார்பின்றி இருக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைகள் நிறுத்தம்-
வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்றுமுதல் பொதுமக்கள் மீதான சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். வவுனியா ஓமந்தை இராணுவ முகாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களின் பதிவு மட்டும் இடம்பெறும். போக்குவரத்து பயணிகளை வாகனங்களில் இருந்து இறக்கி சோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறாது. வடக்கில் இருந்து தெற்குக்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் கொண்டு செல்லப்படும் பொருட்களும் சோதனை நடவடிக்கைகளுக்காக இறக்கி ஏற்றப்படாது. இதேவேளை சோதனைச் சாவடியானது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் உறுதுணையாக காணப்பட்டது. இதனூடாக தினமும் சராசரியாக 320 பேரூந்துகளும் 575 பார ஊர்திகளும் 630 சிறிய ரக வாகனங்களும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்று வந்தன. தினமும் சராசரியாக 15,377 உள்ளுர் பயணிகளும் 198 வெளிநாட:டு பயணிகளும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சொன்றுவநதனர். வடக்கில் இருந்து தெற்கிற்கு 254 பேரூந்துகளும் 710 பார ஊர்திகளும் 773 சிறிய ரக வாகனங்களும் வடக்கில் இருந்து தெற்கிற்கு சென்று வந்தன. தினமும் சராசரியாக 17,164 உள்ளுர் பயணிகளும் 111 வெளிநாட்டு பயணிகளும் தெற்கிற்கு செல்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பு மீது நம்பிக்கை உள்ளது-அமைச்சர் டியூ.குணசேகர-
வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக செயற்படுவார்கள் என சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட வலுவான வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் களமிறக்கியுள்ளது. கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டி, மாகாணசபை ஆட்சியை நடத்தினால் ஏனைய மாகாணங்களிலும் முன்னுதாரணமாக திகழும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் பிரிவினைவாதக் கொள்கைகளை கைவிட்டு ஜனநாயக கொள்கைகளில் கூடுதல் ஆர்வம் காட்டும். பணத்திற்காக ஆசைப்பட்டு பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். புத்திசாதூரியமானவர்கள் அரசியலை விட்டு விலகியிருக்கின்றனர் என சிரேஸ்ட அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணை அவசியம்-
ஐரோப்பிய ஒன்றியம்- காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளிப்படையானதும் நம்பகமானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயிருந்தனர். 1970 மற்றும் 1980களில் தெற்கில் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் போதும் பெருமளவிலானவர்கள் காணாமல் போயுள்ளனர் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகளை நடாத்துவதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவுள்ளது. கடந்த கால காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துதல் எதிர்காலத்தில் இவ்வாறான காணாமல் போதல் சம்பவங்களை தடுத்தல் ஆகியன மிகவும் அவசியமானது என ஐரோப்பிய ஒன்றியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு குறித்த நவிப்பிள்ளையின் கோரிக்கை நிராகரிப்பு-
நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், வடக்கில் இராணுவத்தை திரும்பப் பெறுதல், 800 அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காவற்துறையை நீதியமைச்சின்கீழ் கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகளையே அரசாங்கம் நிராகரித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. பல அரசசார்பற்ற நிறுவனங்களின் தேவைகளுக்கு அமைய அவர் இக் கோரிக்கையை முன்வைத்ததாக தெரியவந்துள்ளதாகவும் ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது,